Friday, August 29, 2014

கிருஷ்ணதரிசனம்

சென்னையிலும் கொஞ்சம் குளிர் தென்படும் மார்கழி மாதம். வருடம் 1998. மாலை 5 மணி இருக்கும். படபடப்புடன் மருத்துவமனையின் பிள்ளைப் பேறு அறைக்கு வெளியே காத்திருக்கிறோம். குரங்குக் குட்டி அன்னையிடம் ஒட்டி இருப்பது போல், குழந்தை மதுரா, என்னை இறுகக் கட்டி அமர்ந்திருக்கிறாள்..

“அப்பா.. அப்பா.. பாப்பா எப்பப்பா பொறக்கும்” என்னும் கிளிப்பிள்ளைக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறாள்.  திடீரென மழை அடித்துப் பெய்கிறது.. திறந்திருக்கும் ஜன்னல் வழியே குளிர் காற்று உள் நுழைந்து மதுராவை நடுங்க வைக்கிறது.. 

“சரி.. வா கீழே கேண்டீனுக்குப் போய் வந்துரலாம்” - தொண தொணப்புத் தாங்காமல், கீழே செல்கிறோம். “என்ன வேணும்” எனக் கேட்க, சூடாகப் பொறிந்து கொண்டிருந்த பஜ்ஜியைக் காண்பிக்கிறாள் மதுரா.. மழை மேலும் வலுக்கிறது.. கொஞ்சம் பொறுத்துச் செல்லலாம் எனக் காத்திருக்கிறோம். பஜ்ஜி முடிந்து, மழை முடிந்து மேலே செல்ல, வாசலில் பரபரப்பு - உள்ளிருந்து மருத்துவர், ஒரு டவலில் சுற்றி, கருப்பாக ஒரு குழந்தையைக் காண்பிக்கிறார்.. கண்கள் திறக்காத பூங்குட்டி நெளிகிறது.. 

“தம்பிப் பாப்பா.. பாரு பாரு”, என்கிறார்கள். முழுக்கப் பார்த்து முடிப்பதற்குள், உள்ளே கொண்டு செல்கிறார்கள்..  மதுரா என்னை மேலும் இறுகக் கட்டிக் கொள்கிறது. அன்றிரவு அவளுக்குக் கண்ணனின் கதை சொல்கின்றேன். “இப்படித்தான் அன்னைக்கு ஒரு நாள், பயங்கரமா மழை பெஞ்சுகிட்டிருந்தது..”

யாரோ அவன் ஜாதகம் பார்த்து, அவனுக்கான குறுந்தேவதை - சித்திர குப்தன் என்கிறார்கள்.. சில நாட்கள் அவனுக்குச் சித்திரகுப்தன் என்று பெயர்.. “ராஜாதி ராஜ.. ராஜ மார்த்தாண்ட.. ராஜ கம்பீர.. வீர தீர பராக்கிரம சித்திரகுப்தர் மூச்சா போயிட்டார்.. பராக்! பராக்!!” என்று அவர் கீர்த்திகளைப் போற்றுகிறோம்.. அன்று அவரின் முக்கியமான வீர விளையாட்டு அது..

பின்னர், சிறு விழா நடத்தி, எங்களின் ஆதர்சத்தின் பெயரால், அருண் ரமணா எனப் பெயரிடுகிறோம்.. ஆனால், மதுராவுக்குத் தம்பியானதால், அவர் எல்லோருக்கும் தம்பியாகவே ஆகிறார்.

பிறந்த ஒரு மாதத்தில், பொருள் வயின் பிறிவு. தில்லி சென்று ஒரு எட்டு மாதம் கழித்து வருகிறேன். அதற்குள் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுதல் என முன்னேற்றம். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி, யாரிதெனக் கேட்க, விழித்துக் கொண்ட குழந்தை சொல்கிறது “மாமா” -  அதற்குள் கருப்பு நிறம் எப்படி நீங்கியது? தெரியவில்லை.. காந்தி போல் பெரும் காதுகள்..

ஒரு சில வார்த்தைகள் தவிர பேச்சு வரவில்லை. கிட்டத் தட்ட இரண்டாண்டுகள் வரை.. ஊமைச் சாமியாகவே இருந்தது. மெல்ல மெல்ல வீட்டில் வேலை செய்யும் பணியாளுடன் வெளியே செல்லக் கற்றுக் கொண்டது.. சென்னையில் போக் ரோடு ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். கண்ணம்மா பேட்டை இடுகாடு செல்ல அதுவே வழியென்பதால், தியாகராய நகர் மக்களின் இறுதி யாத்திரை இவ்வழியேதான்.  கள் மாந்தி, லுங்கியை டவுசருக்கு மேல் எடுத்து, வாயில் கவ்வி, மூக்கை விடைத்து மக்கள் ஆடும் செவ்வியல் மயான நடனம் இவருக்கு மிகவும் பிடித்துப் போனது.. தொலைவில், தப்பட்டை சத்தம் கேட்டவுடனேயே, வீட்டுக்குள் இவர் நடனம் துவங்கி விடும்..

பணியாளுடன் டீக்கடைக்குச் சென்று, டீயும் மசால் வடையும் தின்று விட்டு வந்தது.. மசால் வடையை டீயில் தோய்த்து உண்பது இவருக்கு மிகவும் ப்ரீதியானது.. யாருமில்லாத ஒரு நாள் வெளியே தனியே சென்று டீயும் மசால் வடையும் இவரே ஆர்டர் செய்து விட்டார் என்றொரு நாடோடிக் கதையும் உருவாக்கப் பட்டது.. மெல்ல மெல்ல டீக்கடைக் குத்துப் பாட்டுகள் கேட்டு, மழலையாகப் பிதற்றக் கற்றுக் கொண்டார்.. ”வாதி வாதி நாட்டுக் கட்டே”

நின்றிருக்கும் காரை ஸ்டார்ட் செய்தல்.. ஓடும் காரின் கதவைத் திறத்தல் என பல மூட வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டார். மற்றபடி, பொருட்களை உடைத்தல், எதற்குள்ளும் கையை, தலையை விட்டுக் கொள்ளுதல் போன்றவை சிறு விளையாட்டுகள்.

ஒரு 2-3 வயது வயது வாக்கில், தில்லி அழைத்து வந்தோம்.. “தம்பி” என்றழைத்தால், சட்டென்று திரும்பி, கண்களை மேலே செலுத்தி, கேட்கிறது.. “இன்னா?”  அமுதம் பொழியும் கொங்குத் தமிழ்க், குடிமகனுக்கு இப்படி ஒரு சோதனையா எனக் கண்ணீர் மல்கினேன்.. இன்னும் வார்த்தைகள் சரியாக வரவில்லை -  சீப்பை, பீப்பு என்கிறது.. ஃபேனை, சேன் என்கிறது.. சோப்பை, போப்பு என்கிறது..

ஹரித்துவாருக்கு ஒரு சிற்றுலாச் செல்கிறோம்.  வழியில் போரடிக்காமல் இருக்க, தம்பிக்காக தமக்கையும், தந்தையும் பாடல் புனையத் துவங்குகிறோம். தமக்கையின் பள்ளிப் பாடலான Old mcdonald had a farm பாடலை மாற்றி, “குட்டித் தம்பி குறும்புக்காரன் ஈயா ஈயா ஓ” என்று பாடுகிறோம்.  அருந்தமிழ்ப் பாட்டை மாற்றி, “காந்திக் காது தம்பி வாடா.. நீ ஒரு உம்மா கொடுடா” என்று கொலை செய்கிறோம்..

எப்போது.அந்தக் குழந்தை மறைந்து போனது என்று தெரியவில்லை..   ”நீலம்” படித்ததும், பாலகாண்டம் மனதில் உயிர் கொண்டெழுந்தது.. உலகெங்கும் எத்தனை கோடிக் காவியங்கள்.. அவை தரும் இன்பம்.. அலகிலா விளையாட்டேதான்..

மூவுலகாளும் சாத்தியத்தை, நான்கு நாற்காலிகள் மீது இருத்த வைக்கும் அசாத்திய வன்கொடுமை நிகழ்கிறது அதன் மேல் இப்போது.. முகத்தில் அரும்பத் துவங்கியிருக்கும் பருக்களும், மீசையுமாய், விடலைப் பிடிவாதத்தோடு கண்ணீருடன் போரிடுகிறது அதை எதிர்த்து.  தேவகி / வசுதேவ முட்டாள்தனங்களோடும், மனதில் கவலையோடும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கே போனார் அந்தக் குழந்தைக் கடவுள்?


பாலா


அன்புள்ள பாலா

ஒவ்வொருவருக்கும் ஒரு கிருஷ்ண தரிசனம், ஒரு தேவிதரிசனம் இருக்கிறது. இங்கே இப்படி மட்டுமே அதை அறியமுடியுமென்றிருக்கிறதுபோல

ஆகவேதான் வரியாசி சொல்கிறாள் ‘என் நிறைமூச்சில் ஒலித்தடங்கும் ஒருபெயரென்ன என்றறியும் பெருநாள் இது!’ என

ஜெ