அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள்
முன்னொரு கட்டுரையில் வர்ணணைகள் குறித்து எழுதும்போது, அ.முத்துலிங்கம்
அவருக்கே உரித்தான வகையில் 'அவள் விரல்கள் பல்லிக்குஞ்சுபோல்' இருந்ததாக
வர்ணித்திருந்ததைச் சுட்டிக்காட்டி அதுவே உயிர்ப்புடன்கூடிய வர்ணணை என்றும்
சம்பிரதாயமாகக் காந்தள் மலருடன் ஒப்பிட்டு எழுதுவதால் வாசிப்பவர்க்கு என்ன
கற்பனை கிளர்ந்துவிடும் என்றும் எழுதியிருந்ததாக ஞாபகம்.
இன்றைய
இந்திரநீலத்தில் காந்தளும் கருங்குவளையும் வர்ணணைகளில்
விளையாடியிருக்கின்றன. அதைப்பாராட்டியும், மேலும் இப்படியான வர்ணணைகளைப்
புரிந்துகொள்ளவே தனி ரசனை வேண்டும் என்றும் வாசகர் கடிதங்கள் வந்துள்ளன.
இதை எப்படிப் புரிந்துகொள்வது?
வீம்புக்குக் கேட்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
சிவானந்தம் நீலகண்டன்
சிங்கப்பூர்
அன்புள்ள சிவானந்தம்
உங்கள் கேள்வி புரிகிறது
ஒரு
நவீனபடைப்பில் மரபான, சம்பிரதாயமான ‘அணிகள்’ வரமுடியாது என்பதே நான்
சொன்னதற்குப்பொருள். மலர்முகம், மதிமுகம், காந்தள் விரல் போன்ற
சொல்லாட்சிகள் மிகப்பழகியவை. அவை வெறும் தேய்வழக்குகளாகவே
நமக்குத்தெரியும். நம் கற்பனையை அவை தூண்டுவதில்லை. ஒரு நல்ல வர்ணனை
நமக்களிப்பது ஒரு சின்ன அத்ரிவு. நம் கற்பனை சீண்டப்படுகிறது. அதுவரை நாம்
பார்க்காத ஒரு கோணத்தில் பார்க்க ஆரம்பிக்கிறோம். நவீன இலக்கியம் மரபான
வர்ணனைகளை ஒதுக்குவது அந்த சீண்டல் நிகழாது என்பதற்காகவே. பல்லிக்குஞ்சு
போன்ற வர்ணனைகளை அது முன்வைப்பது அந்தச் சீண்டல் நிகழவேண்டும்
என்பதற்காகத்தான்உங்கள் கேள்வி புரிகிறது
ஆனால் வெண்முரசு செவ்வியல் அழகியல் கொண்டது. அதில் நவீன வர்ணனைகளுக்கு இடமில்லை. அதன் அழகியல் பழமையைத்தான் கையாண்டாகவேண்டும் என்ற விதி கொண்டது. ஆனால் அந்த எல்லைக்குள் ஒவ்வொரு முறையும் அது புத்தம்புதிய வர்ணனைகளையே அடைகிறது. ஒருபோதும் முன்னர் சொல்லப்பட்டவற்றை தேய்வழக்காக அப்படியே திரும்பிச் சொல்வதில்லை என்பதை நீங்கள் கவனிக்கலாம். ஆகவே தான் அவையும் அந்த அதிர்வை அளிக்கின்றன. கற்பனையை சீண்டுகின்றன
காந்தள், குவளை எல்லாம் விரலுக்கும் விழிக்குமாக பயன்படுத்தப்படும் மரபான உவமைகள். காந்தள் கைவிரல் என்றோ குவளைவிழி என்றோ சொன்னால் அது தேய்வழக்கு. இங்கே சொல்லப்படுவதே வேறு. அதை உணரும் கணமே அதிர்வை, சீண்டலை உருவாக்குகிறது
ஜெ