பெண்கள் கண்ணுக்கு அழகாக தெரிவது மிகச்சிறுவதிலேயே ஆணுக்கு ஆரம்பிக்கிறது. இருந்தாலும் பெண்ணழகை முழுமையாக கண்டுகொள்ளும் தருணம் எப்போது என யோசிக்கிறேன்.
பதினபருவத்தில் ஒரு ஆணுக்கு பெண்ணைப்பற்றிய விழிப்பு அவனுடைய பருவ வளர்ச்சியால் வருவது. தன்னுடைய உடலாலேயே அவன் பெண்ணை உணர முயல்கிறான். அப்போது பெண் என்ற சொல்லே அவனை கிளர்ச்சியடையச்செய்கிறது. அவ்வயதில் ஒரு பெண்ணில் அழகைவிட வெறும் பெண்மையையே காண்கிறான். அப்போது அவன் காமம் உடலில் வயிற்றுக்கும் கீழே இருப்பதாக நினக்கிறேன்.
பின்னர்தான் பெண்களை காண ஆரம்பிக்கிறோம். அப்போது அவன் கவனம் செல்வது ஒரு பெண்ணை பெண்ணாக பிரித்து காட்டும் அவயங்களைத்தான். அந்த வயதில் அவ்வாறு பெண்ணைப் பார்க்கும் போது வயிற்றில் சட்டென்றூ ஒரு வெற்றிடம் ஏற்படும். அப்போது காமத்தை வயிற்றில் உணர்வேன்.
பின்னர் பெண்ணை காதலிக்கும் வயது. அப்போது பெண் தான் காதலிப்பதாலேயே அழகாக தெரிவாள். காதலியை நம் மனதில் நிறைத்திருப்போம். காமம் அப்போது என் நெஞ்சில் காதலாக நிறைந்திருக்கும்.
பின்னர் பெண்ணை மணந்து நாம் உடாலால் அறியும் காமம். என் முழு உடலே ஒரு நாக்காக மாறி பெண்மையை சுவைக்கும் காமம்.
பிறகுதான் பெண்களின் அழகை உண்மையாக கவனிக்க ஆரம்பிப்போம். இந்திரநீலத்தில் இன்றைய அத்தியாயத்தில் பெண்களின் அழகு கூறப்படுவது நான் என் கண்களால் அறியும் காமம். ஜெயமோகன் சொன்னதை தவிர்த்து சொல்வதற்கு வேறெதுவும் இல்லை. துளிதுளியாக பெண்ணழகு கண்களால் அருந்தப்படுகிறது. இவ்வாறு காமம் கீழிருந்து மேலெழும்பி கண்களில் உன்னதமடைகிறது. இதை மீண்டும் கீழிறக்கிக்கொள்ளாதவன் காமத்தை உணமையில் அறிகிறான். உண்மையில் அனுபவிக்கிறான். இது சுவைத்து முடிந்துதுவிடக்கூடிய உணர்வல்ல. அதை நமக்கு உணர்த்தும் அருமையான அத்தியாயம்.
த.துரைவேல்