Monday, January 12, 2015

பிரயாகை-73-ஐந்தருவியின் ஒருநதி ஓவியம்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம். கவிதையாக இந்த பகுதியின் வாசக மனநிலையைக் மலரச்செய்தால் கொஞ்சம் அந்த இடத்தை தொட்ட சுகம் சிடைக்கும். அதற்கு இல்லாமல் போகும் கலை அறியவேண்டும். அதை செய்யமுடியாது சுயம்பு தோன்றவேண்டும். எப்போதும்போல் இப்போதும் பிறாக்குப்பார்த்துக்கொண்டே பிரயாகை-73ல் நடைபோடுகின்றேன். 

கதை நதிபோல ஒரு திசையை நோக்கி போய்கொண்டே இருந்தாலும், நதியின் அலைபோல, நதியின் சுழிபோல, நதியின் குளிர்க்காற்றுப்போல, நதியின் விசையோடு கூடிய இழுப்புபோல, நதியின் மென்மைக்குள் மறைந்திருக்கும் கொலைவெறிபோல அதற்கும் அப்பால் நதியின் தாய்மைபோல கதை எல்லாமுமாகி நிற்கின்றது.

அன்னை குந்தியின் திருமணநாளில் அவள் தேவி தரிசனம் செய்யவந்தது மலர் மரத்தடியில் நிற்கையில் பூ உதிரும் அனுபவம் என்றால் அன்னை பாஞ்சாலியின் திருமணநாளில் அவள் தேவிதரிசனம் செய்யவந்தது வானபூமரம் பூமழைப்போழிவதுபோல் இருந்தது. அன்று விதுரர் மட்டும்தான் நனைந்தார் இன்று பாரதவர்ஜமே நினைகிறது. 
//முகத்தை தூக்கியிருப்பதனால் இமைகள் சற்றுச் சரிந்து அவள் மெல்லிய மயக்கத்தில் இருப்பதுபோல தோன்றவைத்தது//

உண்மையில் பாஞ்சாலி மொத்த இளவரசுகளையும் மயங்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறாள். இந்த மயக்கம் தீருமா? தீராது, ஆனால் தீர்த்துக்கொள்ளவேண்டும். எப்போது தீர்த்துக்கொள்ள முடியும் நாளை பின்னிரவுவரை இந்த மயத்தில் நீந்தி கரையேறவேண்டும். இது தரையில் நீந்தும் நீந்துதல் அல்ல விண்ணில் நீந்தும் நீந்துதல். கர்ணன்தான் எத்தனை உணர்வுப்பூர்வமாக மாறிவிட்டான். விண்மீன்கள் விரிந்த வானை நோக்கிநாளை பின்னிரவு வரை…”  

பெண்ணால்தான் மண்ணில் கட்டப்பட்டு உள்ளோம் ஆனால் பெண்தான் விண்ணென்று ஒன்று இருக்கிறது என்பதையும் காட்டுகின்றாள். பெண்ணாகி வந்த அந்த வானத்து தேவதைகள் வாழ்க!

எத்தனை நெருக்கமாக இருந்தாலும், ஒரு மெல்லிய விரிசலை உணரும்தருணம்தான் வாழ்க்கையின் துடிப்பை, உயிரின் தவிப்பை உணரும் தருணம். அந்த தருணத்திலேயே மனிதன் தான் யார் என்பதை அறிகின்றான். பாஞ்சாலி கர்ணனையும் பார்த்தாள், துரியோதனனையும் பார்த்தாள் அந்த பார்வையின் மூலம் கர்ணன் அழகன் என்று துரியோதனன் நினைப்பதும், எனக்கு தெரியாமல் இவன் எப்போது இங்கு வந்தான் என்று நினைப்பதும் அந்த இடைவெளிப்புலப்படும் தருணம். அதே நேரத்தில் துரியோதன் தன்னை கர்ண’னோ, பாஞ்சாலியோ பார்க்கவில்லை என்று நினைப்பதும் உச்சம். அருகருகே இருக்கும் இருவர் விண்ணும் மண்ணும் என பிரிந்துநிற்கும் தருணம். 

பெண்கள் சூழ்ந்து இருக்கையில் கைக்கட்டிக்கொண்டு இருக்கும் கர்ணன் பாஞ்சாலியைக்கண்டதும் கைநெகிழ்வதும், பின் மீசையை நீவுவதும் அற்புதம். மந்தமாருதம் வீசும் நேரத்தில் காடே சந்தனமரமாகும் என்பதுபோல் பெண்ணே ஆணை ஆணாக்குகின்றாள்.
.//கிருஷ்ணை என அவளுக்கு பெயர் வைத்தவனை வணங்குகிறேன்என்றான்// கிருஷ்ணை என்ற ஒரு சுடர் ஒரு இடத்தையே ஒளிரவைத்து, தன்னைத்தானே பார்க்க வைக்கின்றது. துருவனை தான் பார்த்ததே இல்லை என்பதை துரியோதனன் இந்த இடத்தில் அதைக்கண்டு கொள்வது எத்தனை உண்மை. அறத்தின் குறியீடாக வரும் துருவனை இங்கு துரியோதனன் நினைப்பது பொருள் கொண்ட விதை. 

அஸ்தினபுரி இளவரசனாக இருந்தாலும், அங்கநாட்டு அரசனாக இருந்தாலும் ஆண் ஆண்தானே ஆனால் கர்ணன் தன்னை எளிதில் உணர்ந்து கொண்டுவிடுவதுதான் அவனின் பலமும் பலவீனமும் என்று நினைக்கின்றேன். ஏதோ ஒரு புள்ளியில் நான் இதுவல்ல இதுவல்ல இதுவல்ல என்ற எண்ணத்தோடே கர்ணன் இருக்கிறான். இதை தாழ்வு மனப்பாண்பை என்பதா? அல்லது உண்மை அறிதல் என்பதா? ஒவ்வொரு முறையும் கர்ணன் முன்நகர்ந்து பின் தன்னை உணர்ந்து பின்னகரும்போது மனம் சற்று வலிக்கவே செய்கிறது. அந்த வலிதான் கர்ணனை இன்னும் மண்ணில் எல்லார் இதயத்திலும் கட்டி வைத்து உள்ளதோ?
//சற்று மிகையாக சென்றுவிட்டோமோ என்ற உணர்வில் ஓர் அடி பின்னகரும் பொருட்டு. கர்ணன்இளைய யாதவன் வந்திருக்கிறானா?” என்றான்//

எவ்வாளவுதான் அடங்கா அனலோடு உணர்ச்சிகள் எரிந்தாலும் அதனால் அகம் கொத்தித்தாலும் கண்ணன் என்ற பெயர் கேட்ட உடன் ஒரு அமைதி வந்துவிடுகின்றதே எப்படி? பெரும் கொந்தளிப்புக்கு இடையில் அமையை நாட்டவந்தவன் என்பதால் அந்த தன்மையோ? பாஞ்சாலியின் ஈர்ப்பால் கர்ணனின் அகம் எப்படி கொதித்து இருந்தால் “கிருஷ்ணை என்று பாஞ்சாலிக்கு பெயர் வைத்தவனை வணங்குகின்றேன்” என்ற  அந்த வார்த்தையை அவன் துரியோதனனிடம் கூறி இருப்பான். அந்த அகத்தின் வேகம் கிருஷ்ணன் என்னும் பெயரைக்கேட்டதும் அடங்குவதை கண்டு திகைத்தேன்.
//கிருஷ்ணை என அவளுக்கு பெயர் வைத்தவனை வணங்குகிறேன்என்றான். அக்கணம் துரியோதனன் உள்ளத்தில் ஒரு கூரிய புன்னகை எழுந்தது. “இளைய யாதவன் பெயரும் கிருஷ்ணன்தான்…” என்றான். பாம்பு தீண்டியதுபோல கர்ணன் திரும்பி நோக்கினான். துரியோதனன் விழிகளை சந்தித்தபின்ஆம்…” என்றான்//

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் நல்ல குரு விஷம்கொண்ட பாம்பு என்பார். ஒரே போடு இறை இறந்துவிடவேண்டும். விஷம் இல்லாத பாம்பால் இறையும் பாம்பும் துன்பத்தையே அனுபவிக்கும் என்பார். அன்புள்ள ஜெ இந்த இடத்தில் நீங்கள் ஏன் பாம்புதீண்டியதுபோல என்று சொன்னீர்கள் என்று அறியேன் ஆனால் அதுதான் எத்தனை சரியான வார்த்தை. எந்த சால்சாப்பும் சொல்லாமல் “ஆம்“ என்று ஏற்றுக்கொள்கின்றான்.

ஐந்து அன்னையர், ஐந்து பூசகர்கள், ஐந்து பூதங்கள், ஐந்துமுக நெய்பந்தம், ஐந்து பிரிசடை, ஐந்து சுடர் விளக்கு என்று இந்த பகுதியில் விரவிக்கிடக்கும் ஐந்து ஐந்து என்ற எண்ணிக்கை வாசகன் இதயத்தில் ஐந்து பாண்டவர்களை நினைத்து நினைத்து செல்லவைத்தது.

கரியப்பாறையில் இருளுக்குள் ஒசையின்றி வழியும் அருவிப்போன்ற கூந்தலை ஐந்து பிரிசடையாக பின்னி அதை இடைக்கு கீழே ஒன்றாகக்கட்டி இருந்தாள் என்ற காட்சியில் ஐந்தருவி ஒரு நதியாகும் அழகு வெளிப்படுகின்றது. அதே நேரம் பாண்டவார்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒருநதியாக ஆக்கினாள் என்ற அற்புதமும் காணக்கிடைக்கின்றது. இடைக்கு கீழே அது ஒன்றாகி இணைந்தது என்பதுதான் உச்சத்தில் உச்சம். ஜெ எழுத்தில் ஒரு மலையும் ஐந்தருவியும் ஒரு நதியும் ஒரு ஓவியமாகும் அழகு. பாஞ்சாலி மண்பெண்ணல்ல விண்ணகம் விட்டு மண்மீது வழிந்து ஒரு நதியாகும் கங்கை என்னும் பெண்என்பதை காட்டுகாட்சி. 

//ஐந்து பிரிசடைகளாக அவற்றைப் பின்னி இறக்கி இடைக்குக் கீழே அவற்றை ஒன்றாக்கிக் கட்டியிருந்தாள்//

இடைக்கு கீழேதான் அதை பாஞ்சாலி இணைத்து வைத்திருந்தாள்  என்றால் வரும் மாசுபொடிபட //ஐந்து சுடர்கள் கொண்ட சிறிய விளக்கு ஒரு மலர்ச்செண்டு போலிருந்தது// என்றுவரும் இடம்காட்டி பாஞ்சாலி கையில் பாண்டவர்கள் ஒளி பூச்செண்டாகும் தருணம் மின்ன தேவிதரிசனம் காட்டுகின்றீர்கள் ஜெ.

ஓவியர் ஷண்முகவேல் படம் தெய்வீக அழகு கொண்டு மிளர்கின்றது. பாஞ்சாலியை வரையும்போது ஷண்முகவேல் அகத்தில் கர்ணனின் கண்முளைத்துதிருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.