அன்புள்ள ஜெ,
இந்திர நீலத்தில் நீங்கள் மீண்டும் உச்சத்தில்
வெளிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். காண்டவம் வரை வெண்முரசு வரிசையில் வந்த
எல்லா நாவல்களிலும் வந்த உத்தி சூதர் பாடல்கள். சூதர்களை பாரதத்தின்
தொன்மங்களை கதையோடு கதையோடு இணைக்கும் ஒரு உத்தியாகவே பயன்படுத்தி
வந்தீர்கள். ஒரு எல்லையில் அந்த உத்தி கொஞ்சம் திகட்டத் தொடங்கிய பொழுதில்
வேறு வகை உத்தி பயன்படுத்தப் படுமா என்று எனக்குள்ளேயே யோசித்துக்
கொண்டிருந்தேன். அப்போது தான் பாமா கிருஷ்ணனுக்கு அமுது கொண்டு செல்லும்
பகுதி வந்தது.
ஏழு அடியிலும் ஒவ்வோர் கன்னியரும்
வந்து அவளை அவனுக்கு என்றும் அளிக்கும் ஓர் அன்னையாக, அவளின்
புரத்தலுக்குரியவனாக அவனை அவளுக்குள் விதைத்து சென்ற அந்த பகுதி அபாரம்.
மீண்டும் அதே உத்தி வாயிலாக சிசுபாலனின் தொன்மக் கதையையும் கொண்டு வந்து
சேர்த்த விதம் பிரம்மிப்பூட்டியது. பிரசேனர் சிம்மத்தினால் கிழித்து உண்ணப்
படும் அந்த காட்சியும், அதன் விவரணங்களும் இன்னும் என் கண் முன்
நிற்கின்றன.
இந்திர நீலத்தில் முற்றிலும்
புதிதாக வெளிப்படுகிறீர்கள் ஜெ. ஒரு வாசகனாக மிக மிக மகிழ்கிறேன். மீண்டும்
வாழ்வை இனியதாக எப்படிக் காண வேண்டும் என்று சொல்லாமல் சொல்லித்
தருகிறீர்கள். நியாயமாகப் பார்த்தால் காண்டவம் பாதியில் நின்றமைக்கு பெரும்
அகச் சோர்வும், அதனால் விளையும் செயலின்மையும், அதன் தொடர்ச்சியான
எரிச்சலும் அலைகழித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அச்சோர்வை அதை விட
மேலான செயலூக்கம் கொண்டு தாண்டி வந்திருக்கிறீர்கள். இது எங்களுக்கெல்லாம்
ஒரு பாடம். கண் முன் நடத்திக் காட்டியிருக்கிறீர்கள். மீண்டும் நன்றி ஜெ.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்