Sunday, February 22, 2015

அகம் நுழைய முடியாதவள்

வெண்முகில் நகரில் இதுவரையான அத்தியாயத்தில் ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொருவரின் அகம் நுழைந்து பாண்வர்களை பாஞ்சாலி அறிந்துகொள்கிறாள்.
தருமனை கணவனாக, பீமனை துணைவனாக, நகுலனை விழைவாக, சகதேவனை குழவியாக... ஆனால் அர்சுனனை...!?
அவளால் அறிய முடயாத ஒருவன் அர்சுனன்.
திரௌபதி என்ற மாயையைப் புணர்து அவளை சாதாரண மாணிடப் பெண்ணாக்கியவன்.
அர்சுனன் அகம் நிறைந்த அறிந்த ஒருவன் இருக்கிறான்... அவனன்றி அர்சுனனை நிறைக்க யவராலும் இயலாது..!
மாயன் அவன்.!
- தினேஷ்குமார்.

கழலாகும் கொழுங்குருதி



ஜெ,

வெண்முகில்நகரம் 19 மிகவும் மிஸ்டிக் ஆனது. எனக்கு அதிலுள்ள மிஸ்டிசிசம் சரியாகப்புரியவில்லை. அதை சிலமுறை வாசித்துவிட்டு புரியும்போது புரியட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் புரிந்தது அதிலே உள்ள கவித்துவம். சாதாரணமாக இந்த உச்சத்தை மொழி அடையமுடியாது. நவீனப்புதுக்கவிதைகூட அஞ்சி நின்றுவிடக்கூடிய பல கவித்துவப்பிரயோகங்களைக் கண்டேன்

கன்னிக்கருவறை ஊறிய புதுக்குருதியெனக் கசியும் இளங்காலை. என்ற உவமையை எத்தனை முறை வாசித்தேன் என்று சொல்லமுடியாது.

கால்சுற்றி கழலாகும் கொழுங்குருதிப் பெருக்கு. தண்ணீர் காலில் கொலுசு போல ஆவதை நீங்கள் காடு நாவலில் எழுதியிருந்தீர்கள். இது பயங்கரமாக இருந்தது

ஆனால்

கீழ்த்திசை முகில்கள் காண்பதென்ன கனவு? 
கீழே நிழலிருள் திட்டுகள் கொண்டதென்ன கரவு? 

என்ற வரியில் உள்ள அந்த ரிதம் கொடுக்கும் கவித்துவமே வேறு. எந்த அர்த்தமும் வருவதில்லை. ஆனால் மனம் மயக்கம் கொள்கிறது. சொல்லச்சொல்ல புலம்பவைக்கிறது

புற்றெழுந்து பெருகின ஈசல்கள். 
புழைவிட்டெழுந்தன விண்மீன் வெளிகள்

ஒரு பெரிய பிரபஞ்சதரிசனம் போல. எப்படி இங்கே இத்தனைதூரம் சென்றீர்கள் என்பதே ஆச்சரியமாக இருந்தது

சண்முகம்

வெண்முகில் நகரம்-12-கண்ணுள்ளவனும் கண்ணற்றவனும்





அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காமம் என்பது என்ன? விழியற்றவனின் அகம் அறிந்த ஒன்று. அதை வண்ணங்களாகவும், சொற்களாகவும், முத்திரைகளாகவும் சமைக்கையில்  கிடைக்கும் பெருகருணையும், பெரும் சினமும் கொண்ட அன்னையின் சித்திரங்களே அவை.

பிரகலாதன் என்னும் விழியுடையவன் பார்த்ததும் அது ஆதி அன்னை சிவகாமி என்று தெரிந்துக்கொள்கின்றான். கண்ணற்றவன் முட்டிமோதி மேகத்தில் பறந்து இறைவனோடு பகடை விளையாண்டு கடைசியில் கண்டுக்கொள்கின்றான். அது அப்பனுக்கு அருகில் இருக்கும் அன்னை என்று. விழியுடையவனுக்கு தனித்த சித்திரம்கூட நிஜமான அன்னையை காட்டிவிடுகின்றது. விழியற்றவனுக்கு அன்னையை அறியக்கூட அப்பனை முதலில் அறியவேண்டி இருக்கிறது. 

நுகர் வித்தகமாகுமென்று உமை மொழியிற்பாலை உண்டிடு
நுவல் மெய்ப்புள பாலன் என்றிடும் இளையோனே-என்கின்றார் அருணகிரிநாதர் சுவாமிகள் திருப்புகழில்.

அன்னை சிவகாமிக்கொடுத்தால்தான் ஞானமுலைப்பால் உண்ணமுடியும் இல்லை என்றால் பாலில்லா முலைகளை பால்முலையாக்கும் தொழிலில்தான் ஈடுபடமுடியும். இதுகூட அன்னையின் விளையாட்டுதானோ?. திருஞானசம்பந்தருக்கு வழிய வழிய பால்கொடுத்த அன்னை ஏன் அந்தகனுக்கு பற்றாமல் பால்கொடுத்தாள். இதுவும் அன்னையின் விளையாட்டு. முக்கண்ணன் மகனுக்கு அந்தகன் பிறந்ததுதான் அப்பனின் ஞான விளையாட்டு. திரௌபதியின் நிழலை மாயையின் நிஜத்தில் தேடும் அர்ஜுனன் காமம் என்னும் காட்டில் ஒரு அந்தகன். ஒவ்வொரு பெண்ணுமே அன்னை என்னும் நிழலை நடிக்கும் நிஜங்கள். என்னை ஒரு கற்பனை ஜெ. இது கற்பனை இல்லை இதுதான் ஞானத்தின் நிஜம்.  

இன்று நிழலாகி நிற்கும் திரௌபதி பெரும்கருணையும் பெரும்சினமும் கொண்ட பேரன்னை சிவகாமி. அர்ஜுனன் கண்டுக்கொண்டான். சிவனின் கருணையால் அவன் மீண்டும் ஒரு பொன்வண்டு. வண்டுக்குதான் மண்ணில் எத்தனை எத்தனை மலர்கள்.

புராணகதை என்னும் அலங்காரம்தான் வெண்முகில் நகரம் என்னும் பெண்ணுக்கு எத்தனை பெரிய அழகை அளித்து அளித்து செல்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உயிர் சிற்பம். வாழ்க்கை சோலையின் ஞானக்கனி. நன்றி ஜெ.

உண்மையின் நிழல் மாயம் என்றால் மாயையின் நிழல்தான் உண்மை. அர்ஜுனன்போல மாயையை அணைப்பது என்பது உண்மையில் நிழலின் நிழலை  அணைப்பதுதானோ?. காமம்தான் மனிதனை எத்தனை பலகீனமானவனாக ஆக்கிவிடுகின்றது.   கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று வள்ளுவர் சொல்லும் சொல் இன்று இனிக்கின்றது. 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 

Saturday, February 21, 2015

இடையே நீலம்

 
 
 
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முகில் நகரத்தில் திரௌபதியோடு கிட்டத்தட்ட கூடவே இருந்தாலும், மனம் சற்றே பின்னோக்கி சென்றது, நீலத்தின் முடிவை நோக்கி.

"கல்நின்ற கன்னியின் முகத்தை ராதை பார்த்தாள். கல்விழிகள் காட்சிகொண்டன. குமிழிதழ்கள் முறுவலித்தன. சுற்றி எழுந்து சுழன்று நடமிட்டது செவ்விழி. பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்"

கிருஷ்ண மாமன்னர் கண்ணனாக மீண்டுமாகும் தருணம். என்ன வரிகள்! ஒரு மிகச்சிறந்த திரைப்படத்தின் முடிவுக்காட்சியை காண்பது போல் இருந்தது.

நன்றிகள் பல. ஞான பீடம் காத்திருக்கிறது, அதற்குரியவரை அடைய, தாங்கள் விரும்ப விட்டாலும். அப்படியாவது அது தன்னை நிரூபித்து கொள்ளட்டுமே.

அன்புடன்,

கணேஷ்
பஹ்ரைன்.

சர்வகல்விதமேவாஹம்



சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்! 

என்ற வரியில் தொடங்குகிறது பத்தொன்பதாம அத்தியாயம். அந்த வரி சாக்த மரபிலே முக்கியமானது. தேவிபாகவதத்தில் உள்ளது. முற்காலத்தில் சிவனும் விஷ்ணுவும் பிரம்மனும் தங்கள் மூலமென்ன என்று அறிவதற்காக தவம் செய்தார்கள். பல ஆண்டுக்காலம் அவர்கள்தவம்செய்து செய்து குழந்தைகளாக ஆனார்கள். குழந்தைகள் முலைப்பாலுக்காக அ்ழிுதன. அப்போது வானில் ஒருகுரல் எழுந்தது. அதுதான் இது. பராசக்தி தன்னை வெளிப்படுத்திய முதல் இடிமுழக்கம். இங்குள்ள அனைத்தும் நானே. நானன்றி தொன்மையாக ஏதுமில்லை என்பது பொருள்

அந்த வரியிலிருந்து தொடங்கி சென்றிருப்பதை நண்பர்கள் அறிவதற்காக இதை எழுதினேன். நீங்களேகூட இதை சொல்லியிருக்கலாம்

சுவாமி

சாக்தயோகம்




ஜெ,

பாஞ்சாலியைப்பற்றிய வெண்முகில்நகரம் 19 ஒரு  உக்கிரமான யோக அனுபூதி நிலையை மொழியில் வளைக்க முயன்றதுபோலிருந்தது. பல இடங்களில் மொழி உங்களை முழுக்கவே கைவிட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. திரும்பத்திரும்பச் சொல்லி ஒரு உன்மத்தநிலையை அடைந்தபின் எங்கோ ஆழமாகச் சென்றபின்னர் திரும்பி வருகிறீர்கள். அப்படி ஒரு கட்டத்தை அடைந்தபின் கிடைத்த உரைநடைப்பிண்டத்தை வெட்டி ஐந்தாக ஆக்கும் ஒழுங்கைக்கொண்டுவந்திருக்கிறீர்கள் சரியா. இதிலே நீங்கள் அமைத்த ஆர்டர் இதற்கு ஒரு அர்த்ததை அளிக்கிறது. அது ஒரு வழிகாட்டி போல. ஆனால் மட்டுமீறிப்போன இடங்கள்தான் முக்கியமானது. அதில்தான் இதுவரை தமிழில் உரைநடையிலே சொல்லப்படாத ஏதோ ஒன்று உள்ளது. சித்தர்பாட்டிலோ திருமந்திரத்திலோ உள்ள ஒன்று. அதைத்தான் இதிலே காணமுடிகிறது.

ஒரேசமயம் ஒரு கவித்துவ உச்சம். மறுபக்கம் ஒரு பெரிய குமட்டல் அல்லது பயம். பல தடைகளைக்கடந்து போகும் ஒரு பயணத்தின் பரிதவிப்பு முழுக்கவே இந்த அத்தியாயத்திலே எழுதப்பட்டுள்ளது. நான் பன்னிரண்டு வருடங்களாக யோகம் பயில்பவன் எனக்குத்தெரிந்தவைதான் இதெல்லாமே. ஆனால் இதை மொழியிலே எழுதிவிடமுடியும் என்பது ஆச்சரியத்தைக்கொடுக்கிறது. படிக்கப்படிக்க கொந்தளிப்புகள் எழுகின்றன

இதுதான் இதுவரை இந்தநாவலிலே எழுதப்பட்டதன் உச்சம். நீலத்தில் இதேபோல நிறைய பகுதிகள் இருந்தன. ஆனால் negative pole இல்லாமல் இருந்தது என்று தோன்றியது. அது கேளியோகம். அதன் வழி வேறு. இதுதான் சரியான சாக்த யோகம்

ராமச்சந்திரன்