Monday, June 8, 2015

வெண்முரசும் வாழ்வும்

அன்புள்ள ஜெ,

ஒரு வாசகனாக நான் உங்களை மிகவும் மதிக்கவும், நேசிக்கவும் செய்வது என்பது இயல்பான ஒன்றே. ஆனால் ஓர் எழுத்தாளனாக உங்கள் மனதில் என்னைப் போன்றவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் இடம் என்னை மிகவும் சிறப்பானவனாக உணரச் செய்கிறது. முழுக்க முழுக்க ஒரு அந்தரங்கமான உணர்வு. யாரிடமும் சொல்லவும் இயலவில்லை. (சொன்னால் புரிந்து கொள்ளவும் போவதில்லை.) 

வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் வெண்முரசின் ஏதோ ஒரு நிகழ்வோடு என்னால் இணைத்துக் கொள்ள முடிகிறது. சமீபத்தில் ஏஜியன் கடலில் ஒரு ஐந்து மணி நேர படகு பிரயாணம். நல்ல வலுவான கடல் காற்று அடித்துக் கொண்டிருக்கும் போது, விரிக்கப்பட்ட பாய்மரத்தின் கீழ், படகின் அமர முனையில் நின்று கொண்டிருந்தேன். சட்டென்று அமர முனையில் எதையும் பிடிக்காமல் நின்று கொண்டிருக்கும் துரியோதனன் நினைவுக்கு வந்தான். புன்னகைத்துக் கொண்டேன்!!!

உங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்பது ஒரு மானசீகமான உறவு. என்னால் அதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. பலரை வாசித்திருந்தாலும், வெண்முரசு உங்களை எப்போதும் என் அருகிலேயே இருத்தி வைத்திருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும், எனக்கு தெரிந்தும், நான் அறியா நனவிலியிலிருந்தும் உங்களுடன் உரையாடிக் கொண்டு தான் இருக்கிறேன். ஏதோ ஒரு வகையில், ஒவ்வொரு இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். பல சமயங்களில் வழிகாட்டல்களைக் கூடப் பெற்றிருக்கிறேன். பெரும்பாலும் வெண்முரசு வழியாக என்பதைச் சொல்லத்தேவையில்லை... இதை வெளியில் சொன்னால் மனப்பிறழ்வு என்று விடுவார்கள்!!! 

சரியாகத் தான் சொல்கிறேனா என்று கூடத் தெரியவில்லை. இருந்தாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. எழுதி விட்டேன். அதனால் தான் நண்பர் சந்திரசேகர் உடலுடன் சென்ற பிரயாகை நாவலை, அது நீங்கள் தான் என்று எழுதியதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.