Monday, January 12, 2015

கரியவளின் விழி





இனிய ஜெயம்,


இன்றைய அத்யாயத்தை மீண்டும் வாசிக்கவில்லை. ஆயினும் ஒவ்வொரு காட்சித் துளியும் இன்னும் மனதில் தேங்கி தவிக்கிறது.அர்ஜுனன் மனதில் திரௌபதி குறித்த சொல் போல.

கிந்தூரத்தின் அடிப்படை பொறி , அதன் நுட்பம் திரௌபதியின் விழி அசைவு எனும் அங்கீகாரத்தில் இருக்கிறது என்பது எத்தகையதொரு உளவியல் நுட்பம். திரௌபதி ஒரு முறை ஏறெடுத்து பார்த்துவிட்டால் போதாதாதா? காளையர்க்கு கிந்தூரமும் சிறு சுள்ளியே.

அந்தப் பார்வையை யாருக்கு வழங்குவது என திரௌபதி தீர்மானித்து விட்டாள். ஆக போட்டியில் இருவர்தான். கர்ணன் அர்ஜுனன். கர்ணன் கிந்தூரத்தை உடைக்க, முதலில் அவன் சார்ந்த குல அடையாளத்தை  உடைக்க வேண்டும். ஆக கர்ணனுக்கு இரட்டை கிந்தூரம்.

மீதம் அர்ஜுனன். அவளின் கடை விழி பார்வை போதும் அவனுக்கு. கண்களை மூடியடி கூட கிளிகளின் சிரம் கொய்வான்.

இங்கேதான் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் பேதம் உள்ளது. அர்ஜுனனுக்கு முழு முதல் இலக்கு திரௌபதி. அவள் பார்வை தரும் அங்கிகாரமே அந்த வில்லை உடைக்கும் ஆற்றலின் ஊற்று முகம்.

கிருஷ்ணனுக்கோ இது லீலை. அவன் வில்லை நோக்கி நகர்ந்தால் அவனுக்கு திரௌபதி ஒரு பொருட்டே அல்ல.  மேலும் அவ்வளவு பெரிய வில்லை தூக்கி, நாண் பூட்டி, குனிந்து நீரில் நோக்கி, கிளிகள் நோக்கி அம்பு எய்து.... என்று மனதை ஒரே தொடரில் சிக்க வைக்க மாட்டான். வில்லை ஏந்துகையில் அதில் மட்டுமே தரிப்பான். நான் போடுகையில் அதில் மட்டுமே நிலைப்பான். அம்பு தொடுக்கையில் அதுவாக மட்டுமே இருப்பான்.

அர்ஜுனன் சொல்லி விட்டான் அங்கு நான் இருந்தால், கிருஷ்ணன் போட்டிக்கு வர மாட்டான். ஆம் நட்பு. நட்பு எனும் எல்லைக்கு மேல் கிருஷ்ணனுக்கு எதுவும் பெரிதில்லை. 

இங்கு இந்த ஒரு இடத்தில்  துரியன் நட்பு எனும் பெருந்தன்மையில் கிருஷ்ணனையே மிஞ்சுகிறான். கிருஷ்ணனால் நினைத்த எதையும் அடைய முடியும் அவன் நண்பனுக்காக திரௌபதியை விட்டுத் தருவது ஒன்றுமே இல்லை.

ஆனால் துரியனுக்கு?  இன்று சபையில் அவன் நிலை? அவனது விட்டுக் கொடுத்தல் கிருஷ்ணனின் நிலையைக் காட்டிலும் பெரிது.  அர்ஜுனனுக்கோர் கிருஷ்ணன் எனும் நட்பை விட இந்த ஒரு புள்ளியில் கர்ணனுக்கோர் துரியன் எனும் நட்பே அகம் பொங்க வைக்கிறது.

இனிய ஜெயம் பூமணி அவர்களுக்கு பாராட்டு விழா.இதோ கிளம்பி விட்டேன். மாலை உங்களை பார்க்கப் போகிறேன்.

கடலூர் சீனு