Friday, August 29, 2014

நீலம்- ஒரு வரி

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம். 

"நீலம்" மனதை நிறைத்து கொண்டிருக்கிறது. போதை தலைக்கேறுகிறது. நன்றி. வாழ்க.

"அச்சத்தால் கட்டுண்டோன் மானுடன். ஐயத்தால் கட்டுண்டோன், அவற்றை வென்றாலும் உணர்வுகளால் கட்டுண்டோன். அனைத்தையும் வென்றாலும் அறத்தால் கட்டுண்டோன்."

அச்சமும், ஐயமும் உணர்வுகள் தானே? கீழ் நிலை அல்லது உலகாயுத உணர்வுகளுக்கும், "அறம்" என்ற மேன்மையான உணர்வுக்கும் உள்ள தொடர்பை சுட்டுவதாக இந்த வரி அமைந்திருக்குமோ என்ற எண்ணத்தில் இதைக் கேட்கிறேன். 

கண்ணனின் ஆயிரம் நாமங்களுள் தங்களுக்கு ஏன் "நீலம்" (மேக வர்ணம்?) மீது ஒரு பிடிப்பு என்று தோன்றியது. நீல நிறத்தின் அலகிலா தன்மையோ? அதனோடு வெண்மை சேர்ந்தாலும், கருமை சேர்ந்தாலும் அதன் நீலம் மாறாது அழகொளி வீசுவதாலோ?

வெண்முரசில்  மிகை புனைவுகளுக்கு இடமில்லை என்றால், கண்ணன் ஏன் கிருஷ்ணனாக மட்டுமே சித்திர்க்கப்படவில்லை? ராமன் பச்சையாகவும், கண்ணன் நீலமாகவும் இருந்தால் தான் வாசகனின் மனக்கண் அதை கண்டுகொள்ளுமோ?

அன்புடன்,
பார்கவி. 

பி. கு.: ஒன்பது வயது சிறுமியை தென்றல் கூட அப்படி நெருக்கமாகப் பார்த்தது  மனதை நெருடிவிட்டது. நீங்கள் இன்றைய காலத்தில் ஒன்றை உருவாக்கியுள்ளீர்கள், வாசகனும் "இன்று" தானே அதை படிக்கிறான்? A classic case of time warp! 
 
அன்புள்ள பார்க்கவி
 
பல வரிகளை நான் எழுதியதே நினைவில் இல்லை. பலசமயம் திரும்பப்படிப்பதும் இல்லை. நீங்கள் சொன்ன வரிகளை வாசித்தேன்
 
"அச்சத்தால் கட்டுண்டோன் மானுடன். ஐயத்தால் கட்டுண்டோன், அவற்றை வென்றாலும் மெல்லுணர்வுகளால் கட்டுண்டோன். அனைத்தையும் வென்றாலும் அறத்தால் கட்டுண்டோன்."
 
என்றிருக்கவேண்டும். மாற்றிக்கொள்கிறேன்.
 
நீலத்துக்கு ஒரு வசீகரம் உள்ளது. நீலத்தை தனிமையில் கூர்ந்து நோக்கும்போது நாம் மனவசியம் செய்யப்படுவோம்.
 
ஏனென்றால் அது இருள். புன்னகைக்கும் இருள். நாம் கையாளக்கூடிய இருள்
 
வெண்முரசின் அழகியலுக்கும், அமைப்புக்கும் நீலத்துக்கும் சம்பந்தம் இல்லை. இது முடிந்ததும் மீண்டும் குதிரை ஏறிவிடுவேந் சிறகுகளை கழற்றிவிட்டு
 
ஜெ