Friday, August 22, 2014

பொருளிலி

ஜெ,

மீண்டும் மீண்டும் இன்றைய ஒரு அத்தியாயத்தையே வாசிக்கிறேன். குழந்தை என்ற அனுபவத்தின் உச்சம். பிறந்த குழந்தைக்கு மட்டும்தான் புயங்களில் கோடு இருக்கும். ஒரே வாரத்தில் நிறைந்து புயம் இரு மடிப்பாகிவிடும். வயிற்றிலும் அந்த சிவந்த கோடு இருக்கும். அதேபோல அந்த ஈறுநுனி மொட்டு. அதைக்கொண்டுதான் பால் அருந்துகிறது மழலை.

படிந்த சிறுபண்டியின் செவ்வரிக்கு
நூறுமுறை இறப்பேன். 
மடிந்த சிறுபுயங்களில் விழுந்த கோடுக்கு
ஆயிரம் முறை இறப்பேன். 
பிரிந்த செவ்விதழ்களுக்குள் பால்விழுது தங்கிய 
ஈறுநுனி மொட்டுக்கு பல்லாயிரம் முறை இறப்பேன்! 
கண்நீலக்கருமணியே 
உன் மூக்குவளைவின் இந்த அழுந்தலுக்காக 
கோடிமுறை இறப்பேன்!

என்ன சொல்ல. மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.“இன்றிருந்தேன், இனியுள்ளேன்” என்று நானும் பெருமூச்சுவிட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்

இந்த அனுபவமே ஓர் ஆணுக்கு என்றால் என்னென்ன தத்துவங்களும் தரிசனங்க்ளும் வந்திருக்கும். ஒன்றுமே இல்லை. ராதை வெறும் காட்சியாகவே கண்டு அதன் பரவசத்தை அடைந்துவிடுகிறாள். மூளையே இல்லை. வெறும் உடல்.

உள்ளி உள்ளி ஓராயிரம் தவம்செய்தாலும்
ஓதி நூல் ஒருகோடி அறிந்தாலும் 
இவ்வுடலறிந்ததை அகம் அறியுமா என்ன?

நன்றி ஜெ

சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து 
இப்புவியில் திரண்டதோர் பித்துப்பெருவெளி!

சுவாமி