Tuesday, June 27, 2017

மற்றுரு



ஜெ,

நீர்க்கோலம் 3ல் வரும் மற்றுருக்களைக் கண்டடையும் இடம் மிகவும் நுட்பமானது.

நாம் அன்பு செய்வோர் மீது நாம் கொள்ளும் வெறுப்பு நாமே அஞ்சக் கூடியது. அது அவர்கள் மீது நாம் அன்பு கொள்வதனால் அவர்களுக்காக நாம் எதையும் செய்யத் துணிவதனால், நம்மால் நிகர் வைக்கப்படுவது.அது வெளிப்படும் போது அதன் வீச்சும் அளப்பரியது.

சகாதேவனை வெறும் கணியன் என்றழைத்து குருதியினைக் குடிக்கத் துவங்குகிறாள் திரௌபதி. முதலிரவின் அறையிலேயே இருவரும் நிமித்த நூல்களைப் பற்றி, அஜபாகனைப் பற்றித் தான் பேசினர். அவன் இயல்பிலேயே பெருங்கணியன் என்றுணர்ந்து பேச்சை எளிதாக்கும் பொருட்டுத் துவங்கிய உரையாடல் இருவருக்கும் அதிலிருந்த விருப்பு காரணமாகத் தொடர்ந்து வளர்ந்தது. அவனை வெறும் ஒரு கணியன் என்று திரௌபதி கூறுகிறாள். சிறு தயக்கத்திற்கு அப்பால் அவனுக்கும் அதில் பெரிய குறையொன்றும் இல்லை. தருமனைப் பார்த்து அறிஞன் ஆனவன் அவன். ஒரு வகையில் தருமனின் நிழல். ஒரு வகையில் இது அவனுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது தான்.
நகுலனுக்கு பீமன் குதிரைச் சூதன் வேடத்தைத் தருகிறான். சாணியள்ளிக் கொட்டிச் சவுக்கை உயர்த்தும் முன்பே உடல் குறுக்கும் எளியவன். கர்ணனை வெகுளச் செய்ய பீமன் சொன்ன கடும் சொற்கள் தான் இவை. ஆனால் இது கர்ணனின் குணம் அல்ல. ஒருபோதும் சவுக்குக்கு முன்பு குறுகும் தோள்கள் அல்ல அவனுடையது. அதிரதனிடமும் அவன் கூறுவது அதுவே. என்னதான் அவன் புரவிச் சூதனாய் இருந்தாலும் அவன் வெறுக்கும் குணம் இது. சிறுவயதில் கர்ணன் குந்தியால் நகுல சகாதேவன்களுக்கு காப்பாய் நியமிக்கப் பட்டபோது நகுலன் கர்ணன் மீது கொண்ட மதிப்பை அழித்த சொற்கள் இவையென்பதால் தான் சினம் கொள்கிறானா நகுலன்? பின் உடனே பழிதீர்ப்பதற்கு பீமனைக் கீழ்மை செய்கிறான்.

துரியோதனை பீமன் கடப்பதே குரங்குத் தன்மையினால் தான். ஒரு காட்டாளனாய் கட்டற்றுத் தன்னை முன் வைக்கும் போதே விடுதலை கொள்கிறான் பீமன். அவன் வஞ்சம் கொண்டு செய்யும் பெரும் பிழைகளையும் காட்டாளன் என்னும் வேடம் கொண்டு தான் கடக்கிறான். ஜெயத்ரதனை அவன் மாமலரில் சிறுமை செய்தபின் காட்டாளனும் செய்யாத கீழமையென அவன் புலம்புவது அதனால் தான். அனால் துரியோதனன் செம்மையே உருவானவன். இயல்பிலேயே கீழ்க்களியாட்டங்களில் ஈடுபடாதவன். பெண்கள் முன்பு நாணிழந்து ஆடை கழற்றி வெற்றுடல் காட்டி மகிழும் கீழோன் என்பதே அவனை துரியோதனனை விட கீழிறக்குறது. அதனாலேயே அவன் சினக்கிறான். பின் அதில் உள்ள உண்மையை அறிந்து அமைதியாகிறான். வஞ்சத்தைச் சுவைத்து குருதி குடிக்க கிடைக்கவிருந்த மெய்மையைத் துறந்து வந்தவன் தானே அவன். எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் நகுலனின் வஞ்சத்தையும் சுவைக்கட்டும்.

திரௌபதியும் தர்மனும் ஆடும் ஆடல் இன்னும் சுவாரசியமானது. திரௌபதியை தர்மன் வெறும் வேலைக்காரி என்கிறார். பிறந்தது முதல் பாரதவர்ஷத்தின் பேரரசியென வாழ்ந்தவளை பணிப்பெண்ணாக ஆக்குவதும் ஒருவகையில் இதுவரை அவளை தர்மரால் வெல்ல முடியாததால் தான். கோபம் கொப்பளித்தாலும் அதை அடக்கும் திரௌபதி, அதை விட பல மடங்கு வேடத்தில் திருப்பி அடிக்கிறாள். பிறந்தது முதலே ஒரு பேரரசனின் தலைமீது கால் வைத்து வாழ்ந்தவர் தர்மர். ஒவ்வொரு சொல்லும் செயலும் நெறியின் படி மட்டுமே செய்ய முடிந்தவர். அவர் விழைவது அறச்செல்வன் என்னும் பெருமையை. அந்த பெருமையைக் குலைக்கும் எதையும் கனவிலும் செய்ய இயலாதவர். ஆனால் அவர் ஆழுள்ளம் விழைவது உலகம் அவருக்கு அளித்த, அவர் விருப்புடன் அனுபவிக்கும் அந்தச் சட்டகத்தை மீறுவதாகத் தானே இருக்க முடியும்?

இந்த உரையாடலின் சிகரம் அர்ஜுனன் தன் மாற்றுருவை ஏற்றுக் கொள்வதுதான். அர்ஜுனனின் உருவைத் தேர்வு செய்யும் வாய்ப்பு முதலில் தர்மருக்குத் தான் வருகிறது. ஆனால் தருமர் அவனை பேடியாகச் சொல்லுவதற்கு  அஞ்சுகிறார். அவரும் அஞ்சும் நினைவல்லவா பாண்டு ஒரு பேடி என்பது. பின் திரௌபதி தருமர் மறுத்த வாய்ப்பினை உவகையுடன் ஏற்றுக்கொள்கிறாள். மணந்த நாள் முதல் அர்ஜுனனை வெல்ல முடியாததை மாற்றும் நோக்கத்துடன், அவனைக் கடுஞ்சினம் கொள்ள வைக்க முயன்று தான் ஆணிலி வேடம் கொள்ளுமாறு கூறுகிறாள். கிருஷ்ணன் இதைச் சொன்னதற்குத் தான் நாற்றிசையையும் வென்று பாசுபதத்தையும் பெற்று வந்தான் அர்ஜுனன். ஆனால் கிருஷ்ணை சொன்னதற்கு புன்சிரிப்புடன் ஆம் என்கிறான், அவளை இன்னுமொரு முறை தோற்கடித்து. தன் மாற்றுருவை மகிழ்வுடன் ஏற்கும் ஒரே பாத்திரம் அர்ஜுனன் தான். எல்லாரும் மாற்றுருவை ஒரு சுமையென ஒரு கீழமையென சூடுகின்றனர். ஆனால் அதுவும் தானே என்றுணர்ந்து அதுவாகவே ஆகிறான் அர்ஜுனன். அவன் பெற்ற பாசுபதம் தானே அம்மனநிலை.

ஐயமே இல்லாமல் இந்தப் பகுதி வெண்முரசின் சிகரங்களுள் ஒன்று. பாதி அத்தியாயத்தில் இதுவரை நடந்த அனைத்திற்கும் நியாயம் செய்யப் படுகிறது.
மாறா பிரமிப்புடன்,

செந்தில்நாதன். 
.