Thursday, August 21, 2014

விதுரரின் தீர்க்கதரிசனம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா? மழைப்பாடலில் விதுரருக்கும் பீஷ்மருக்கும் இடையே நடைபெறும் உரையாடலைப் பற்றி ஒரு கேள்வி. உங்களுக்கு நேரமிருக்கும்போது பதில் கூறுங்களேன்.


இளையவனே, அந்த வனநெருப்புக்குப் பின்னர் பாரதவர்ஷத்தில் உருவாகிவரும் அரசுகள் என்னவாக இருக்கும்?

இந்த பெரியபோருக்குப்பின் வர இருக்கும் அரசுகளைப் பற்றி விதுரர் பீஷ்மருக்கு சொல்லும் பகுதி வியாஸ பாரதத்திலும் வருகிறதா?   அப்படியென்றால் வியாஸரின் வருங்காலத்தைப் பற்றிய கணிப்பு பெருமிதத்தை கொடுக்கிறது.

மாறாக இது நீங்களே எழுதியிருந்தால், இந்த பகுதியின் அவசியம் என்ன என்பது குறித்து சிறிது குழம்புகிறேன். விதுரரின் காலத்திற்கு பிந்தைய ஆனால் நாவலின் ஆசிரியரின் காலத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை விதுரர் யூகித்து சொல்வதாக எழுதுவதில் என்ன சிறப்பு இருக்கிறது? இதைப்படிக்கும் ஒருவருக்கு இது வெறுமனே விதுரரைப் பற்றிய துதி என்றுதானே தோன்றும்?
ஆனால் இலக்கியத்தில் (திரைப்படத்திலும்கூட) இவ்வாறு கூறப்படும் ஒரு உத்தி இருக்கிறதென அறிகிறேன். இதுகுறித்து இணையத்தில் தேடலாமென்றால், உண்மையில் என்ன வார்த்தைகளை கொடுத்து இதை தேடவேண்டும் என்றே எனக்கு தெரியவில்லை. மேற்கொண்ட சில எளிய முயற்சிகளும் பயனளிக்கவில்லை. 

இந்த உத்தி எதற்காக பயன்படுகிறது என்று விளக்கமுடியுமா? 

இணைப்பு http://venmurasu.in/2014/02/26/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3/

மிக்க அன்புடன்,
கணேஷ் பெரியசாமி.
பி.கு : உங்கள் இமயமலைப் பயணம் குறித்த பதிவுகளை சிறு திகிலுடன் படித்துக் கொண்டிருக்கிறேன். பாதுகாப்பாக நல்லபடியாக முடித்துவாருங்கள். திரும்பும் வழியில் கோயம்புத்தூரில் வாசகர்களை சந்திக்கும் ஏற்பாடு எதுவும் இருக்கிறதா? முடியுமானால் உங்களை வந்து சந்திக்க விரும்புகிறேன்.



அன்புள்ள கணேஷ்

எப்படியானாலும் இந்நாவல் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எழுதப்படுகிறது. ஆகவே இது மகாபாரதகாலகட்டத்தின் மனநிலைகளை பிரதிபலிக்கவில்லை. இன்றைய மனநிலைகளையே பிரதிபலிக்கிறது. மகாபாரதத்தில் இன்றும் செல்லும்படியாகும் அம்சம் என்ன என்பது மட்டுமே இதன் கேள்வியாக உள்ளது. ஆகவே அக்காலத்தில் இப்படி யோசித்திருப்பார்களா என்ற கேள்விக்கே இடமில்லை. அத்துடன் மகாபாரத காலத்திற்கு பிறகு வந்த பல புராணங்களும் இதில் கையாளப்பட்டுள்ளன.


மகாபாரதக்கதையில் அன்றைய விரிந்த அரசியல் சூழல் உள்ளுறைந்து உள்ளது. அவற்றை வெளியே எடுத்து தொகுக்கும் ஒரு போக்கு வெண்முரசு நாவலில் உண்டு. அந்த தொகுப்பு முறையின் அடிப்படை இன்றைய நவீன வரலாற்று ஆய்வுமுறைமையே ஆகும்.


வெண்முரசு அன்றைய கங்காவர்தத்தின் அரசியலை விரிவான முறையில் சித்தரிக்கிறது - இன்றைய நவீன வரலாற்று நோக்கில். இந்த நவீன நோக்குக்காகவே இது எழுதப்படுகிறது. இது மகாபாரதம் அல்ல, மகாபாரத மறு ஆக்கம் என்று சொல்வது அதனாலேயே. விதுரன் சொல்வது அந்த அரசியலை மேலும் முன்னோக்கி காட்டுவதற்காகவே. அதன் விளைவாக இன்றைய வாசகன் மகாபாரத நிகழ்வுகளை விரிந்த வரலாற்றுப்புலத்தில் வைத்து அணுகமுடியும்

ஜெ