திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண்ணின் மனஓட்டம் பற்றி வெண்முரசின் அன்னை விழி அத்தியாயங்கள் பேசுகின்றன. பெண்ணிற்கு ஏற்படும் ஒரு சிக்கல்,
தன்னுடைய மணவாழ்விற்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டியது தான் மோகிக்கும் ஒருவனா அல்லது தன்னை மோகிக்கும் ஒருவனா என முடிவெடுப்பது. ஆணுக்கு இப்படி ஒரு நிலை வரும்போது தான் மோகிக்கும் பெண்ணை தேர்வு செய்கிறான். அதாவது அவனுக்கு அந்த பெண் பிடித்திருந்தால் போதும். ஒரு பெண் தன்னை விரும்ம்புகிறாளா என அறிய விழைவதில்லை. எப்படியும் அவளுக்கு வேறு வழியில்லை என்ற ஆணிய எண்ணம் கொண்டிருப்பான்.
ஆனால் பெண் தன்னை நன்றாக வைத்து காப்பாற்ற ஒரு ஆண் வேண்டும் என நினைப்பவள். அதனால் ஒரு பெண்ணிற்கு ஆண் தன்னை விரும்ப வேண்டும் என்பது ஒருவகையில் கட்டாயம். அப்போதுதான் அவன் பிற்காலத்தில் வேறு பெண்களிடம் நாட்டமுற்று தேடிச்செல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். திரௌபதி சாதாரண பெண்ணாய் இருந்திருந்தால் தன்னை மோகிக்கும் பார்த்தனை இயல்பாக தேர்ந்தெடுத்திருப்பாள். திரௌபதியின் ஆளுமை மிகப்பெரிது. அவள் தன்னை வெறும் பெண்ணாக கருதுபவள் இல்லை. அவள் பேரரசியாகவேபிறந்து வளர்ந்தவள். அதனால் அவள் தன் துணையை தேடுவதில் அவன் தன்னை கவர்ந்தவனாகவும் இருக்க விழைகிறாள்.
அவள் அந்த ஒருவனை கர்ணனில் பார்த்தனில் தருமனில் பீமனில் தேடுகிறாள். அந்த ஒருவன், அந்த நால்வரையும் ஒன்று சேர்த்தால் ஒருவேளை முழுமையடையலாம். இதில் யாராவது ஒருவன் மட்டுமே என்றால் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என அவளுக்கு தெரிகிறது. எப்போதும் தெளிவான உறுதியான முடிவெடுக்கும் திரௌபதி தன்னுடைய துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் முடிவெடுக்கமுடியாமல் கலங்கி அழுகிறாள்
தண்டபாணி துரைவேல்