ஜெ
இந்தவருடம் முதற்கனலில் அம்பையில் ஆரம்பித்தது. கொற்றவை வடிவம் கொண்ட பெண். அம்பையின் மறுவடிவம் போன்ற பாஞ்சாலியில் வந்து முடிந்திருக்கிறது. இரு பெண்களுமே தீ மாதிரி எரிபவர்கள். தழல்வடிவங்கள். நீங்கள் சொல்லும் அத்தனை உவமைகளும் அதையே காட்டுகின்றன. அவர்களை தீ இல்லாமல் நினைக்கவே முடியவில்லை.
ஆனால் நீங்கள் அம்பையை தீ என்கிறீர்கள். முதற்கனல். ஆனால் பாஞ்சாலியை பிரயாகை என்றும் ஆறாக நீராக குறிப்பிடுகிறீர்கள். பாஞ்சாலியின் பிம்பத்தை நினைக்கையில் என்னால் தீயாகவே எண்ணமுடிகிறது
கொற்றவைக்குப் பலிகொடுத்துக்கொண்டு பாஞ்சாலியின் கதையை ஆரம்பிக்கிறீர்கள். இரண்டு தலைகள். அவள் குளிக்கப்போகும் ரத்த ஆறு இப்போதே கண்ணில் தெரிகிறது. கொற்றவை ஒருத்தி ரத்த்ததிலே குளிப்பதைப்போல தோன்றுகிறது
செந்தூர்முத்து