அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
பெண்களுக்கு கைகேயி என்ற பெயர் இருக்கு, யாருக்காவது குந்தி என்ற பெயர் இருக்கா? ஒருநாள் பாட்டிம்மாவிடம் கேட்டு வாங்கிக்கட்டிக்கொண்டேன்.
அப்படி ஒருத்தி இருந்தா உனக்கு கட்டிவைக்கிறேன் என்றார்கள்.
அவள் என்னோட வயதில் மூத்திருந்தால் என்ன பண்ணுவது என்று சிரித்தேன்.
நீ ஒண்ணும் பண்ணவேண்டாம், அவ எதுக்கு இருக்கா? என்றார்கள்.
இது என்னைக்கு புரியிறமாதரி பேசி இருக்கு இன்னைக்கு புரிவதற்கு என்று கிளம்பிவிட்டேன்.
கண்ணீர்விட்டு கதறக்கதற கணவனைக் கொன்றவள் கைகேயி, அந்த பெயர் இங்கு இருக்கு என்றால், கணவனைக்கொல்வது எல்லாம் பெரிய கொடுமை இல்லை என்றுதானே அர்த்தம்.
மாதவிப்பெயர்கூட இங்கு இருக்கு என்றால் அடுத்தவள் கணவனைக் அபகரிப்பதுகூட கொடுமை இல்லை.பாஞ்சாலி என்னும் பெயரும் இருக்கு, ஐந்து கணவனும் வழக்குதான், தப்பில்லை.
ஏன் குந்தி பெயர் இல்லை?. பெற்றக்குழந்தையை ஆற்றில் விட்டவள் என்பதாலா? அதற்கு பின்பு மாவீரர்களாகிய மூன்று பிள்ளைகளை பெற்று இருக்கிறாளே. ஆண்மை அற்றவனை திருமணம் செய்து கொண்டு ஆண்மை உள்ள பிள்ளைகளைப்பெற்றாளே அதுவா? இல்லை..இல்லை.
அன்னையும் செவிலியுமாய் அவள்படும் பாடுகள் அப்பப்பா..அகம் அதிர்கின்றது. பெண்ணை பெற்றெடுக்கும் ஒவ்வொரு அப்பன் ஆத்தாளும் அந்த பெயரை கேட்கும்போதே அதிர்ந்துவிடுவார்கள். அதன்பிறகு எப்படி தனது மகளுக்கு அந்த பெயரை சூட்டமுடியும்.
//குந்தி கங்கைக்கரையில் விளக்குடன் அமர்ந்துகொண்டாள்.அவர்கள் காலைக்கடன்களை முடித்து நீரிலிறங்கி நீராடிவந்தனர்.அதன் பின் அவள் இறங்கி நீராடி கரையேறினாள்//
சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் இப்படி கதை சொல்கின்றது. செவிலித்தாய் தான் வளர்த்த மகளை அவன் கணவன் வீட்டில் சென்றுப்பார்த்துவிட்டு வந்து பெற்றத்தாயிடம் சொல்வது.“நமது வீட்டில் நெய்யும்பாலும் ஊற்றி பிழைந்து ஊட்டிய உணவை உண்ணாமல் கண்ணீர் சிந்தியவள் இன்று தனது தலைவன் வீட்டில் ஆற்றின் படுகையில் அலையால் எழுந்த மேடும் பள்ளமும் கொண்ட மணல்வரிபோல உள்ள பொருள்வரவில் வரும் உணவை நகையோடு உண்கிறாள்” என்ன ஒரு அழகு.
அரசியாக இருந்து பழகிவிட்டேன். யமுனையை நீந்திக்கடந்த யாதவபெண்ணாகவேண்டும் என்று குகைவழியில் தப்பிக்கும் குந்தி சொல்லும் சொல்லுக்குள் இருக்கும் பெண்மையின் பாடுகளை நினைக்கையிலும், இன்று மகன்களை ராஜபீடத்தில் வாழவைக்க விளக்கேந்தி நடக்கையிலும் குந்தி என்பது ஒரு பெயர்தானா? இல்லை.. பெண்களின்கூட்டம் என்று தோன்றுகின்றது.
தேவதையின் தேவதைபோல இருந்த குந்தியின் வாழ்க்கையை நினைக்கும்போது கண்ணீரும், அவள் அக வல்லமையை நினைக்கும்போது மலைநிமிர்வும் மனதில் எழுந்து வருவதை உணர்கின்றேன்.
வெண்முரசைப்படிக்கும்போதெல்லாம் குந்தி என்ற பெயர் எந்த பெண்ணுக்கும் இல்லை என்ற நினைப்பு வருவதில்லை மாறாக குந்தியாக இல்லாத ஒரு பெண் நம் மண்ணில் உண்டா என்ற நினைப்புதான் வருகின்றது. பெண்கள் எல்லாம் குந்தியின் பாடுகள்தான் படுகிறார்கள். தனியாக குந்தி என்று ஏன் பெயர் வைக்கவேண்டும்.
குந்தியை வணங்கிய பின்பு தருமன் பெருமூச்சுடன் வானத்தை நோக்கியதுதான் எத்தனை அற்புதமானது. அன்னை பூமி போன்றவர். தந்தை வானம்போன்றவர். வனம்போன்ற தந்தை இன்று வானில்தானே இருக்கின்றார். தருமன் அறத்தையும் நெறிகளையும் எளிதாக கடைப்பிடிப்பவன் அல்லது அறமும் நெறியுமாகவே மாறக்கூடியவன் அல்லது அவன் செய்வது அறமும் நெறியுமாக தோன்றக்கூடியது என்பதற்கான அற்புத சான்று.
பாஞ்சாலி சுயம்வரத்திற்கு செல்லும் மகன்களைப்பார்க்கும் குந்தி, தருமனை தம்பியர் பின்தொடர்கிறார்கள் என்பதை கண்டுக்கொண்டதுதான் அன்னையின் விழி அழகு. கண்ணுக்கு மையழகல்ல கண்ணோட்டம் அழகு.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.