அன்புள்ள ஜெ,
நீலம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வரியையும் குறைந்தது மூன்றுமுறை படிக்காமல் நகரவிடுவதில்லை. இதுவரை உங்கள் எழுத்துக்களில் அடைந்த பரவசத்தைவிட இன்னும் ஒருபடி மேலே போய் படிக்கும் போதே மயிற்கூச்செரிவதும், கண்களில் நீர்த்திரை படர்ந்து படிக்க முடியாமல் ஆவதும் நிகழ்வதை பரவசத்துடனும், வியப்புடனும் கவனித்து, அனுபவிக்கிறேன். வாசிக்கும் போதே இணையாக மனதில் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன், 'இந்தவரியைச் சொல்லிக்காட்ட வேண்டும், இந்த வரியைச் சுட்டிக்காட்ட வேண்டும்' என்று மனதில் ஒவ்வொரு வரியாக அடிக்கோடிட்டு கடைசியில் ஆனந்தம் மட்டுமாக எஞ்சி நின்று எல்லாம் மறந்து தவிக்கிறேன்.
சில நாட்களாக தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சனைகள். என் கை மீறி தீர்க்கமுடியாமல்.. ஆனால் நீலம் ஆரம்பித்தது முதல் ஒரு துள்ளலும், கனிவும், நெகிழ்ச்சியும் இந்த உலகத்தை விட்டு எங்கோ தூர மிதக்க வைக்கிறது. இதுவரை வெண்முரசு குறித்த எந்த கடிதமும், கட்டுரையும் எனக்குத் திருப்திதரவில்லை. என்னால் அப்படி ஒன்றை எழுதிவிடமுடியுமா என்றும் நிச்சயமில்லை. நான் என்ன யோசித்தாலும் அது உங்கள் மொழியின், படைப்பின் தரத்திற்கு சற்றும் பொருந்தாமல் கீழே கிடக்கிறது.
எளிமையாக என்னால் செய்யமுடிந்தது இதுதான். மனதார உங்களைக் கட்டியனைத்து கைகளிலும், பாதங்களிலும் முடிவிலா முத்தங்களை வாரியிறைத்து வியந்து வாய்பிளந்து அமைதியாகிறேன் என் அன்பு ஆசானே.
உங்கள்,
பிரகாஷ்.
அன்புள்ள பிரகாஷ்
முற்றிலும் ‘கைவிட்டு’ போன ஒரு நாவல் இது. எது நிகழ்கிறதோ அது என சென்றுகொண்டிருக்கிறேன். ஒட்டுமொத்தமாக ஒன்றாகத் திரண்டுவிடுமென ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் என் கையில் திரண்டுள்ள வடிவப்பயிற்சி இதுவரை கைவிட்டதில்லை
ஜெ