Tuesday, January 6, 2015

பிரயாகையின் மக்கள்





குந்தி தருமனிடமும் அர்ஜுன்னிடமும் சொல்கிறாள்,

“மக்கள் என்றால் யார்? இங்குள்ள மானுடத்திரள். எளிய உலகியல் ஆசைகளாலும் அச்சங்களாலும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டு வாழ்ந்து முடியும் வெறும் உடல்கள்... கணவன் திருடிக்கொண்டுவரும் நகைகளை வேண்டாமென்று சொன்ன எத்தனை பெண்களை நீ அறிந்திருக்கிறாய்? அதைப்போலத்தான் மக்களும்."

இந்த எண்ணம் இதை படிப்பதற்கு சிறிது நாட்கள் முன்னால் எனக்கு தோன்றியது தான். லஞ்சம் வாங்கும் ஒருவர் அவரது குடும்பத்தினர் அதை மதிக்கவில்லை, அந்த செயலை வெறுக்கிறார்கள் என்று கருதினால் அவர் லஞ்சம் வாங்குவாரா? அவரது மணைவி அந்த பணத்தில் தனக்கென ஒன்றும் வாங்கி தர வேண்டாம் என்றால் அவரால் அந்த பணத்தை வாங்க முடியுமா? அப்படி தனது குடும்பத்தாரலேயே வெறுத்து ஒதுக்கப்படும் போது அந்த தனிமையின் அச்சத்தாலேயே லஞ்சம் வாங்குவதற்கு யோசிப்பார். வாங்கியும் பயனில்லை என்று உணர்வார். இதே தான் லஞ்சம் வாங்கும் பெண்களுக்கும்.

லஞ்சம், ஊழல் இவை எல்லாம் ஒரு கூட்டு செயல்பாடாக நடக்கிறது. குடும்பம், சக தொழிலாளிகள் என்று அனைவரும் சேர்ந்து. அதனாலேயே தைரியமாக அதை செய்ய முடிகிறது. அந்த கூட்டு செயல்பாடே அவர்களின் மனசாட்சியின் குரலை எளிதில் கடந்துவிட உதவுகிறது. குற்ற உணர்ச்சி இல்லாமல் அவர்களால் அதை செய்ய முடிகிறது.

பொதுவாக சாமனிய மக்கள் உலகியல் லாபத்திற்காக தங்கள் மனசாட்சியை கொஞ்சம் மறைத்து வைக்கிறார்கள். அது மிகவும் எளிது. ஏதோ ஒரு காரணத்தை திரும்ப திரும்ப சொல்லி கொள்வதாலேயே அவர்கள் மனசாட்சியை எளிதாக ஏமாற்றி விட முடியும். அப்படி அதனுடன் ஒரு சமரசம் செய்து கொண்டு எந்த உருத்தலும் இல்லாமல் எந்த தவறையும் செய்யலாம்.

ஆனால் அந்த கூட்டத்தின் மனசாட்சியின் குரலை ஒரு தலைவன் தட்டி எழுப்பும் போது அவர்களால் அதை மேலும் ஏமாற்றி வைக்க முடிவதில்லை. அப்போது லட்சியம் கொண்டு எழுவார்கள், உத்தமர்களாக மாறுவார்கள். உன்மையில் மனித உடல் ஒரு கருவி தான் அவனது அகமே அதனை இயக்குகிறது. அந்த அகத்தில் கருமேகம் சூரியனை மறைத்தாள் இருள் சூழ்கிறது . ஒரு பலத்த காற்று மேகத்தை தள்ளி சென்றாள் பிரகாசிக்கிறது.

நமக்கு அந்த கருமேகத்தை விலக்கும் வலிமை கொண்ட காற்று தான் தேவை.

அர்ஜுனன் குந்திக்கு சொல்லும் பதில்,

“ சாதாரணமாகப் பார்த்தால் அன்னை சொல்வது சரி. மக்கள் நீதியை நம்பிவாழவில்லை. ஆனால் அவர்கள் நீதிமான்களை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். நாம் அறம் மீறி இவ்வரியணையை வென்று மக்களுக்கு தீனிபோட்டு நிறைவடையச் செய்யலாம். ஆனால் ஒரே ஒரு நீதிமான் எழுந்து நம்மை நோக்கி கைநீட்டினால் மக்களுக்கு இரு தேர்வுகள் வந்துவிடுகின்றன. நாமா அவரா என. அன்னையே, மக்கள் தங்களை நீதிமான்களென நம்பவே விழைவார்கள். ஆகவே நீதிமானை கைவிட அவர்களால் முடியாது. அத்துடன் அவர்களின் உள்ளம் ஒருகணத்தில் எது வலிமையான தரப்பு என்றும் உணர்ந்துகொள்ளும். அறம்பிழைத்த நாம் கொள்ளும் குற்றவுணர்வையும் அறவோனிடமிருக்கும் நிமிர்வையும் அவர்கள் கண்டுகொள்வார்கள். அக்கணமே அவனை நோக்கிச் செல்வார்கள்…"

ஹரீஷ்