Wednesday, August 27, 2014

நீலச் சொற்கள்

அன்புள்ள ஜெ

நீலம் எங்கே செல்கிறதென்று தெரியவில்லை. மீண்டும் ஒரு பித்துப்பிடிக்க வைக்கும் அத்தியாயம். கண்ணன் ராதைக்கு மகனாக அமர்ந்திருக்கிறன். அவள்தான் அவனுக்கு பெயரிடுகிறாள். மொழியைச் சொல்லிக்கொடுக்கிறாள். கண்ணன் என்பதே ராதையின் சிருஷ்டிதான் என்று சொல்லவருகிறீர்களா என்ன? பிரமிப்பாக இருக்கிறது. கண்ணன் ராதை பந்தத்தை எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கோணம் மிகவும் புதியது

ராதையின் இடுப்பில் கண்ணன் அமர்ந்திருக்கும் அந்த படமும் அற்புதம். நான் தேவகி என்று அவள் உணர்கிறாள். அந்த இடத்தை எத்தனையோ முறை வாசித்திருப்பேன். எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை என்று சொல்வோமே அந்த இடங்களை எல்லாம் சொல்லிவிட்டீர்க்ள். நீங்கள் சொல்ல வில்லை. தமிழ் சொல்லிவிட்டது. தமிழுக்கு இத்தனை ஒலியழகும் பொருளழகும் உள்ளது என்பதை நாம் பாரதிக்குப்பிறகு மறந்தே விட்டோம். நெகிழ்ந்து போகும்போது மட்டும்தான் தமிழின் பிரம்மண்டமே புரியவருகிறது

அதை நிறைக்கும் அமுதம் விண் நிறைந்த பாற்கடலில் அலைததும்பி எழுந்து அன்னைப் பசுவின்  அகிடுகளில் துளிவிட்டு ததும்பி நின்றிருக்கிறது.

என்ற வரியில் அர்த்தம் மூலம் கவித்துவம் நிகழ்கிறது என்றால்

மொட்டலர்ந்த வல்லியை, முழுக்குருடர் தொட்டறியும் எல்லியை, தொட்டில் விட்டெடுத்து தன் மொட்டுமுலைகள் மேல் அள்ளி

என்ற வரியில் வெறும் சொல்லடுக்கே கவித்துவமாகிறது

ஊழிப்பெரும்பசியா உனக்கு? உலகேழும் உண்டுதான் அமைவாயா?

என்ற வரி நேராக ஒரு தத்துவம் மூலம் கவிதையாகிறது. மூன்று வகையிலும் மாறி மாறி கவிதையாகிக்கொண்டே செல்கின்ற சொற்கள் மட்டுமே கொண்ட ஒரு அத்தியாயம்.

வாழ்த்துக்கள் ஜெ

சுவாமி