நிமித்திகர்கள் பற்றி. முக்கியமான தருணங்களில் நிமித்திகரை அழைத்து ஆருடம் கேட்கிறார்கள். இதில் ஒன்றும் தப்பில்லை. இன்றுவரை கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்ட மக்கள் வரை அனைவரும் தொடர்ந்து செய்து வருவதுதான். ஆனால் என் குழப்பம், நிமித்திகர்கள் கூறுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. அதுவும் பொத்தம் பொதுவாக இல்லை. சில இடங்களில் தனித்துவமான விஷயங்கள் கூட அவர்களுக்கு தெரிந்துள்ளது.
இதை ஒரு அறிவியல் சார்ந்த கணக்கு என்று சிலர் சொல்வதை ஏற்க முடியவில்லை. சில ஞானிகள் கணிக்கிறார்கள் அதை அவர்கள் பெற்ற சிறப்பான நுண்ணறிவு என ஏற்றுக்கொள்ளலாம். ஒரு குறிபிட்ட குலத்தில் பிறந்து அதனால் ஒரு தொழிலை செய்யும் நிமித்திகர்களுக்கு இது எவ்வாறு சாத்தியம்? நீங்கள் கூறுவதால், இதை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. வாழ்கையை பற்றிய என் புரிதலையே இது புரட்டி போடுகிறது.
வி எஸ் செந்தில்குமார்
அன்புள்ள செந்தில்
மகாபாரதத்தில் நிமித்திகர்கள் பல குறிகளைக் கொண்டு கணித்து நிகழப்போவதைச் சொல்கிறார்கள். மிகவும் சரியாகச் சொல்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பது எனக்கும் புரியவில்லை
ஆனால் இது ஒரு புனைவு உத்தியாக பல இடங்களில் கைகொடுக்கிறது. காலத்தைக் கடந்து சென்று சிலவிஷயங்க்ளைச் சொல்லவும் குறிப்புணர்த்தவும் முடிகிறது. ஆகவே மகாபாரதத்தில் வரும் பிற மாயங்களைப்போலவே இதையும் ஓர் எல்லைக்குள் பயன்படுத்திக்கொள்கிறேன்
உதாரணமாக பாஞ்சாலி பாரதத்தை முழுக்க ஆளும் சக்கரவர்த்தினியாக ஆவாள் என்பது அவள் உடல் முத்திரைகளைக்கொண்டு சொல்லப்படுகிறது. ஆனால் அவள் யாரை மணம் செய்துகொள்வாள், பாரதப்போர் நிகழ்வது போன்றவை முன்னரே ஊகிக்கப்படவே இல்லை
இந்த அளவுக்குள் நிமித்திகத்தொழில் சாத்தியமாகி இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். என் அனுபவனத்தையே சொல்கிறேனே. எனக்கு 3 வயதில் விரிவாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் நான் கல்வியை அடிப்படையாகக் கொண்ட தொழில் செய்து புகழ்பெறுவேன் என எழுதி அளிக்கப்பட்டிருந்தது. நானே இளமையில் அதை வாசித்திருக்கிறேன். [அல்லது அதை வாசித்ததனால் இலக்கியத்திற்கு வந்திருக்கலாம், யார்கண்டது?]
ஜெ