Monday, January 5, 2015

பெருநாடகம்



அன்புள்ள ஜெ 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கர்ணனின் நிமிர்வு மிக அழகாக வருகிறது. 

நிஜத்தில் அனைத்து மாந்தர்களும் ஆழமான அறிவு மற்றும் சிந்தனையுடன் உலா வருகிறார்கள். வாழ்விற்கும் இறப்பிற்கும் இடையே ஊசலாடி உடல் வளர்த்து, மனம் வளர்த்து சிந்திக்கிறார்கள். தன்னைப் பற்றியும், சூழலை பற்றியும், பாரம்பரியத்தை பற்றியும் தன்னை சுற்றியவர்கள் பற்றியும் ஆழமான விவாத மேடையில் உலவுகிறார்கள்.

பீமன்-இடும்பி-கடோத்கஜன் - காதலையும் அன்பையும் வளர்ச்சியையும் மிக ரசித்தேன் , 

ராகவ ராமனைப் பற்றிய குறிப்பு அபாரம்! 'உதிரிப் பூக்களின்' (திரைப்படம்) தலைகீழ் பிம்பமோ? 

பகன் கதை மிக சோகமாக இருக்கிறது, காட்டை விழுங்கிய சமவெளியின் கதை. 

உடல் கூறுகளிலும், காலத்தே சற்று முன் சென்ற பரிணாமத்தின் வலுவையும், சூழலின் வலுவையும் உடையவனாக பீமன். 

பலராமனின் - முந்து சினம் - சிறப்பான சொல் உபயோகம் - உணர்வை அழகாக வவரைகிறது 

இன்றைய கர்ணன் - பரசுராமன் - சந்திப்பு - என்னை எழுத வைக்கிறது. ஆழமான உளவியல் தளங்களை கொண்டதாகப்  படுகிறது. 

கர்ணனுக்கே அவன் சூதனல்லன் என்றொரு எண்ணம் இருப்பது போல - அவன் சூதன் என சத்தியம் செய்வதில் ஒரு நிமிர்வு இருக்கிறது. யாதொரு தீமையும் இல்லை -  உண்மை இருக்கிறது. 'புரை தீர்ந்த நன்மை?' - அது ஒரு அழகான இடம் - பரசுராமரின் உண்மைக்கு சற்று தூரத்தில் உள்ளது. 

கர்ணனை வண்டு துளைப்பது - ஒரு அற்புதமான நிகழ்வு - சாளக்ராம கற்களில் வஜ்ரகீடங்கள் புகுந்து - அவற்றை புனிதமானவைகளாக ஆக்குகின்றன. இங்கே கர்ணன் பல நிலைகளை கடந்து சென்றாலும் - கடினங்களே முடிவாக அளிக்கப் பட்டாலும்  - எப்போதுமே உயர பறக்கும் திருதராஷ்டிரன் போல - வாழ்வின் அபத்தங்களை நேர் கொண்டாலும் (சூதன் என்று அவமானம் ஒரு புறம் - க்ஷத்ரியன் என்று சாபம் ஒரு புறம் - உண்மையில் 'to be or not to be' போன்ற நாடகத் தருணம்) - வண்டு புகுந்தது - ஒரு சிறப்பு அம்சமாக தோன்றுகிறது . இனியதொரு மானுடம்.

பரசுராமனுக்கு ஒரு அதி சூக்ஷமம். யாருக்கு சொல்லிக் கொடுக்கவேண்டாமென நினைத்தாரோ - அவருக்கே செல்லும் தருணம். இங்கே கர்ணன் வழியடைக்கப்  பெற்ற வண்டு. துளைத்துக் கொண்டு, அவர் குருதி வழிகளை சிதைத்து வெளியேறுகிறான். பாவம் - அவன் ஒரு வண்டு - அவனுக்கு என்ன தெரியும்!

அவருக்கு ஒரு சங்கடம் - அதில் இன்னொரு மானுடம் - 

கர்ணனுக்கு உடலில் வடு - பரசுராமனுக்கு மரபில் வடு - 

கர்ணனுக்கு கிடைத்தது என்னவோ - முயற்சி தன் மெய்வருந்த கூலி - ஆனால் அவன் வேண்டுவது - தெய்வத்தால் ஆகாது - எனினும்... 

கர்ணன் - அர்ஜுனன் - விளையாட்டு வீரர்கள் போல - பெடரர்-ஆ நடெல்  - ஆ - (tennis) என்பது போல - அவரது சிறந்த நாட்களில் - அவரே வெற்றி பெறுவார் - மற்றவர் வேறு தினம் எதிர் நோக்கி இருப்பார். 

கர்ணனின் நிமிர்வும், துரியோதனின் நட்பும் - இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்.

கூடவே வந்த (வேண்டாத) சிந்தனை - பின்னொரு காலத்தில், - வேற்றுக் கிரக (aliens) ஆக்கிரமிப்பில், பாண்டவ கௌரவர்கள் மீட்கப் பெற்று - ஒரே புறம் போர் செய்து - பூமியை காப்பது போல - 

கனவில் மிதந்து கொண்டு இருக்கிறேன் :)

அன்புடன் முரளி