Wednesday, February 1, 2017

களி

 
 
ஜெய்,
        யோகியின் பயணம் பெரும் கொண்டாட்டத்தினூடே ஆரம்பித்தது
நம் மனதிலும் தொற்றிக்கொண்டது,

இருப்பதன் சலிப்பே மனிதனை காமம் குரோதம் மோகம் மூன்றுக்கும் அழைத்துச் செல்கிறது.”

இன்நாவலின் சிறப்பான தொடக்க நிலையாக இவ்வரிகளை கான்கிறேன்,
சொல் புலியிடம் சிக்கிய தருமனையும் அவ்வப்போது, சடுதியில் காக்க மெய்மை உண்ட அக் காற்றின் புதல்வனே வந்துவிடுகிறான்.

மாறா அன்புகளுடன்
சசிகுமார் ரா
சேலம்

குரங்கும் புலியும்

குரங்கும் புலியும்

சலிப்பிக்குப்பின் வரும் குதூகலம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

 
 
வணக்கம்.

என்றுமே சலிப்பிக்குப்பின் வரும் குதூகலம் இரட்டிப்பு மகிழ்வைத்தரும்.தருமனின் விரக்தியான சிந்தனை மற்றும் சொல்லாடலுக்குப்பின்,களக்காட்சி சற்றும் எதிர்பாராதவகையில் தலைகீழாக மாறிவிட்டது!.குரங்குகள் புலியுடன் சேர்ந்து அடிக்கும் கொட்டம் திகட்டாத இனிமையாக இருந்தது.அதுவும் ஒரு குரங்கு குட்டி எங்கே அந்த புலியிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று உயிர் போகும் பீதியில் பயந்து பிறகு அதிலிருந்து பீமனால் விடுபட்டபின் அடிக்கும் லூட்டி!! என்னவொரு அற்புதமான துவக்கம்!.  

நேற்று கூட ஒரு வாசகருக்கு எழுதிய கடிதத்தில்  'கிராதத்தில் இருந்து இன்னும் விடுபடவில்லை என்று எழுதியிருந்தீர்கள்,ஆனால் அதற்குள்  ''மாமலரில்'' ஒரு உற்சாகமான துவக்கத்தை தந்துவிட்டீர்களே!.உண்மையில் அற்புதமான சொற்களும் மூகாம்பிகையின் அருளும் ஒருசேர உங்களுக்கு கைவரபெற்றதாகவே எனக்குத்தோன்றுகிறது.  

அன்புடன்,
அ .சேஷகிரி.

மாமலர் – அடித்தளம்



மிக இயல்பான ஒரு துவக்கத்தைக் கொண்டுள்ளது மாமலர். அதன் முதல் வரியில் மனதில் தங்கியது என்னவோ சால மரங்களை இணைத்து ஏற்படுத்திய தளம் தான். இந்த நாவலின் நாயகன் பீமன் அல்லவா! உண்மையில் பாண்டவர்களின் அடித்தளமாக, அவர்களைத் தாங்குபவனாக, அவர்களை இணைப்பவனாக இருப்பவன் அல்லவா பீமன். மிகச் சரியாக அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்ட குடிலின் அறிமுகத்தோடு மாமலர் துவங்கியிருக்கிறது.

வெண்முரசின் ஒவ்வொரு நாவலும் அவற்றின் முந்தைய நாவல்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் பல தளங்களிலான தொடர்ச்சி எப்போதுமே வியப்பூட்டுவது. அந்நோக்கில் அடித்தளம் என்பது மற்றொரு வகையிலும் முக்கியமானதே. அது சக்தியின் குறியீடு. ஐவரில் ஆற்றல் மிக்கவன் அவன். அவர்களை இயக்கும் இரு சக்திகளுக்கும் நம்பிக்கையானவனும் அவனே. சிவத்தின் அடித்தளம் சக்தியல்லவா. சக்தி தானே சிவத்தை இயக்குகிறது. கிராதம் முடிந்த இடம் இது தானே.

மீண்டும் தருமன் – சலிப்பில் இருந்து விடுபட புலி தேடித் போகிறார். அப்போதும் அவரை ‘சார்வாகர்’ வந்து தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. வெண்முரசில் தருமரோடு வரும் குரங்குக் குட்டி அவரின் மன ஓட்டத்தின் பருவடிவம். இங்கே அவர் சென்று நிற்க வேண்டிய புலியின் முன் அந்த குட்டிக் குரங்கு சென்று நிற்கிறது. மீசையைக் கூட பிடித்திழுக்கிறது. புலி வெருண்டதும் கைகூப்பி பதைபதைக்கிறது. இறுதியாக மந்தன் அதைத் துரத்திய பின்னும் செய்வதறியாது, திகைப்பில் இருந்து வெளிவர மந்தனையே மீண்டும் மீண்டும் தாக்குகிறது. இவ்வளவுக்குப் பின்னும் மந்தன் சொன்னதை ஏற்கிறது!!! புலியைப் பாஞ்சாலியாகப் பார்த்தால் சொல்வளர்காடின் ஆரம்ப அத்தியாயங்கள் நினைவுக்கு வருகின்றன. மாமலர் விரியட்டும்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

சால மரங்கள்

சால மரங்கள் - கிளைவிரித்துப் பரந்து சிறுபசுஞ்சோலைகளைச் சூடியவை.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்