இதுவரை அனைவரின் எண்ண ஓட்டங்கள் வழியாக மிக நெருக்கமாக நிகழ்வுகளை கண்டு வந்தோம். ஒரு முக்கியமான நிகழ்வு அதுவும் இந்த ஒரு நிகழ்வு எப்படி நிகழப்போகிறது என்பதை வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒன்று, வெகு தூரத்தில் இருந்து சொல்லப்படுகிறது. அதுவும் அந்நிகழ்வை ஒருவர் சொல்லி ஒருவர் கேட்டு மூன்றாவது நபராக கேட்கிறோம். அந்நிகழ்வில் பேசப்படும் சொற்கள் கூட நம்மை அடையவில்லை, இருந்தாலும் அதில் என்னென்னெ பேசப்பட்டிருக்கும் எனபதை நாம் ஊகிக்கும்படி ஜெயமோகன் முதலிலேயே நம்மை தயார்படுத்தி வைத்திருப்பதால் அந்நிகழ்வு நமக்கு குழப்பம், சங்கடம் சிக்கலில்லாமல் தெளிவாக புரிகிறது
திரௌபதி ஐவரை மணக்கும் முடிவிற்கு எப்படி சென்று சேர்கிறாள் என்பது மகாபாரதத்தின் மிக முக்கிய திருப்பம்.
உண்மையில் இந்த முடிவை திரௌபதி எப்போதோ எடுத்துவிட்டாள் என்று இப்போதுதான் தெரிகிறது. அதனால்தான் தன் தோழி மற்றும் தாய் ஆகியோரிடம் திரும்ப திரும்ப பல ஆண்களை மணப்பதைப்பற்றி குறும்பாக பேசிவருகிறாள். ஒருவேளை குந்திக்கும் திரௌபதிக்கும் ஒற்றர் வழி தொடர்பு இருந்திருக்குமோ எனக்கூட எனக்கு சந்தேகம் வருகிறது. குந்திக்கும் திரௌபதிக்கும் உண்மையில் இருக்கும் ஒரே சங்கடம் இதற்கான பாண்டவர்களின் ஒப்புதல்தான். நெறிநூல்களின் வழி நிற்கும் தர்மனை வழிக்கு கொண்டு வருவது அதில் சற்று கடினமான ஒன்று.
நெறிநூல் விதிமுறைகள், மானிட வாழ்வில் அழுக்கு சேராமல் இருக்கவும் சேர்ந்த அழுக்கை நீக்க உதவும் மூலிகை போல. சில மூலிகைகளை அவை என்னதான் உயர்ந்ததென்றாலும் அதை விழுங்கமுடியாமல் போகும்போது மென்று துப்பிவிடவேண்டும், ஆலமரத்து பிசினைபோல. தேவையில்லாத போது மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருக்ககூடாது. "அவர்கள் வாயிலிட்டு மென்றுகொண்டிருந்ததை சுட்டிக்காட்டி துப்பும்படி ஆணையிட்டாள்." இதுதான் இன்றைய வெண்முரசின் முக்கிய வரியாய் விளங்குகிறது.
துரைவேல்