Tuesday, January 6, 2015

பிரயாகை-67-ராமதரிசனம்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

மனிதனுக்கு நான்குபேரின் தேவை இருக்கிறது.  மாதா, பிதா, குரு,தெய்வம். தேவைக்காக மட்டும் இல்லை  நாமிருக்க இவர்கள் தேவையானவர்களும்கூட.  குருவேண்டாம் என்பவருக்கு நண்பன். தெய்வம் வேண்டாம் என்பருக்கு எதிரி. இரண்டுபேருமே இயக்குகிறார்கள்.

தெய்வத்தையே எதிரியாக வைத்துக்கொண்டவர்கள்தான் பெருவாழ்வு வாழ்ந்து இருக்கிறார்கள். பெருவாழ்வு வாழ்ந்தாலேயே தெய்வத்தை எதிரியாகக்கொண்டவர்கள். எனவே எதிரிகளையே தெய்வங்களாகக்கொள்ளலாம். இருவரும் வாழ்ந்துபார் என்கிறார்கள். இப்படி இப்படி வாழனும் என்று வழிவகுக்குகிறார்கள். எதிரிகள் வாழ வழிகாட்டியபடி வாழ்கிறார்களோ  இல்லையோ கடைசியில் தெய்வத்தை காட்டிவிடுகின்றார்கள். அல்லது தெய்வமாக்கிவிடுகிறார்கள். ராமனை யார் தெய்வமாக்கியது? ராமனின் எதிரி. 

பாமரன், அறிவாளி,பலவான், நாடு, நகரம், குலம்கோத்திரம் என்று அனைத்தும் விதுரனுக்கு எதிரியாக ஆனா அந்த தருணம் வாழ்க. எல்லாம் எதிரியாகும் அந்த தருணத்தில் தன்னை மறக்கும் மனிதன் தன் அகங்காரத்தை மறக்கின்றான் அப்போது அவனுக்கு தரிசனம் தரும் ஒரு ஜீவன் தெய்வமாகிவிடுகின்றது. விதுரனின் ராமதரிசனம் அற்புதம்.

//ராகவ ராமன் தெய்வத்தின் மானுட வடிவம் என்கிறார்கள்அவன்மக்களின் மாண்பை நம்பியவன்அவர்கள் விரும்பியபடி வாழமுயன்றவன்அவர்கள் துயரையும் அவமதிப்பையும் மட்டுமேஅவனுக்களித்தனர்அவன் செய்த பெரும் தியாகங்களை முழுக்கபெற்றுக்கொண்டு மேலும் மேலும் என்று அவனிடம் கேட்டனர்.

மனைவியை மைந்தரை இழந்து வாழ்ந்தான்சரயுவில் மூழ்கிஇறக்கையில் என்ன நினைத்திருப்பான்இதோ ஏதுமில்லை இனி,அனைத்தையும் அளித்துவிட்டேன் என்று அவன் அகம் ஒருகணம்சினத்துடன் உறுமியிருக்குமாசரயுவின் கரையில் நின்றிருப்பார்கள்மக்கள்அவன் உண்மையிலேயே தன்னை முழுதளிக்கிறானா என்றுபார்த்திருப்பார்கள்ஏதும் எஞ்சவில்லை என்று கண்டபின் மெல்ல,ஐயத்துடன், “என்ன இருந்தாலும் அவன் இறைவடிவம்என்றிருப்பார்கள்//-பிரயாகை-67

பிரயாகை-67ல் மின்னல்கீற்றுபோல் தோன்றி மறையும் இந்த ராமதரிசனம் யுகங்களைத்தாண்டி அதன் சொருபத்தை சானித்தியத்தை நிலைநிறுத்தி செல்கின்றது. தெய்வம் என்பது ஒரு உடல் அல்ல அதன் ஒரு சாயல் நமக்குள் செய்யும் மாற்றம்.

விதுரன் முழுவதும் இழந்துபோகும்போது வந்து தாங்கும் அந்த தசரத குமரன் இன்று விதுரனின் தெய்வம். தன்னை தெய்வத்தில் காண்பது. தெய்வத்தில் தன்னை காண்பது. விதுரன் கற்றதனாலய பயன்.

துணையாக பீஷ்மர் இருக்கிறார். தெய்வமாக இராமன் இருக்கிறான். பெற்றத்தாயாக சுருதை இருக்கிறாள். அப்புறம் விதுரனின் ஆனந்தத்திற்கு என்ன குறைச்சல். ஆனந்தத்தின் அடையாளமாக கண்ணனின் புன்னகை இருக்கிறது.

//இவர்கள் அவனை கல்லால் அடித்துக் கொன்றிருந்தால் எப்படிஎதிர்வினை ஆற்றியிருப்பான்அப்போதும் அவன் இதழ்களில் அந்தப்புன்னகை இருந்திருக்கும்//

காலம் சிலவற்றை  படைத்ததால் பயன்படுத்தசொல்கிறது. சிலவற்றை பயன்பாடிருந்தால் படைக்கிறது. கண்ணனின் புன்னகை இரண்டுமாக இருக்கிறது. விதுரரைப்பொருத்தவரை கண்ணனின் புன்னகை அப்போது படைக்கப்பட்டது இப்போது பயன்படுத்தப்படுவதற்காக.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.