Sunday, January 4, 2015

சிறுமைகடந்தவர்கள்



அன்பின் ஜெ,

''அரசமரத்தின் வேருக்குள் ஒரு துளையில் இருந்த வண்டு என் தசையை கொட்டித் துளைக்கத் தொடங்கியது. அதன் இல்லத்தின் வாயிலை என் தசை முழுமையாகவே மூடியிருந்தது போலும்.'' 

ஒருவண்டின் செயலுக்கு கூட சரியான காரணத்தை சொல்ல உங்களாலே முடியும். வலியையும் பேரானந்தமாக உணரவைக்க முடியும். 

''வண்டு தன் சிறகுகளால் குடைந்துகொண்டு தசைக்கதுப்புக்குள் மெல்லப்புரண்டபோது என் வாழ்நாளில் அதுவரை அறியாத உடலின்பம் ஒன்றை அடைந்தேன். காமத்தை விட ஆயிரம் மடங்கு பெரியது. இறப்புக்கு நிகரானது'' என்ன ஒரு உவமை எனக்கு சரியாக சொல்ல வரவில்லை. வெண்முரசின் மற்றொரு உச்சம் இது .ஒவ்வொருவரையும் கற்பனையில் உணரசேய்துவிடுகிறது இவ்வரி. 

கடந்த ஒரு வருட வெண்முரசை வாசித்ததை அசைபோடுகையில் ஒரு விஷயத்தை உணர்ந்து திகைந்து நின்றேன். எந்த ஒரு கதாபாத்திரமும் சிறுமை கொண்டதாக இல்லை. எத்தனை நூறு பேர் வந்தாகிவிட்டது....ஒருவர் கூட ஏன் பாம்பும் , விலங்குகளும், பறவைகளும் கூட , ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கு அவர்கள் நம்பும் தார்மீகமான பக்கம் காட்டப்பட்டு உள்ளது. அரக்கி எனப்பட்ட பூதனை வலுவான பின்புலத்துடன் தேவதையாக உணரப்பட்டால். இங்கு மாயத்திற்கு இடமில்லாமல் ஆனது, பகன் சிறந்த உதாரணம். ''சிறுமையே இல்லா பெருவாழ்வு''  இதை சொல்ல சொல்ல உள்ளம் பெரும்கிளர்ச்சி கொள்கிறது. இது எனக்கு கிடைத்த உங்கள் புத்தாண்டு வாழ்த்து, ஆசி.

விஜய் சூரியன்


அன்புள்ள விஜய்

சிறுமையில்லாமல் ஒரு கதாபாத்திரத்தைக் காட்ட அவரை மானுடவாழ்க்கையின் முழுமையில் வைத்துப்பார்த்தால் போதும். மானுட வாழ்க்கையின் முழுமையில் அவரை பொருத்த ஒரு நிலக்காட்சியில் வைத்தால் போதும்

ஜெ