Friday, January 16, 2015

குரங்கின் தம்பி



அன்புமிக்க ஜெ,

       பீமன் சென்று கிந்தூரத்தை எடுப்பதற்கு செய்யும் உக்திகள் கண் முன்னே தோன்றின.இது வரையில் இறுக்கமும்,அச்சமும்,அனலுமாய் இருந்த அவை நகைக்கிறது.வாழ்வின் ஆகச்சிறந்த யதார்த்தம் இது.

         ஒருவிதத்தில் எல்லாருக்கும் தேவைப்படும் இடைவெளி பீமனால் மிக அழகாக நிரப்பப்படுகிறது.

         வாழ்வில் நாம் விரும்பும் யதாரேத்தம் இது தானா.

        ஜராசந்தன்,துருபதன்,பாஞ்சாலி என அனைவரும் சிரிப்பது வரவிருக்கும் மகிழ்வின்  முன்னுரையாகவே உள்ளது.

        பீமன் தன்னை பிறர் பார்த்து நகைத்தாலும் செய்ய வேண்டிய காரியத்தைக் கருத்தாகச் செய்து கிந்தூரத்தின் நுட்பத்தை அறிந்து உண்மையில் பிறரை முட்டாளாக்குகுறான்.வாழ்வில் ஆகச்சிறந்த உண்மை இது.மக்கள் பார்த்து சிரிக்கும் செயலைச் செய்பவர்கள் தங்களின இலக்கைச் சரியாக அடைகிறார்கள்.மக்கள் தான் அப்படியே இருக்கிறார்கள்.

           பீமன் குழந்தைத்தனமான செயல்களால் மனதிற்கு நெருக்கமாக ஆகிறான்.இடும்ப வனத்தில் மிக இயல்பானவனாக,பாசாங்குளற்றவனாக உயர்ந்த பண்புடன் மனதை கவர்ந்தான்.

     சாதாரண மக்களுடன் உணவைப் பகிர்கையில் அரசகுல சம்பிரதாயங்களை 
பின்பற்றுவதில்லை என்று கூறுகையில் கம்பீரமானவனாகத் திகழ்ந்தான்.இன்று பெருங்கூட்டத்தை மகிழ்விப்பவனாக மக்களில் கலக்கிறான்.காற்றின் மைந்தனல்லவா ,இயல்பாக எங்கும் நிறைகிறான்.

        பீமனின் விளையாட்டுகளை மிக அற்புதமாக சித்தரித்திருந்தீர்கள்.

      கிருஷ்ணனனை விளையாட்டுப் பிள்ளையிலிருந்து முதிர்ந்த தந்தையின் இடத்திற்கு கொண்டு செல்கிறீர்கள் .அவன் எல்லா செயல்களும் பாவனைகளே என்று உணர்த்துகிறான்.

     சில இடங்களில் சிலரே செயல்படவேண்டுமென உணர்த்துகிறான் கிருஷ்ணன்.அர்ச்சுனனை அவன் நோக்குவதும் அதை எண்ணியே.

          பாஞ்சாலியின் மனநிலைதான் ஊசலாடியதோ என்று தோன்றியது.பார்த்தனை அவள் விழிகள் சந்திக்கும் கணத்தில் எல்லாம் தெளிவாகியது.அது தான் விதியா.இது எல்லோர் வாழ்விலும் நடக்கும் ஒரு நொடி தான்.எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அந்த முடிவைச் சரியாக எடுப்பதிலேயே  முழு வாழ்வும் அடங்கிவிடுகிறது.

    நன்றி
மோனிகா மாறன்.