அன்புள்ள திரு.ஜெ
வணக்கம்.
பழையசோற்றில் தயிர்
ஊத்தி அம்மா பிசைந்து வைத்தால் அது அமுதம்.
அந்த அமுதத்திற்காகவே
இட்லி, தோசையை நிறுத்திவிட்டு பழையது உண்பது உண்டு.
“சோறு
மீந்துவிட்டால் அன்றைக்கு இட்லி, தோசை கேளுங்க, என்னைக்கு சோறு
மீறவில்லையோ அன்னைக்கு பழையது கேட்டு அடம்புடிங்க” அம்மாவால்தான்
அனைத்துக்கும் தயாராக இருக்க முடிகின்றது.
அன்று அம்மா சோற்றை
பிழிந்துபோட்டு, தயிரை ஊற்றி வைத்து, உப்புப்போட்டு பிழைந்து சாப்பிடு என்று சொல்லிவிட்டு
வீட்டுவேலையைப்பார்க்க சென்றுவிட்டார்கள். நான் உப்புப்போட்டு பிழைந்து சாப்பிடுகின்றேன்.
அந்த சுவை..அம்மாவின் கைசுவை இல்லை. ஒவ்வொரு உருண்டையா உள்ளப்போகும் போதும் அடுத்த
உருண்டையில் அந்த சுவை வந்துவிடும் என்று நம்பிக்கொண்டே சாப்பிட்டேன்.
அம்மா வந்த உடன்
“அம்மா! இன்னைக்கு சாப்பாட்டுல டேஸ்டே இல்ல, போதும் சாப்பாடு” என்று சொல்லிவிட்டு சாப்பாட்டை தள்ளிவைத்தேன்.
“இருடா, நல்லாதானே இருக்குது, ஏன் டேஸ்டுல்ல” அம்மா சொல்லிக்கொண்டே சாப்பாட்டை வாயில் அள்ளிப்போட்டு “அரை உப்புல
சாப்பிடுற, எப்புடிடா டேஸ்டு வரும், இன்னும் குழந்தையாடா நீ?” என்று சொல்லிவிட்டு உப்புப்போட்டு
பிசைந்து வைத்தார்கள். பாத்திரம் தேய்ந்தப்பின்புதான் எழுந்தேன்.
”என்னதான் சரியாக
உப்புப்போட்டு பிழைந்து சாப்பிட்டாலும் நீ பிழைந்து தருவதுபோல் டேஸ்ட் இல்லம்மா”
“ஆத்தாலுக்கு உதவி
செய்யாதிங்க, ஆத்தாகிட்ட எப்படி எல்லாம் வேலை வாங்கலாமுன்னே யோசிங்க” என்று தொடங்கும்
விமர்சனம் அப்பாவின் மேல் பட்டு செல்லக்கோபமாய் பூச்சிந்தும் தருணத்திற்குள் ஓடிவிடவேண்டும்.
இன்று கம்பெனி
மெஸ்ஸில் குழம்பில் உப்பு அதிகமாக இருக்குமோ என்று நாக்கை அதற்கு தயார் செய்துக்கொண்டு
சாப்பாட்டை அள்ளிவைத்தால் உப்பே இருக்காது, இன்று உப்பு இருக்காது என்று நினைத்து அதற்கும்
நாக்கை சமன்செய்க்கொண்டு சாப்பாட்டை அள்ளிவைத்தால் குடலை பிடிங்கிப்போட்டுவிடும் அளவுக்கு
உப்புப்போட்டு இருப்பான். ஏன்டா இப்புடி? ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் அம்மா அருகில் வந்து
வந்து தலைதடவிப்செல்வார்.
சமையல்காரை நேராகக்கேட்காமல்,
சமையல் உதவியாளரை அழைத்து ஏன் இப்படி என்று கேட்டேன்.
“என்னங்க பண்றது,
எப்பவும் தம்பாக்கு போடுறான். நாக்கு தடித்துப்போச்சி, எப்படி ருசிப்பார்க்கறது. அதான்
இப்புடி?”
ஒரு நாளைக்கு அளவாக
போட்டு அதையே மெயின்டையின் பண்ணவேண்டியதுதானே?-நான்.
நேற்று இரண்டுபேருக்கு
அதிகமாக சமைக்க வேண்டி இருந்தது. இன்னைக்கு மூன்றுபேருக்கு குறைவாக சமைக்கிறோம்,
நித்தம் மென்பவர் மாறுதுல்ல” என்றார்.
தம்பாக்கு போடுறது
புற்று நோயை உண்டாக்கும் என்றும் தெரியும், சமையல்காரன் தம்பாக்கு போட்டா சாப்பிடுகிறவர்களின்
நாக்கை நோகவைக்கும் என்று இப்ப தெரிந்துக்கொண்டேன்.
//அத்தனைபேரும் பாக்கு மென்று நாக்கு தடித்தவர்கள். வானமுதை அள்ளி வைத்தாலும் உப்பில்லை புளியில்லை என்றுதான் சொல்வார்கள்//
ஒவ்வொரு முறை சாப்பிட்டு எழும்போதும் “இன்னும் நீ குழந்தையாடா?” அம்மாவின்
குரல் ஒலிக்கிறது. எத்தனை வயதானால் என்ன அம்மாவிற்கு குழந்தைதானே!
சரிவிகிதத்தில் சாப்பாட்டில் கலக்கும் உப்பும், புளியும்தான் சாப்பாட்டை அமுதமாக்கி செல்கிறது. நன்றி ஜெ, வானமுதை அள்ளிவைத்தாலும் என்ற சொல் நெஞ்சை அள்ளுகின்றது.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.