Tuesday, February 24, 2015

வெண்முகில் நகரம்-13-இரண்டு கை


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காதல் என்றால் என்ன? காமம் என்றால் என்ன? எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும் தொடமுடியாத உயரம் அது. சுருக்கமாக இப்படி புரிந்துக்கொள்கின்றேன்.
ஒரு பெண்ணுக்கு வலிக்கும் என்று நினைத்தால் காதல். ஒரு பெண்ணை வலிக்கவைக்கவேண்டும் என்று நினைத்தால் அது காமம். வெண்முரசு அப்படித்தான் எனக்கு காட்டி உள்ளது.

வலியில் ஒரு கை தன்னை தாங்கவேண்டும் என்றும், ஒரு கை தன்னை வலிக்க வைக்கவேண்டும் என்றும் பெண் மனம் நினைக்கின்றது. அந்த இரண்டு கையும் கொண்ட மனிதன்தான் நல்ல கணவன். நல்ல கணவனுக்கு கூட அந்த இரண்டு கையும் இருக்கா என்று சொல்லமுடிவதில்லை. தாங்க பழகிய கை வலிக்க வைப்பது இல்லை. வலிக்க வைக்கும் கை தாங்குவதில்லை. பெண்மை ஒரு கையையே இரு கையாகக்கொண்டு நிறைவடைகின்றது. எங்கோ ஒரு நிறைவடையாத பெண் கீழ்மகள் ஆகின்றாள்.

காலம்காலமாக நமது மண்ணில் நடக்கும் ராமநாடகம் சொல்வது என்ன? மாற்றான் மனைவிக்கு ஆசைப்பட்டு தானும் அழிந்து, தனது குலத்தையும் அழித்தான் ராவணன் என்று சொல்கிறது. எங்கள் ஊரில் அண்ணனும் தம்பியும் சம்பூரணராமயணம் நடிப்பார்கள். தம்பி ராமன், அண்ணன் ராவணன். அண்ணன் பிள்ளைக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கின்றது. நாடகம் நடத்தபோன இடத்தில் தனது குழந்தை, குடும்பத்தைவிட்டுவிட்டு வந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துவந்து வைத்து கட்டிய மனைவியோடு வைத்து குடும்பம் நடத்தினார். அவரைப்பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். இராவணன்  இன்னும்  உயிரோடுதான் இருக்கிறான்.  ராமநாடகம் சொல்லும் நீதி மட்டும் ஏன் செத்து செத்து விழுந்துக்கொண்டே இருக்கிறது? கீழ்மையில் உள்ள சுவையை மனிதன் சுவைப்பதுபோல் மிருகங்கள்கூட சுவைப்பது இல்லை.   கீழ்மையின் சுவைக்கு மனிதன் கொடுக்கும் விலையை கடவுளால்கூட கணக்குப் பார்க்கமுடியாது. 

கங்கையில் நீந்தும் திரௌபதியை அவள் எழும் இடங்களில் எல்லாம் தன் கைக்கொண்டு தாங்கினான் பீமன் என்ற வரிவரும்போதெல்லாம் என்ன ஒரு தாய்மை என்று மகிழ்ந்தேன். கட்டிலில் தொட்டிலில் வீட்டினில் மனைவியின் வலியறிந்து தாங்கும் பொழுதெல்லாம் தன்னை அன்னையாகநினைக்கும் கணவன் இதயத்தில் சுரக்கும் காதலுக்கு மண்ணும் விண்ணும் ஈடாகுவதில்லை. அங்கு உடல் மறந்து அகம் மலர்ந்துவிடுகின்றது. மனைவி கணவன் நெஞ்சில் உதைத்து துள்ளும்போதுகூட அவனுக்கு உடல் அங்கு இல்லை உள்ளமே இருக்கிறது. திரௌபதி பீமனிடம் காண்பது வலியறியும் கை. தாயின் கை.

திரௌபதி தருமனுடன் கூடியதில், பீமனுடன் கூடியதில் உடல் எரியும் அர்ஜுனன் இன்று மாயையுடன் கூடியதில் திரௌபதி உடல் எரிகின்றாள் என்பதை அறிந்து உடல் முழுவதும் உவகை நிறைந்திருப்பதை உணர்கின்றான். திரௌபதி அர்ஜுனனுக்கு செய்யும் கொடுமைதான்.  அர்ஜுனன் திரௌபதிக்கு செய்யும் கொடுமையும். ஒருவரை ஒருவர் உடம்பாகவே பார்க்கின்றார்கள். உடம்புக்கு மேல் அவர்களுக்குள் எதுவுமே இல்லையா? அர்ஜுனன் திரௌபதியிடம் நிறைவடையாமல்போனது இந்த உடம்போடு மட்டும் பிணைந்த காமம், காமத்தால் வரும் சினமும். திரௌபதியும் அதே நிலையையே அர்ஜுனன் இடம் அடைகிறாள். காமம், காமத்தால் எழும் சினமும். இது ஒரு நாக பிணைப்பு வாழ்க்கை. உடம் இணைந்தே இருக்கம் ஒன்றை ஒன்று நோக்கி சீறிக்கொண்டு இருக்கும்.

அர்ஜுன்ன கை வலிக்க வைக்கும் கை. வலிக்கும்போதே தனக்கு உடம்பு என்ற ஒன்று இருக்கு என்று திரௌபதியை உணரவைக்கும் கை. அந்த கையை அவள் வெறுக்கலாம் வெட்டவும் துணியலாம் ஆனால் வெட்டவும் மாட்டாள் நீங்கவும் மாட்டாள்.

மானிட அகம் உள்ளமாகவும் உடம்பாகவும் மாறும் விந்தையை காதல் என்றும் காமம் என்றும் பீமன் அர்ஜுனன் இடத்தில் திரௌபதி நடந்துக்கொள்ளும் விதத்தில் உணர்ந்தேன். நன்றி ஜெ.

பெண் எவ்வளவு அசிங்கமாக அவமானப்படுத்தி திட்டினாலும் உரைக்க மாட்டேங்கறது அர்ஜுனனாக இருக்கும்போது. எவ்வளவு அடம்பிடித்தாலும் முறைத்தாலும் முரண்டுபிடித்தாலும்  கல்லாக போனாலும்  இந்திரனை அகலிகையும் விடுவதில்லை.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்

Monday, February 23, 2015

சில தாய் மகன் உறவு





குந்திக்கும் அர்ஜுனனுக்குமான உறவு சற்று வித்தியாசமானதாக பிரயாகையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும். குந்தி அர்ஜுனனை நெருங்க விடுவதில்லை. ஆனால் அடுத்தவர்களிடம் பேசும் போதும் அவன் மேல் ஒரு கண் இருக்கிறது. அவள் நகை அசைவுகளின் மூலமாய் அவன் எண்ணத்தை அறிகிறான் அர்ஜுனன். அர்ஜுனன் வார்த்தைகளுக்கு முகம் சிவக்கிறாள்.

இதே போல தான் சித்ராங்கதன் மீதும் சத்யவதிக்கு ஒரு விஷேச கவணம் இருந்ததாக ஞாபகம். இப்படி பட்ட உறவுகளை எப்படி புரிந்து கொள்வது. மகனின் மூலமாக அவனை அளித்த அவர்களின் விருப்பத்திற்குரிய ஆன் மகனை ரசிக்கிறார்களா?

ஹரீஷ்

குழும விவாதத்தில்

ஐந்துயோகம்



ஜெ

வெண்முரசில் அந்த கபால யோகி வந்தபோதே நினைத்தேன், பாஞ்சாலி விஷயத்துக்கு ஒரு யோக அடிப்படையையும் அளிப்பீர்கள் என்று. அதைத்தான் கண்டேன். அந்த யோக விவரணை அற்புதமாக இருக்கிறது. சொல்லப்போனால் அந்த சாமுண்டிக்கு பலி கொடுக்கும் இடம் முதல் ஐந்து அம்மன்கோயில்களில் கும்பிடுவது, சுயம்வரம் வரை வந்து இந்த 19 ஆவது சாப்டர் வரை ஒரு தனி நாவலாகத் தொகுத்துவிடலாம். தமிழிலே உள்ள முக்கியமான ஒரு யோகநூலாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். காமமும் யோகமும் கலந்த நூலாக இருக்குமென்று நினைக்கிறேன்

சரவணன்

அன்புள்ள சரவணன்

பாஞ்சாலியின் கதையில் எல்லாமே ஐந்து ஐந்து என இருக்கிறது. இது தற்செயல் அல்ல. பஞ்சசிகாதேவி என்ற பழைமையான தெய்வம் தாந்தீர்க மரபில் உள்ளது. [பஞ்சசிகை என்பது  குழந்தைகளை பையன்களாக ஆக்கும் சடங்கு. ஐந்து குடுமி வைப்பார்கள்] அதைப்போன்ற ஏதோ தொன்மையான சடங்குகள் இதற்குப்பின்னால் உள்ளன என்று கேரளதாந்திரீக மரபிலே சொல்வார்கள்.

ஜெ 

செஞ்சுடர் விழி



ஜெ,

ஒரு ‘ஆபாசமான’ உச்சகட்ட அழகுள்ள கவிதை என்று 19 ஆம் அத்தியாயத்தைச் சொல்லமுடியும். வாசித்துத் தீராதது. அதற்கு இந்திய மரபில் உள்ள அர்த்தங்களெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நவீன இலக்கியத்திலே இதை எழுத ஒரு அழகியல்முறை இல்லை. நேரடியாக எழுதி கூசவைக்கலாம். ஆனால் இந்தவர்ணனைகள் எங்கோ செல்கின்றன. மனிதனை மிருகமாக்கி தூய்மைப்படுத்துகின்றன என்று தோன்றுகிறது


கரும்புகை எழுந்த செஞ்சுடர் விழி

இருகருஞ்செவிகளாடும் செம்மலர்சூடிய மத்தகம்

இருமரங்கள் ஏந்தி ஒருதேன்கூடு.

இரு தூண்கள் தழுவிப் பறக்கும கொடி.

செஞ்சிற்றலகு கூர்ந்த சிறுகுருவி அமர்ந்த கூடு.

புவிதிறந்தெழுந்த அனல்.

பூத்த மடல் திறந்தெழுந்த புனல்.

செம்மை சூடிய கருமுகில்.

வாய்க்குள் வாய்க்குள் வாயெனத் திறந்து குழவியை உண்ட செவ்விருள்

ஆனால் இந்த வரிதான் அதில் உச்சம். சொல்லிச் சொல்லி சொல்லமுடியாமல் நிறுத்திவிட்ட வரிபோலத் தோன்றியது இது

இங்குள்ளேன் என்னும் முகிழ். இங்குளதென்ன என்னும் இதழ்.

சாரங்கன்

வெண்முகில் நகரம்-17-தள்ளி நின்றுப்பார்த்தால்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

இயற்கை வழங்கி இருக்கும் உணவும், செயற்கையாய் மனிதன் உருவாக்கும் உணவும் எத்தனை எத்தனை வகை. வகைக்கு எத்தனை எத்தனையோ சுவை ஆனால் பசி ஒன்றுதான். அதை உண்டாக்கவும் முடியவில்லை நிறுத்தவும் முடியவில்லை.

காமம் என்னும் பசிக்குதான் உலகில் எத்தனை எத்தனை உணவு. கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் உணவாகும் இந்த பசியில்தான் எத்தனை எத்தனை சுவை வேண்டி இருக்கிறது. காதுக்கு சொல்வேண்டும். வாயிக்கு சுவைவேண்டும், உடம்புக்கு உணர்வுவேண்டும், நாசிக்கு சுகந்தம்வேண்டும், கண்ணுக்கு காட்சி வேண்டும். இத்தனை பசிக்கும் உணவிட்டப்பின்பு அதிகமாகும் இந்த பசிதான் கொடூரப்பசி.
இந்த பசி என்னும் படிமத்தை சரியாகக்கண்டவன் சகாதேவன் மட்டும்தான். தருமன் சொல்லை ஆகுதியாக்கி அந்த தீயை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று நினைக்கிறான். பீமன் உடம்பையே உணவாக்கி அதை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று நினைக்கிறான். அர்ஜுனன் வீரத்தை ஆகுதியாக்கி அதை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று  நினைக்கிறான். நகுலன் கொடுப்பதால் எடுப்பதால்,  பணிவதால் எழுவதால்  அதை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று நினைக்கிறான். அவர்கள் அனைவருமே அவர்களுக்கு உரிய இடத்தை தாண்ட மறுக்கிறார்கள்.  அப்படித்தாண்டினால் என்ன ஆகும்? அவர்களின் பயன்பாடுகள் உடைப்பட்டுப்போகும். இணையில்லா அழகு ரோஜாவைக் கண் கண்டாலும் அதன் மணத்தை கண்கள் அறிவதில்லை.  ஐம்பொறிகளில் ஒவ்வொன்றும் அதற்கு உரிய வேலையைத்தான் செய்கிறது. ஒன்றின் வேலையை மற்றொன்று செய்யமுடிவதில்லை. திரௌபதியை மனைவியாக அடைந்த பாண்டவர்களும் ஐம்பொறிப்போல இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் உயர்ந்து உள்ளார்கள். சகாதேவன் மட்டும் மாறுபாடு நிரம்பி உள்ளான்.

முன்னவர்கள் நால்வரும் கணவன் என்ற இடத்தில் இருந்தே திரௌபதியை நோக்க, சகாதேவன் மட்டும் தள்ளி நின்று நோக்குகின்றான். இந்த அற்புதம் அவன் கற்ற சோதிட நூல் தந்ததா? தனக்கு கதை சொல்லவந்த விறலியிடம் தானகா(சகாதேவனாக) இருந்து பாடும்படி அல்லது திரௌபதியாக இருந்து பாடும்படி சொல்கின்றான். அதற்கு விறலி மறுக்கும் தருணங்கள் இரண்டும் விறலி இல்லாமல்போகும் கணம் என்பதை அறிந்து விறலியை விறலியாக இருக்க வைத்து அவள் பிறந்த விசாக நட்சத்திரத்தில் இருந்து கதையை சொல்லச்சொல்லும் இடத்தில் சகாதேவன் விறலியை வானில் தூக்கி வைத்துவிடுகின்றான்.

தூரத்தில் உயரத்தில் இருக்கும் அணைத்தும் மகத்துவம் நிரம்பியவைகள். தூரத்தில் உயரத்தில் இருப்பதாலேயே கீழ்மைகளை மறைத்துக்கொண்டு மகத்துவங்களை வெளியிடும் அற்புதங்கள் அவைகள். சகாதேவன் விறலியை உயரத்தில் வைத்ததுபோலவே திரௌபதியையும் தூரத்தில் உயரத்தில் வைத்துப்பார்க்கின்றான்.
இந்திரன் உயரத்தில் இருப்பவன் அவன் கதைப்படி காமத்தால் கீழ் இறங்கி கீழ் இறங்கி வந்து கீழ்மகனாகின்றான். இந்திரப்பதவி என்பது எத்தனை பெரியது.நூறு அஸ்வமேதயாகம் செய்து அடையக்கூடியது. நூறு அஸ்வமேதயாகம் என்பது அளவுக்கடந்த உழைப்பின் வெளிப்பாடு. அந்த உயர்ந்த பதவியை அடைந்த இந்திரன்போல் இன்னொரு கீழ்மகன் இல்லை என்பது தான் காவியங்கள் காட்டும் உச்சம்.  அக்கினி அருகில் இருப்பவன் செயல்மூலம் தூரத்தில் வைக்கப்படுகின்றான் உயரத்திற்கே செல்கின்றான். ஒவ்வொரு முறையும் வணக்கத்திற்கு உரியவன். இந்திரனை விலக்குவதுபோல் விலக்கமுடியாதவன் அக்கினி. இந்த இடத்தில் அர்ஜுனனை வென்று நிற்கும் சகாதேவன் பாராட்டுக்கு உரியவன். இந்த இடத்தில்  வென்று நிற்கும் சகாதேவன் வென்று நிற்கும் இடத்திலே மகன் என்று காட்டும் வடிவாகி நிற்பவன்.

மனைவியை அன்னை என்று கண்டுகொண்ட கணவன் ஆசிர்வதிக்கப்பட்டவன். பெண் அனைத்தையும் தியாகம் செய்யும் பெரும் வல்லமைக்கொண்டவள் அதனால்தான் பெண்ணுக்கு தவம் தேவை இல்லை என்று உலகம் சொல்கிறதோ?  பெண்ணால் தியாகம் செய்ய முடியாத ஒன்று அவர்களுக்குள் இருக்கும் கன்னி என்னும் தேவியைத்தான் என்று நினைக்கின்றேன்.

பாஞ்சாலியைப்பற்றிச்சொல்லும்போது “ஐவருக்கும் பத்தினி அழியாத கன்னிகை” என்று சொல்வார்கள். அதைக்கண்டுக்கொண்ட சகாதேவன்தான் திரௌபதியின் கணவனும் குழந்தையும்.

சகாதேவன் பாக்கியவான்தான் அதனால்தான் தனக்கான கதையை தானே தேர்ந்து எடுக்கிறான்.
இந்த இடத்தில் முடிக்க நினைக்கும்போது ஒன்ற தோன்றுகின்றது  பாண்டவர்கள் ஒவ்வொருவரும் கேட்கும் கதையை கொண்டு ஒரு ஆராட்சி செய்யலாம். மகாபாரதம் ஏன் எழுதப்படவேண்டும் என்று மீண்டும் காட்டிப்போகின்றீர்கள் ஜெ.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

ஒற்றைப்பெருஞ்சொல்லின் மீதான கடும்பித்து(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்தொன்பது)





அன்பு ஜெயமோகன்,
         
வெண்முகில்நகரத்தின் பத்தொன்பதாம் அத்தியாயம் பெரும்பித்தின் உச்சம். அறிவின் துணைகொண்டு ஒருவனால் அவ்வத்தியாயத்தில் நுழையவே முடியாது. சொல்லப்பட்ட திசைகளின் வழியாக சொல்லப்படாத திசைகளைக் கண்டடையத் தவிக்கும் ஒருவனின் அகப்பித்து அது. அதன் காட்சிகளுக்குள் புகுபவனும் வெளியேறுபவனும் பித்தனாகவே இருக்கமுடியும். பித்தனன்றி ஒருவனாலும் அவ்வத்தியாயத்தில் நுழைந்துவிடவே முடியாது.
         
சொற்கள் இறைந்து கிடக்கின்றன. எனக்கான சொற்களைத் தேடிக்கொண்டே நகர்கிறேன். ஒவ்வொரு சொல்லும் தன் தனித்துவ ஒளியால் என்னைத் தடுமாறச் செய்தபடியே இருந்தன. சீராய் வரிசையாய் நகர்ந்து கொண்டிருக்கும் சொற்களில் புதுப்புது அர்த்தங்கள் ஒளிர்ந்து மறைந்தபடியே இருக்கின்றன. சொற்கள் வெவ்வேறாக இருந்தாலும் அதன் மூலம் ஏதோ ஒரு ஒற்றைப்பெருஞ்சொல்லாகவே இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனக்கான ஒற்றைப்பெருஞ்சொல்லைக் கண்டடைந்து கொண்டால் போதும். அது நான் தேடும் சொற்களைத் தனக்குள்ளிருந்து வெளித்தள்ளிவிடும். உங்களுக்கான ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து சொற்கள் தானாகக் கொட்டத்துவங்கிய அற்புதமே பத்தொன்பதாம் அத்தியாயம்.
         
விடுபட்டுவிட முடியாத பெரும்பித்திலிருந்து வெளியேற கவிதையும், ஓவியமும், இசையும், நடனமுமே துணையாய் அமைகின்றன. பெரும்பித்தர்களே சிறந்த கலைஞர்களாக இருக்கின்றனர். பெரும்பித்தே ஒருவனை அவனின் அடையாளங்களிருந்து விலக்கி அலைக்கழிக்கிறது. அவ்வலைக்கழிப்பில் திகைக்கும் ஒருவன் கலைகளின் வழியாகவே அதிலிருந்து வெளியே வருகிறான். உங்களுக்கான ஒற்றைப்பெருஞ்சொல் தரும் அதிகப்படியான அலைக்கழிப்பாலேயே அதற்கும் உங்களுக்குமான உறவை உங்களால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது. அவ்வுறவை உணர்ந்த கணமே அப்பெருஞ்சொல்லாகவே மாறும் நீங்கள் எவ்விதத் தீர்மானமும் இன்றி சொற்களைக் கொட்டத் துவங்குகிறீர்கள். ஒளியோடு வரும் அவற்றின் நடுவே நிற்கும் நாங்கள் விதிர்த்துப்போகிறோம்.
         
இயல்பாய் விழும் மழைத்துளிகளை ஒத்திருக்கும் அவை எங்களுக்குள் நிரம்பிக் கொண்டே இருக்கின்றன. எத்துளியைக் கொள்வது, எதை விடுவது என எங்கள் அகம் திணறுகிறது. இங்கு. இங்கு. இங்கு. இக்கணம். சொற்களின் நடுவே பித்தனாய் நாங்கள் அலைபாய்கிறோம். கொஞ்சமும் இடைவேளையின்றி சொற்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. மொழியென்றால் சொற்களா? இல்லை. சொற்களென்றால் அர்த்தங்களா? இல்லை. அர்த்தங்கள் என்றால் பொதுவானவையா? இல்லை. மொழியும், சொற்களும், அர்த்தங்களும் அவரவர்க்குரியவை. உங்களின் பெரும்பித்தில் இருந்து எழுந்தபடியே இருக்கும் சொற்களில் எவ்வித அதிகாரமும் இல்லை. ஆம், அச்சொற்களில் பொதுவெனக் கொள்வதற்கான எவ்விதப் புனிதமும் பூசப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே அவற்றின் ஒளியில் நாங்கள் திகைக்கிறோம். உங்கள் சொற்களில் உங்கள் அர்த்தங்களை நாங்கள் ஒருபோதும் அறிவதில்லை. மாறாக, உங்கள் சொற்களில் எங்கள் அர்த்தங்களையே தேடிச்சிலிர்க்கிறோம்.
         
சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள். புதுமண் வாசம். அதிகாலைப்பொழுதின் தூய்மை. முளைக்கும் கதிரவனின் குழந்தைமை. நிறைந்து மலர்ந்திருக்கும் காற்றின் குளிர்ச்சி. நெருக்கமாய் நிற்கும் மலர்களின் நறுமணம். சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள். கால்களைச் சுழற்றியாடும் பேரின்ப நடனம். உந்தியிலிருந்து வெளிப்படும் ஏகாந்த இசை. இலக்கணமறியாச் சொற்களின் கூட்டின் உன்னதக் கவிதை. சிதறடிக்ககப்பட்ட வண்ணங்களில் இருந்து மகத்தான் ஓவியம். சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள். காமச்சூடு. அன்பின் குளிர்ச்சி. ஆணவத்தின் இருட்டு. பகையின் கெக்களிப்பு. வஞ்சத்தின் புன்னகை. உறவின் ஏமாற்றம். நட்பின் பிரிவு. காதலின் குழப்பம். பக்தியின் அச்சம். ஞானத்தின் கர்வம். சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள்.  
         
சொற்களில் காமமுற்று சொற்களைத் தின்று சொற்களுக்கு ஏங்கி சொற்களில் மயங்கி சொற்களுக்கு பயந்து சொற்களை உருவாக்கி சொற்களைத் தொலைத்து.. சொற்களாகவே இருக்கிறோம் நாம். என்றாலும், ஒவ்வொரு சொல்லும் ஒரே அர்த்தத்தைக் கொண்டாதாயில்லை. அதைப்புரிந்து கொண்டால் போதும். சொற்களால் எவ்வித ஆபத்தும் நமக்கு நேர்ந்திடாது.


முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.