Wednesday, August 20, 2014

கர்ணனின் பிம்பம்

அன்புள்ள ஜெ

மர்மம் சூழ்ந்த பல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருகின்றன. ஏற்கனவே தெரிந்த கதையாக இருப்பினும். அதுவே ஒரு செறிவுடன் இருக்கிறது.

பீமனுக்கு புரியாத துரியோதனன் நடத்தை - கர்ணனுக்கு மீண்டும் மீண்டும் நடக்கும் அவமதிப்பு - துரோணர் குல தர்ம உணர்வுகளால் கனிவாக இருப்பதை தவிர்த்தல் - புரியாதவைகளும், மர்மங்களும் அறிதலின் திறவுகோலாக கடக்கிறது.

பீமன் - கர்ணன் உண்மையின் குந்தியின் மூத்த மைந்தன் என்று அறிந்தால்..  நிகழ்வுகள் எப்படியும் திரும்பலாம். இன்னும் அதிக கோபம் பெறலாம். அல்லது மிக வருத்தம் அடையலாம் - ஒரு விதத்தில் இருவரும் ஒரே தளத்தில் இருப்பவர்கள்தானே. இருவர் நடுவே ஒரு மெல்லிய திரைதானே உள்ளது 

கர்ணனும் - தனது சிறந்த குணங்களுக்கு ஏற்ப - பழி வாங்குவதையோ - தீச்சொல் இடுவதிலோ இறங்குவதில்லை - வீரத்தை நம்பி முன்னே செல்கிறான். பின்பு - 'இன்னா செய்தாரை .. ' என்பதாக  தன் கொடை வழியாக இன்னும் பொலிவுறப் போகிறான் என தோன்றுகிறது.

துரோணர் பிராமணராக முயல்வதும், கர்ணன் க்ஷத்ரியானாக முயல்வதும் - முக்கியமான விசையாகவும் - பின் வரும் அர்ஜுனனின் கேள்விக்கு செறிவு தருவதாகவும் இணைகிறது.

ஏகலவ்யன் அறிமுகமும் - அதை பற்றிய எதிர் பார்ப்பும் கூடிக்கொண்டே செல்கிறது. சூரியனின் பிரதிபலிப்பு கூட ஒளி தரும். குருவின் பிம்பம் கூட வழி காட்டும். அதி அற்புதமான பிரபஞ்ச விசை. 

ஒருவகையில் கர்ணனும் சூரியனின் பிரதிபலிப்பே. ஓடை மீது சகடம் உருண்டு பிம்பத்தை கலைப்பது போல கர்ணனுக்கு விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சற்று காலம் பொறுத்து, ஓடை மீண்டும் சூரியனை பிரதிபலிக்கும்.

துரோணர் சிறந்த மாணவன் என அர்ஜுனனை ஏற்பாடு செய்கிறார் - அவருக்கு பலவேறு திசைகளில் ஆச்சரியம் இருக்கிறது - கர்ணன் மற்றும் ஏகலவ்யன் துரோணர் எதிர்கொள்ள..  செய்வதும்,செய்யாததும், சொல்வதும் சொல்லாததும் .. மிகச் சிறப்பாக இருக்கிறது,

மற்றும் ஒன்று அவசியம் சொல்ல வேண்டியது. முன்பு கூறியது போலவே - இணயத்தின் தொழில் நுட்பத்தையும், வாசகர்களையும் இணைத்து - புத்தகம் நீங்கள் எழுதி, வாசகர்கள் வாசித்து (இணையத்தில், tablets and mobile phoneஇல்,என பல்வேறு உபகரணங்களில்), விவாதம் செய்து - இது ஒரு அடுத்த தலைமுறை முயற்சி. பல தொழில்நுட்ப சிந்தனையாளர்கள் - எழுதிக் கொண்டிருப்பது இங்கே நடக்கிறது.

இந்த இலக்கிய தொழில் நுட்ப பாசறையை கண்டு இதற்கென தனி விருது வழங்கப் பட  வேண்டும் என தோன்றுகிறது. இதே  மற்றவர்களும் இதே அர்ப்பணிப்புடன் செயல் பட - புதிய முயற்சிகள் கை கூட...இது விழித்து கொண்டே காணும் கனவு!

அன்புடன் 
முரளி