Monday, August 11, 2014

பரசுராமர்

அன்புள்ள ஜெமோ

வண்ணக்கடலில் பரசுராமன் கதையை தனியாக ஒரு காப்பியமாக எழுதலாமென்று சொல்லியிருந்தீர்கள். உண்மை. ஒரு தீ பற்றி எரிவதுபோல இருந்தது அந்தக் கதை. சம்பந்தமில்லாமல் குலப்பகை கதை வந்து கொண்டே இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் துரியோதனனில் வந்து சரியாக பொருந்திவிட்டது. பரசுராமர்- கார்த்தவீரியனின் கதைக்கும் பீமன் - துரியோதனன் கதைக்கும் உள்ள உறவு மட்டும் அல்ல அது துரோணர் கதையுடன் இணையும் விதமும் ஆச்சரியம் அளிப்பது. பரசுராமரின் கதை ஒட்டுமொத்தமாக பாரதத்தில் உண்டா?


செல்வா


அன்புள்ள செல்வா

பரசுராமனின் கதை மகாபாரதத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நுழைக்கப்பட்ட வடிவில் உள்ளது. ராமாயண காலத்துக்கு முன்னரே இருந்த பரசுராமர் மகாபாரதம் முடிந்தபின்னரும் இருக்கிறார். ராமாயணத்தில் ராமனுடன் போராடியபின் தோற்று மகேந்திரமலைக்குப்போய் தவம்செய்து விண் ஏகியவர் மகாபாரதத்தில் மீண்டும் வருகிறார்.

அந்தக்கதைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து மூதாதையர் கதைகளுடன் இணைத்து அந்த குலப்பகை கதை உருவாக்கப்பட்டது. அது பின்னர் வரும் பல கதைகளுடன் நேரடியாகவும் குறியீட்டு ரீதியாகவும் இணையக்கூடியது

ஜெ