Sunday, June 3, 2018

நீலமும் நடனமும்



ஜெ

நீலம் நாவலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் இந்த சிறிய இடைவெளியில் பரதநாட்டியம்மீது ஆர்வம் கொண்டேன் .சின்ன வயசில் அதை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அப்போது அதற்கு வீட்டில் சம்மதிக்கவில்லை நாங்கள் விவசாயக்குடும்பம். இப்போது என் மகள் கற்றுக்கொள்கிறாள். வீட்டுக்கு வந்து சொல்லிக்கொடுக்கிறார்கள். கூட அமர்ந்து நான் கற்றுக்கொள்கிறேன். பார்ப்பதற்குத்தான். அதன்பின்னர் நீலத்தை வாசிக்கும்போதுதான் புதிய அர்த்தங்கள் தென்பட்டன. அஷ்டநாயிகா சங்கல்பத்தை ஐந்து நிலங்களின் திணைகளுடன் இணைத்திருப்பதன் அழகை எல்லாம் இப்போதுதான் ரசிக்கிறேன். இதற்கு முன் இத்தனை நுட்பமாக நீலத்தை வாசித்ததில்லை. ராதையின் மனநிலையை நேரடியாக ஒரு தளத்திலும் இந்தமாதிரி நடனம் இலக்கணம் வழியாக இன்னொரு தளத்திலும் சொல்லிச்செல்கிறீர்கள்

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நீலம் நாவலையே ஒரு நீண்ட நடனநாடகம் போல ஆடிவிடலாம் என்று

அகிலா

Saturday, June 2, 2018

முதல் வைணவன்


அன்புள்ள ஜெ

செந்நா வேங்கை தீவிரமான ஒரு நாவலுக்குரிய மென்மையான தொடக்கம். எழுந்தழலுக்கு முந்தைய கிருஷ்ண்னை நாம் காண்கிறோம். அதே சாத்யகி. மீண்டும் மீண்டும் இளைஞர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களனைவருமே போருக்குச்செல்கிறார்கள் என்பதன் பதைப்புதான் நாவலை எதிர்பார்க்கச் செய்கிறது. திரும்பத்திரும்ப வரப்போகும் அந்த மரணத்தாண்டவம் நினைவூட்டப்படுகிறது. பத்து மைந்தரையும் கொண்டுவந்து தன் தலைவனுக்காகப் படைக்கும் சாத்யகியின் கதாபாத்திரம் அவன் அறிமுகமாகி அடிமைமுத்திரை போட்டுக்கொள்ளும் இடம் முதல் எப்படி துலங்கி வருகிறது என நினைத்துக்கொண்டேன். வைணவர்களின் அந்த ஐந்து முத்திரைகள்தான் அவை . அனைத்தையும் கிருஷ்ணார்ப்பணம் செய்யும் சாத்யகிதான் முதல் வைணவன்

ஜெயராமன்

மகாகாலனின் நடனம்



அன்புள்ள ஜெ
     
             செந்நா வேங்கை என்ற தலைப்பே குருதியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. மூன்று தலைமுறைகளாக விடாய்கொண்ட ஒவ்வொன்றும்  குருதியால் தனிந்து சமன்செய்யப்பட களம்புகும் கதை.

வண்ணக்கடலில் சாதாரண மக்களுக்கு சலிப்பே மிகப்பெரும் எதிரி என்று சகுனி துரியோதனனிடம் சொல்வது எத்தனை பெரிய உன்மை அன்று முதல் இன்றுவரை
மனிதர்களுக்கு உள்ளுரபோர்மீது உள்ள ஆர்வம் அன்றாட வாழ்வின் மீது கொண்ட சலிப்பினால்தான். குருதிசாரலில் போர் அறிவிக்கபட்ட பின் களிவெறி கொண்டலையும் அஸ்தினாபுரி மக்களில் சலிப்பின் குரூரம் தான் முதலில் எனக்கு பட்டது.

சாத்யாகியின் மகன் சீனியை தோளில் சுமந்து நகைத்தபடி ஓடி உணவு உண்ணச்செல்லும் இளைய யாதவரை நோக்குகையில் குருதி பலி கேட்டு ஆர்பறிக்கும் மகாகாலனின் நடனம் என்றே மனம் என்னுகிறது.


தங்கராஜ்

இரு சுவர்களின் நடுவே



ஆக தீமை – நன்மை என்று இரு சுவர்களின் நடுவே துரியோதனன் இருக்கையில் அவனது மண்ணாசைக்கான, இந்தப் போருக்கான நியாயத்தை அவனது கலி குணத்தைக் காரணமாக வெண்முரசு சொல்லிச் செல்கிறது. வெண்முரசு வாசிப்பவன் அதில் மனசு ஆறுதல் அடையாமல் முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

குருதிச்சாரல் | பாண்டியன் ராமையா

மகாபாரத அரசியல்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

ஜெ

வாசித்து நீண்டநாளாகிறது. ஆனால் மகாபாரத அரசியல்சூழலை சுருக்கமாக வரைபடங்களுடன் அளித்திருக்கும் அந்த இணைப்பு மீண்டும் வாசிக்க புதிதாக இருந்தது. மீண்டும் அரசியலும் போரும் தொடங்கும் நிலையில் மிக உதவியாக இருந்தது அது. வரும் அத்தியாயங்களில் அதை வாசித்து வாசித்துத்தான் என்ன நிகழ்கிறதென்பதைப்புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்

சாரங்கன்

Friday, June 1, 2018

ராதையும் கண்ணனும்




ஜெ

ஒவ்வொரு நாவலின் இடைவெளியிலும் நான் நீலம் நாவலை சென்று வாசிப்பதுண்டு. அதைச் சரியாக வாசிக்கவில்லை என்ற எண்ணம் இருந்துகொண்டே இருப்பது ஒரு காரணம். அதோடு அந்த காலண்டர் என் வீட்டில் இருக்கிறது. ஆண்டு முடிந்தாலும் அதை மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறேன். வெண்முரசு ஓவியங்களில் அதுதான் கிளாஸிக். எல்லா ஓவியங்களுமே உச்சகட்ட கிரியேட்டிவிடியுடன் இருந்தன. நீலம் படிக்கும்போது எல்லா அத்தியாயங்களிலுமே ஒரு பெரிய குதூகலம் ஏற்படுகிறது. ஒரு மகத்தான விஷயத்தை செய்வதுபோல நிறைவு. நீலத்தில் கிருஷ்ணனுக்கு ராதை அவனைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணன் என்கிறாள். அவன் அவளைச் சுட்டிக்காட்டி ராதை என்கிறான். நான் அடிக்கடி போய் வாசிக்கும் இடம் அது. அந்த கண்ணனுக்கு அழிவே கிடையாது

மனோகர்