Monday, July 7, 2014

வெண்முரசும் நவீனத்துவமும்

வெண்முரசு நாவலை ஒட்டி உள்ளே வரும் புதியவாசகர்களில் ஒருசாரார் இந்நாவலின் புனைவைப்பற்றிய குழப்பங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதும் புனைகதைகளைத்தான் அவர்கள் வாசித்திருக்கிறார்கள். இந்த நாவல் புராணம்போல இருக்கிறது, இப்படி எழுதுவது நவீன இலக்கியமாகுமா என்று சிலர் கேட்டிருந்தனர்.
வாசிப்பின் ருசி, படைப்புகள் சார்ந்த எதிர்பார்ப்பு, அல்லது படைப்புகள் சார்ந்து இருக்கும் பொது மனஉருவகம் என்பது இயல்பானதோ தன்னிச்சையானதோ அல்ல. அது எப்போதும் கட்டமைக்கப்படும் ஒன்று. அதன்பின்னால் தத்துவம், அரசியல் போன்றவை உள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இலக்கிய அலைகள் உருவாகி அவற்றை மாற்றியமைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்களை ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே வாசிப்பின் அளவுகோல்களை தீர்மானிக்கிறது.
இந்தியாவில் உரைநடை இலக்கியம் இந்திய தேசிய விடுதலை இயக்கத்துடனும் அதை ஒட்டி வந்த பல்வேறு பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கங்களுடனும் அதன் பின்னர் வந்த இடதுசாரி இயக்கத்துடனும் தொடர்பு கொண்டு வளர்ந்து வந்தது. அவை சமூகசீர்திருத்த நோக்கும் இலட்சியவாத எழுச்சியும் கொண்ட இலக்கியங்களை உருவாக்கின. இந்திய மொழிகளில் உள்ள பேரிலக்கியங்கள் பலவும் இந்த அலையால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் மனஎழுச்சியை எளிமையாக வெளிப்படுத்தும் அழகியல் அமைந்திருந்தது. அவை யதார்த்தத்தை நேரடியாக சித்தரிக்க முயன்றன.
அதன்பின்னர் ஐம்பதுகளில் இந்தியமொழிகள் அனைத்திலும் நவீனத்துவம் [modernism] வலுவாகக் காலூன்ற ஆரம்பித்தது. நவீனத்துவம் இலட்சியவாதங்கள் மீது ஐயம் கொண்டது. தனிமனிதனை அலகாகக் கொண்டு அனைத்தையும் ஆராய்ந்தது. புறவயமாகவும் தர்க்கபூர்வமாகவும் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள முயன்றது. நவீனத்துவத்தை உருவாக்கியவை இரண்டு தத்துவநோக்குகள். ஒன்று அனைத்தையும் புறவயமாக ஆராயமுடியும் என்ற நிரூபணவாத அறிவியல். இரண்டு, தனிமனிதனே அறிவின் அடிப்படை அலகு என்ற இருத்தலியல் தத்துவம்.
இந்தியமொழிகள் அனைத்திலும் முதல்கட்ட யதார்த்தவாத, இலட்சியவாத அழகியல் மரபை இரண்டாம்கட்ட நவீனத்துவ அழகியல் மரபு முழுமையாக நிராகரித்துத்தான் தன் தரப்பை முன்வைத்தது. தமிழின் நவீனத்துவம் என்றும் கன்னடத்தில் நவ்ய என்றும் மலையாளத்தில் ஆதுனிகத என்றும் சொல்லப்பட்ட இந்த இரண்டாம்கட்ட அழகியல் மரபுக்கு இப்போது அரைநூற்றாண்டு வயதாகிறது. மூன்றுதலைமுறை வாசகர்களை அது கண்டு விட்டது. இன்று அதுவே இறுகிப்போன பழைமையான ஒரு வாசிப்புமுறையாக உள்ளது
தமிழில் நவீனத்துவத்தின் குரல் க.நா.சு. அவர்காலகட்டத்தில் ஓங்கியிருந்த யதார்த்தவாத, இலட்சியவாத எழுத்துக்கு எதிராக அவர் இயல்புவாத, நவீனத்துவ எழுத்துக்களை முன்வைத்தார். அவற்றுக்காக வாதிட்டார். அவற்றுக்கு சிறுபத்திரிகைகள் களமாக அமைந்தன. மெதுவாக எழுபதுகளில் சிறுபத்திரிகைகளில் நவீனத்துவ அழகியல் அடிப்படை இலக்கணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலட்சியவாத எழுத்து என்பது கருத்துக்களை முன்வைப்பது, உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்துவது, விரிவான விவரணைகளை அளிப்பது,சமூகயதார்த்தங்களை சித்தரிக்க முயல்வது, வாழ்க்கைமேல் நம்பிக்கையையும் இலட்சியங்களையும் முன்னெடுப்பது. நவீனத்துவ எழுத்து இவை அனைத்துக்கும் நேர் எதிரான நிலைபாடுகளை மேற்கொண்டது. அது எந்தக்கருத்தையும் முன்வைக்க மறுத்தது, உணர்ச்சிவெளிப்பாடுகளை முழுமையாகவே தவிர்க்கமுயன்றது, சமூக யதார்த்தங்களுக்குப்பதில் தனிமனிதனின் உணர்ச்சிகளுக்கு மட்டும் கவனம் அளித்தது, வாழ்க்கைமேலும் மனிதன் மேலும் அவநம்பிக்கையை முன்வைத்தது.
ஆகவே ‘தனிமனிதனின் இருண்ட பக்கங்களைப்பற்றி மெல்லிய குரலில் குறிப்புணர்த்துதல்’ என்ற ஒற்றைவரி இலக்கணத்தை அனைத்து நவீனத்துவப் படைப்புகளும் மேற்கொண்டன. அவற்றிலும் முக்கியமான படைப்புகள் பல வெளிவந்தன. ஆனால் காலப்போக்கில் அவை தேங்கி வாசிப்பையே ஒருவகை எளிய மூளைவிளையாட்டாக, அழுத்தமற்ற வெற்றுச்சித்தரிப்பாக ஆக்கிவிட்டன. உலகமெங்கும் அப்படித்தான் நிகழ்ந்தது.
ஆகவே நவீனத்துவ அழகியலை முழுக்க தூக்கி வீசவேண்டுமென்ற குரல்கள் உலகமெங்கும் வலுவாக எழுந்தன. நவீனத்துவத்தை உருவாக்கிய இரண்டு தத்துவ நிலைபாடுகளுமே தத்துவத்தளத்தில் மறுக்கப்பட்டன. புறவயமான ஆய்வுமுறையை முழுமையான அறிதல்முறையாக ஏற்கமுடியாது என்று நிராகரித்தனர் புதிய சிந்தனையாளர்கள். தனிமனிதன் என நாம் நினைப்பது ஒரு மன உருவகமே ஒழிய ஓர் மாற்றமுடியாத இருப்பு அல்ல என்றார்கள்.
அதன் அடிப்படையில் நவீனத்துவ எழுத்துக்களின் குறைகளாக அவர்கள் முன்வைத்தவை சில அடிப்படை பிரச்சினைகளைத்தான்.
அ. நவீனத்துவப் படைப்புகள் அடங்கியகுரலில் ஒலித்தாகவேண்டும் என்ற கட்டாயம் காரணமாக மனிதவாழ்க்கையின் உச்சங்களையும் உன்னதங்களையும் தொடவே முடியாதனவாக ஆயின. மனிதவாழ்க்கை அப்படி சாதாரணமாகக் கடந்துசெல்லக்கூடியது அல்ல. நம்பவே முடியாத முரண்பாடுகளும் உணர்ச்சிவேகங்களும் கொந்தளிப்புகளும் குரூரங்களும் மனஎழுச்சிகளும் கொண்டது அது. அதைச்சொல்லவே உலகில் இலக்கியமே உருவானது. தட்டையான அன்றாடவாழ்க்கைத்தளத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க இலக்கியமே தேவை இல்லை.
மேலும் நவீனச் செய்திஊடகங்கள் நவீனத்துவ எழுத்துக்கள் எழுதும் அனைத்து வாழ்க்கைக்களங்களையும் அவற்றைவிட மேலாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டன. தவுல்செய்யும் கலைஞர்களைப்பற்றி ஓர் இயல்புவாதக் கதை சொல்வதைவிட பலமடங்கு தீவிரமாக ஓர் ஆவணப்படம் சொல்லிவிடும். ஆகவே இலக்கியம் முன்னகரவேண்டியிருக்கிறது. அந்த ஆவணப்படம் சென்று தொடமுடியாத ஓர் இடம் நோக்கி அது செல்லவேண்டும். தவுல் ஒரு கலைஞனின் கனவில் என்னவாக இருக்கிறது என்று அது சொல்ல ஆரம்பிக்கும்போது அது தாண்டிச்செல்கிறது. அதாவது புகைப்படம் வந்தபிறகு ஓவியம் நவீனஓவியமாக ஆனதுபோன்ற ஒரு மாற்றம் இலக்கியத்திலும் தேவையாகிறது.
ஆ. நவீனத்துவ எழுத்தாளன் மொழியை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கையாளவேண்டும் என நினைக்கிறான். ஆகவே மொழிமீது அவனுடைய பிரக்ஞையின் கட்டுப்பாடு எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. இது அவனுடைய விழிப்பை மீறிய ஆழமான விஷயங்கள் அந்த மொழியில் நிகழ்வதை தடுத்துவிடுகிறது. கட்டுப்பாடற்ற தன்னிச்சையான மொழி ஆழ்மனதின் நேரடியான வெளிப்பாடாக ஆகும்போது அதில் ஆசிரியனுக்கே தெரியாத எவ்வளவோ விஷயங்கள் வெளிப்பட்டிருக்கும். அதுவே இலக்கியமாகும்.
இ. புறவயமானதும் தர்க்கபூர்வமானதுமான விஷயங்களை மட்டுமே சொல்லவேண்டும் என்று நினைக்கும் நவீனத்துவ எழுத்தாளன் அன்றாட விஷயங்களை மட்டுமே சொல்லக்கூடியவனாக ஆகிவிடுகிறான். அவன் எழுதக்கூடிய வாழ்க்கை மிகமிகக் குறுகிவிடுகிறது. ஆழ்மனம், ஒட்டுமொத்த வரலாறு, பண்பாட்டின் குறியீட்டுவெளி ஆகியவற்றை அவனால் கையாளமுடியாமலாகிறது. ஆகவே அவனுடைய எழுத்து மிகமிக எல்லைக்குட்பட்டு அவனைமட்டுமே காட்டக்கூடிய ஒன்றாக ஆகிவிடுகிறது
ஈ. தனிமனிதனை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் இலக்கியம் அந்தத் தனிமனிதனை உருவாக்கிய பண்பாடு, வரலாறு பற்றி ஒன்றுமே சொல்லமுடியாத தட்டையான ஆக்கமாக ஆகிவிடுகிறது.
ஆகவேதான் அடுத்தகட்ட எழுத்துமுறைகள் உருவாகிவந்தன. அவற்றை பின்நவீனத்துவம் என்று ஓர் இலக்கிய வகை என புரிந்துகொள்ளக்கூடாது. நவீனத்துவ எழுத்துமுறையின் எல்லைகளை தாண்டிச்செல்வதற்கான முயற்சிகள் என்று சொல்லலாம். இன்னின்ன இயல்புகள் அவற்றில் உள்ளன என்று எவரும் சொல்லமுடியாது. பலவகையான எழுத்துமுறைகள் உள்ளன.
அவற்றின் பொது இயல்புகள் என சிலவற்றைச் சொல்லலாம்
1 உச்சம் என்பதை நோக்கி செல்லக்கூடிய போக்கு. உன்னதமாக்கல் [Sublimation] என்று இதைச் சொல்லலாம். ஆனால் நேர்நிலையான உன்னதம் மட்டும் அல்ல. எதிர்மறை உன்னதமும் அதில் அடங்கும். அதாவது அனைத்திலும் உன்னதப்புள்ளியைச் சொல்லிவிடவேண்டுமென்ற யத்தனம். எழுதப்படும் அனைத்துவரியையும் அவ்வாறு உன்னதம் நோக்கிக் கொண்டுசெல்லுதல்தான் இவ்வெழுத்துமுறையின் இலக்கு.
2. மொழியை கட்டற்ற பாய்ச்சலாக செல்லவிடுதல். மொழி எதை கொண்டுவருகிறதோ அதையே முன்வைத்தல். வெட்டிச்சுருக்கி கச்சிதமாக்காமல் இருத்தல். ஒருபகுதி புரியாமலே போனாலும் சரி என்று நினைத்தல். மொழியை கூறலாக மட்டும் அல்லாமல் நிகழ்த்துதலாகவும் ஆக்குதல். அதாவது மொழியில் இசைத்தன்மை வருவது, பிதற்றல்போல ஆவது அனைத்தும் இருக்கும்.
3. வடிவத்தில் ஒருமை என்பதற்காக பிரக்ஞைபூர்வமாக முயலாமல் இருத்தல். கலவையான வடிவங்களை முயன்றுபார்த்தல். ஒன்றோடொன்று சம்பந்தப்படாத கூறல்களை கலந்து எழுதுவது. மிகைக்கற்பனை, யதார்த்தவாதம், நாட்டாரியல் கதை அனைத்தையும் கலந்த வடிவங்கள்.
4. ஒட்டுமொத்தமாகச் சொல்லமுயல்வது. கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட படைப்புகளை எழுதுவது. அனைத்துத் தகவல்களையும் உள்ளே கொண்டு வருவது.
5 திருப்பி எழுதுவது. ஒட்டுமொத்த வரலாற்றையும் திருப்பி வேறு கோணத்தில் எழுதுவது. ஏற்கனவே எழுதப்பட்ட செவ்வியல் ஆக்கங்களை மீண்டும் எழுதுவது.
6. மையமற்ற புனைவுகளை உருவாக்குவது. எது ஒன்றையும் கூட்டியோ குறைத்தோ ஒரு புள்ளிக்கு அழுத்தம் தராமல் அனைத்தையும் முழுமையாகவே கூறி அதன்வழியாக ஒரு பெரிய புனைவுவெளியாக மட்டுமே படைப்பை எஞ்ச விடுவது.
வெவ்வேறு தளங்களில் இவ்வகை எழுத்துக்கள் தொண்ணூறுகள் முதல் உலகமெங்கும் வெளிவந்தன. தமிழில் விஷ்ணுபுரம், பின்தொடரும்நிழலின் குரல், கொற்றவை முதலியவை இத்தகைய ஆக்கங்கள். கோணங்கி அவருடைய பாணியில் முயல்வது இந்த வகை புனைவுக்காகவே.
*
இவ்வகைபுனைவுகளை வாசிக்க மனத்தடையாக அமைவது முந்தையகால படைப்புகளை ஒட்டி மனதை கட்டமைத்து வைத்திருப்பதுதான். ‘இலக்கியம் என்றால் அது அன்றாடவாழ்க்கை சார்ந்த ஓர் உண்மையை குறிப்பாலுணர்த்தக்கூடியதாக இருக்கவேண்டும்’ என்று நவீனத்துவ இலக்கியங்களை வாசித்து முன்முடிவுக்கு வந்துவிட்டவர்கள் உண்டு. தேங்கிப்போன பழைய வாசிப்புமுறை கொண்டவர்கள் அவர்கள்.
அவர்கள் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை, வெண்முரசு போன்றவற்றை உள்வாங்க தடுமாறுவார்கள். அவர்களுக்கு இது மாறிமாறி பலமுகங்களைக் காட்டுவதாகத் தோன்றும்.இதில் உள்ள உச்சகணங்களை தாங்கள் அறிந்த எளிய அன்றாட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு குழப்பம் கொள்வார்கள். இதன் பல்வேறு கூறுமுறைகளை யதார்த்தமாக நினைத்து குழம்புவார்கள்.
இது அடுத்தகட்ட வாசிப்புக்கான நாவல். பழைய வாசிப்புகள் அளித்த முன்முடிவுகளை கழற்றி வீசுங்கள்.
ஜெ