கர்ணன் தெய்வங்களே என்று கூறி தளர்ந்த பின் வரும் வெம்மை மீண்டும் அந்த குல முத்திரை பார்வையை வெல்லும் கோபம்? உதறிய தொடுகையை எரித்து விழுங்கும் வேக வெறி? இன்று பார்த்தனுக்கு வந்தது வேறு சினம். சினமெனும் விஷம் தரும் துளி துளி அமிர்தம். திரும்பி விடு என்று ஒரு பகுதி சொல் கேட்டு உடல் திகைத்து பிரிந்து நிற்க, மறு பகுதி தழல் கொண்டு ஆடும் காட்டு நெருப்பின் சினம். கிருஷ்ணனை சார்ந்து அடையாளபடுத்தி கொள்ள கண் விரிக்கும் ஓர் பகுதி மனதை கொல்ல துடிக்கும் மறு பகுதியின் கோபம். அவளின் விழி வழி சாயும் ஓர் பகுதி கண்டு சீறும் மறு பகுதியின் சினம்.
இருவருக்கும் ஐந்தில் வருகிறது ஒரு சலன தொடுகை. சூர்ய புத்திரனுக்கு ஊழ் சாபமாக விலகி செல்லும் அம்பு, இந்திர மைந்தனின் சினத்தின் தவம் கண்டு கொண்டு சேர்த்தது கேசனியின் இறப்பை. இரண்டும் மூர்க்க காட்டாறு. கர்ணன் தன்னை முன்னே செலுத்த நிற்கையில் எப்போதும் போல விலக்கி வைக்கும் விதியின் ஒரு நுனிதுளி பற்றி எப்படி சொல்ல? வெற்றி என்பது ஏற்று கொள்ளும் தரப்பு மட்டுமே என்று பார்க்கையில் ஜராசந்தன் மனியாரம் மூலம் முதலில் வென்றவன் கவச மார்பினன் தான்.
கொக்கு காத்து இருந்து மீன் குத்தும் தருணம் என காலம் பார்த்து களம் இறங்கி வெல்லுதல் வெற்றியின் அத்யாவசிய பாடம். துடித்து குதிக்கமால் காலத்தின் கொடி அசைவிற்கு புலன் ஒடுங்கி காத்திருப்பது தெரிந்தது. Tactical என்றும் சொல்லிகொள்ளலாம் - கடைசியாக இறங்கி அடித்த துருபதனின் போர் போல... முதல் தடம் போட்டவன் கால்களுக்கு மட்டும் சொந்தம் முட்களின் கீறல்கள். பின் வருபவனுக்கு முட்களின் பதிவுகள் அல்லது பாதையின் தெளிவுகள் பழகி இருக்கும். சொல்லி கொடுக்கவும் புரிந்து கொள்ளவும் கண்களுக்கு தெரியாதா??
ஆனால் அந்த கரிய மேய்ப்பனின் ஆதுரப்புன்னகை பேரழகு. விதுரர்க்கு தோன்றி மின்னிய புன்னகை. கர்ணனுக்கு தெரிந்த கிணற்றாழ புன்னகை. எல்லாம் முடித்த அர்ஜுனனுக்கு விரிந்த அந்த பொன் சிரி புன்னகை. உன்னை தெரியும் எனும்படியாக ....என்னை புரியாது யார்க்கும் தெரியாது எனும் படியாக....கடவுள் புன்னகைகளில் வளர்கிறார் போல. சொற்களில் கிருஷ்ணனை தொட்டு மீண்டேன்
அன்புடன்,
லிங்கராஜ்