Saturday, September 29, 2018

சொற்பெயர்த்தல்




அன்புள்ள ஜெ

இந்த இணைப்பிலுள்ள கட்டுரையை வாசித்தேன். கடோத்கஜன் என்ற சொல் சரியானதா?


ராஜ்

அன்புள்ள ராஜ்,

இதுபற்றி பிரதி சரிபார்க்கும் ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்வியும் பதிலும் கீழே.

ஜெ,

கட + உத்கச - கடோத்கச என்பதுதான் அவன் பெயரென்றால்
கடோத்கசன் என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்?

ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன் சார்,

அதை உத்தேசித்தேன்


ஆனால் கடோத்கசன் என்றால் kad0thkasan என தமிழ் உச்சரிப்பு வருகிறது கடோத்கஸன் என்பதுபோல


சரியான படி எழுதினால் ஹ்கட்டோத்கச்சன் என்று எழுதவேண்டும்
ஒலி வரக்கூடாது. என நினைத்தேன். ஆகவே போட்டேன்


உச்சரிப்பு ஏறத்தாழ சம்ஸ்கிருத உச்சரிப்பை நெருங்குகிறது. ஆகவே இருக்கட்டும்


ஜெ

*

முதலில் இக்கட்டுரையிலுள்ள மேட்டிமைநோக்கு, அதன் விளைவான எள்ளல் ஏகத்தாளம் ஆகியவற்றைக் பாருங்கள். இவை எங்கிருந்து வருகின்றன என்று நோக்குக. நான் எழுதத் தொடங்கிய நாள் முதல் இது வந்துகொண்டே இருக்கிறது. இதைக்கடந்தே இந்நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.  

ஆயினும் இக்கட்டுரையில் மிக ஆழத்திலேனும் ஒரு மெல்லிய நல்லநோக்கம் இருக்கக்கூடும் என நம்புவதனால் இந்த விளக்கம்

இதேபோல முன்பும் பிழைசுட்டுதல் எள்ளல் பலரிடமிருந்தும் என வந்துகொண்டிருந்தன. அனைத்துக்கும் பலமுறை விரிவான விளக்கம் அளித்துள்ளேன். ஆனால் அது அவர்களை மேலும் சீண்டி மேலும் மேலும் தாக்குதலையும் எள்ளலையும் உருவாக்கியது. வெண்முரசின்மீதான ஒரு போராகவே அதை ஆக்கிக்கொண்டார்கள். எழுதுவதைவிட பெரிய வேலையாகப் போய்விட்டது அவர்களுக்கு விளக்குவது. ஆகவே நிறுத்திக்கொண்டேன்.
*

சம்ஸ்கிருதம் எனக்குத்தெரியும் என சொல்லிக்கொள்ளவில்லை. அது பல அடுக்குகள் கொண்ட மிகத்தொன்மையான மொழி. அதை அறிவேன் என்று சொல்லிக்கொள்வதும் சரி, அதைச்சார்ந்து ஆணித்தரமான சொல்லாடல்களுக்கு இறங்குவதும் சரி, ஒருவகை துணிச்சலாலேயே இயல்வது. எனக்கு அத்துணிச்சல் இல்லை. பெரும்பாலும் நான் நம்பும் சம்ஸ்கிருத அறிஞர்களிடம் கலந்தாலோசித்தே எழுதுகிறேன். தவறுகள் நிகழும், நிகழாமல் இதை எவராலும் எழுதமுடியாது. தொடர்ச்சியாகத் திருத்திக்கொண்டே செல்லவேண்டியதுதான்.

தமிழில் சம்ஸ்கிருதத்தை எழுதுவதில் உள்ள சிக்கல்கள் தமிழிலக்கியம் தோன்றிய நாள்முதல் பல தலைமுறைகளாக நீடித்து வருபவை. தமிழ் சம்ஸ்கிருதத்திற்கு வேறான உச்சரிப்பு முறை கொண்ட மொழி. சம்ஸ்கிருதத்தின் ஒலிகள் பல நம்மிடம் இல்லை, நம் மொழிக்கு அவை தேவையுமில்லை.

ஆகவே முற்காலங்களில் சொற்களை ஒலிமாற்றம் செய்து பயன்படுத்தினார்கள் மணிமேகலை  ‘வேத வியாதனும் கிருதகோடியும் ஏதமில் சைமினி எனுமிவ் ஆசிரியர்’ என்கிறது. வியாசன் வியாதனும் ஜைமினி சைமினியும் ஆகியிருக்கிறார்கள்.

அதன்பின் கம்பராமாயணம் சொற்களை ஒலித்திரிபு செய்து பயன்படுத்தியதைக் காண்கிறோம். ஏராளமான வடமொழிச் சொற்களை கம்பன் உச்சரிப்பை மாற்றி அப்படியே தமிழாகப் பயன்படுத்துகிறான்

இது எதற்கென்றால் தமிழுக்கு ஓர் ஒலியமைவு உண்டு. சம்ஸ்கிருதத்தை அப்படியே பயன்படுத்தினால் அந்த ஒலியமைவு அழிகிறது. குறிப்பாக இசையொழுங்குக்கு முதன்மை இடமுள்ள செய்யுளில் அது எழுந்து தெரியும்.

ஏறத்தாழ கம்பனின் காலகட்டத்திலேயே கிரந்த எழுத்துக்கள் வந்துவிட்டன. அவை இங்கே சம்ஸ்கிருதத்தை எழுத பயன்பட்டன. அதிலிருந்து சில எழுத்துக்கள் தமிழில் புகுந்தன. அவற்றில் ஸ ஜ ஷ ஆகியவை சாதாரணமாகப் புழக்கத்திலுள்ளன. தமிழின் ஒலியமைவுக்கு அணுக்கமானவையாக காலப்போக்கில் மாறிவிட்டன. க்ஷ போன்றவை அயலாக ஒலிக்கின்றன. நான் கூடுமானவரை க்ஷவை தவிர்க்கிறேன். ஆகவேதான் ஷத்ரியர் என எழுதுகிறேன். ஏனென்றால் அது நிறைய வரும் சொல்.

கிரந்த எழுத்துக்களைத் தவிர்ப்பது ஒரு பெரிய இயக்கமாக தமிழ்மறுமலர்ச்சிக்காலத்தில் உருவானது. நான் முற்றாக கிரந்த எழுத்துக்களைத் தவிர்க்கமுடியும் என நினைக்கவில்லை.ஆனால் தமிழின் ஒலியிசைவுக்கு உகக்காதபடி கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறேன் 

அதன் பின் சம்ஸ்கிருத ஒலிகளை எழுத கீழே கோடுகள் போடுவது, புள்ளிகள் வைப்பது, ஆங்கில எழுத்துக்களுடன் சேர்த்து எழுதுவது என பலவகையான உத்திகள் கையாளப்பட்டன. எவ்வகையிலும் அதை எழுதமுடியாதென்பது பின்னர் கண்டுகொள்ளப்பட்டது. 

சம்ஸ்கிருதச் சொற்களைத் தமிழில் எழுதுவதில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகளாக நான் கருதுவன சில உண்டு.

அ. அவை தமிழுக்கான ஒலித்திரிபுடனேயே அமையவேண்டும். கிருஷ்ணன் தானே ஒழிய க்ருஷ்ண அல்ல.

ஆ. அதேசமயம் முற்றாக தமிழ்ப்படுத்தி மூலத்திலிருந்து விலகுவதும் எனக்கு ஏற்புடையது அல்ல. கிருட்டினன் என எழுதமாட்டேன்

இ. சம்ஸ்கிருத ஒலியமைவு தமிழிலும் வந்தாகவேண்டும் என்று முயலக்கூடாது.சம்ஸ்கிருதச் சொற்களின் வேர்ச்சொல், புணர்ச்சிமுறை ஆகியவற்றைத் தமிழில் கொண்டுவர முடியாது. சம்ஸ்கிருதத்தில் கிருஷ்ணன் என எழுதும்போது வரும் கிரு வேறு க்ருஷ்ண என எழுதும்போது வரும் க்ரு வேறு.

இந்த அடிப்படைகளில் பெயர்களை தமிழில் பயன்படுத்தும்போது பல சிக்கல்கள் வருகின்றன. கூடுமானவரை அவற்றை கணித்து ஒருநிலைபாடு எடுத்து கையாள்கிறேன். அதில் பிழைகளும் இருக்கலாம்.

உதாரணமாக துஸ்ஸாஸனன் என்பதே சரியான சம்ஸ்கிருதச் சொல். தீய ஆணைகளைக் கொண்டவன், ஆணைகளிடப்பட இயலாதவன் என்னும் இருபொருள்கொண்ட சொல். [து+ ஸாஸனன்] உண்மையில் இச்சொல்லை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதவே முடியாது. அது ஸ அல்ல. மென்மையான நாநுனி ஸ. ஸமம் என்பதிலுள்ள ச அல்ல. ஸங்கரன் என்பதிலுள்ள ஸ.

இதை இப்படியே எழுதினால் தமிழின் ஒலியொழுக்குக்கு முரண்பட்டு நிற்கும். வாசகன் சொற்களை உள்ளூர உச்சரித்தபடியேதான் வாசிக்கிறான். அயலான உச்சரிப்பு அவனை மொழியிலிருந்து விலக்கும். நடையொழுக்கு அழியும். ஆகவே துச்சாதனன் என்ற சொல் கையாளப்படுகிறது. அதற்கு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் எந்தப்பொருளும் கிடையாது. ஆனால் வில்லிப்புத்தூரார் முதல் பாரதி வரை அனைவரும் பயன்படுத்தியது அது.

துரியோதனன் என்ற சொல்லை துர்யோத்தனன் என எழுதவேண்டும். பெரிய த. தீய ஆயுதங்கள்கொண்டவன், வெல்லமுடியா ஆயுதங்கள் கொண்டவன் என இருபொருள். ஆனால் அப்படி எழுதமுடியாது. அதே சமயம் யுதிஷ்டிரன் என்பதை யுதிட்டிரன் என எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்படி சொற்களையும் பெயர்களையும் பயன்படுத்துவதிலுள்ள உச்சரிப்புக் குழப்பங்கள் பல. அவற்றை அவ்வப்போது எதிர்கொண்டு அந்தத் தேவைக்கு ஏற்ப ஒரு முடிவு எடுக்கிறேன். அதற்கு தமிழில் இன்று நிலையான முறைமைகள் ஏதுமில்லை.

என் நோக்கம் மகாபாரதத்தை ஒரு தமிழ்நிகழ்வாக ஆக்குவது.மணிப்பிரவாளத்தை உருவாக்குவதல்ல. இன்றைய தமிழ்வாசகன் சம்ஸ்கிருத உச்சரிப்புகளிலிருந்து மிக விலகிவிட்டவன். வெண்முரசு தூயதமிழில் எழுதப்படுவது அதனால்தான். இதிலுள்ள எண்ணிலடங்கா இடர்களால் பிழைகள் உருவாகக்கூடும். அவற்றை மெல்லமெல்லவே களைய முடியும்.

*
கடோத்கஜன் என்னும் சொல். அதை சரியானபடி எழுதினால் க்ஹட்டோத்கச்சன் என எழுதவேண்டும். கடோத்கசன் என எழுதினால் தமிழ் உச்சரிப்பில் kadothkasan என்றே அமையும். ஏனென்றால் தமிழில் கசன் எனும் சொல்லில் உள்ள ச என்னும் எழுத்து ஸ ஆகவே ஒலிக்கும். கசப்பு, கசடு போன்ற சொற்கள் உதாரணம். சொல்நடுவே வரும் ச தமிழில் cha என்ற உச்சரிப்பை அடைவதில்லை.

கடோத்கஜன் என்ற சொல்லில் உள்ள க, டோ ஆகியவை அழுத்தமானவை. அவற்றை விட்டுவிடுவதே வழி. ஆனால் கசன் என எழுதினால் மொத்த உச்சரிப்பே மாறுவதுடன் தமிழில் தவறான பொருளும் அமைகிறது. ஆகவே cha என்ற உச்சரிப்புக்கு அணுக்கமாக ஜவைப் போடலாமென முடிவெடுத்தேன். அதை சம்ஸ்கிருதம் அறிந்த இருவருடன் கலந்து ஆலோசிக்கவும் செய்தேன்.

சம்ஸ்கிருதச் சொற்கள் உச்சரிப்பில் பொருள்மாறுபாடு கொள்பவை. புணர்ச்சிவழியாகவும் மாறுபாடுகள் கொள்பவை. ஆகவே மூலத்திலுள்ள பொருள் அமையும்படி தமிழில் கையாள முடியாதென்பதே என் புரிதல்.

*
பொதுவாக சம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் சொற்களின் உச்சரிப்பை ஒலிபெயர்ப்பது, சொற்புணர்ச்சி, வேர்ச்சொல் காண்டல் ஆகியவை சார்ந்து மிகைச்சொல்லாடல்களில் ஈடுபடமாட்டார்கள். ஏனென்றால் மிகச்சிக்கலான விரிவான இலக்கணநெறிகள் கொண்ட அம்மொழியில் சொற்களைப் பலவாறாகப் பிரிக்கமுடியும். பலகோணங்களில் வேர்ச்சொல் கொள்ளவும் இயலும். இலக்கண அறிஞர்கள் முறைப்படி அதைச்செய்யலாம். மற்றவர்கள் செய்வது வீண்வேலை.

பிறர் வெவ்வேறு தளங்களில் பேசிப்பேசி சொற்களை கூடுமானவரை அறியவே முயல்கிறார்கள். பேரறிஞர்கள் நடுவிலேயே சொல்லாய்வில் பெரும்பிழைகள் சுட்டப்படுவதுண்டு எனும்போது மொழியியல் அறிஞர்களல்லாதவர்களுக்கு எதையும் அறுதியிட்டு உரைக்கவோ எவரையும் எள்ளி நகையாடவோ தகுதி இல்லை என இந்த அறிவுத்தளத்தை அறிந்தவர் உணர்ந்திருப்பர். 

நான் வெண்முரசில் முயல்வது மொழியாக்கம் அல்ல. மறு ஆக்கம். ஆகவே இவற்றுக்கு என்வரையில் பெரிய இடமில்லை.
*
சம்ஸ்கிருதம் சார்ந்து இங்கே எழுந்துவரும் உளவியல்கள் மிகச்சிக்கலானவை. கேரளத்தில் சம்ஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமே. நான் கலந்துகொள்ளும் நான்கு சம்ஸ்கிருத அறிஞர்களும் மொழி ஆய்வாளர்கள். இங்கே அதை ஒருவகை பற்றாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆகவே பிறருடன் நிகழும் மிக எளிய சொல்லாடலிலேயே சீண்டப்படுகிறார்கள்.

அந்த தளத்திலேயே நோக்குக. ஒருவர் மகன் என்பதற்கு நந்தனன் என்று சொல்லலாம் என முன்பெப்போதோ ஏதோ ஒரு தளத்தில் சொல்லியிருக்கிறார். நான் அது நந்த எனும் வேர் கொண்டது, மகிழ்விப்பவன் என்று அதற்கு நேர்ப்பொருள் என விளக்கினேன். இன்னொரு சொல்லுடன் இணைகையில் [உதாரணமாக தேவகி நந்தனன் ] அது மகன் என்றாகும். தனியாக மகன் என பொருள் அளிக்காது என்றேன். அவர் புண்பட்டு, நான்காண்டுகளுக்குப்பின்  வந்து என்னை முட்டாள் என்று சொல்லி தலையிலறைந்து சலித்துக்கொள்கிறார். நான் எழுதியது இந்தியாவின் தலைசிறந்த சம்ஸ்கிருத அறிஞர் ஒருவரை கலந்துகொண்டபின்பு.

அதேபோல கடம் என்னும் சொல். சம்ஸ்கிருதத்தில் அச்சொல்லுக்கு கலம்,குடம் என்று பொருள் உண்டு. அரிதாக வண்டி என்றும். மோனியர் விலியம்ஸ் அகராதியிலேயே pitcher என்ற சொல்லுக்கு கடம் என்ற சொல்லும் அளிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கலம்,குடம் ஆகியவற்றுக்கு ஏறத்தாழ பொதுச்சொல்லே பயன்படுத்தப்படுகிறது.

இது ஒர் எளிய சொல்லாராய்ச்சி. இதற்கு எள்ளல் நக்கல் ஆங்காரம் ஆவேசம் என விவாதம் நிகழுமென்றால் எவர் இங்கே இலக்கியம் எழுதமுடியும்? இந்த உணர்வுகளுடன் எவர் போரிட முடியும்? ஆகவே இவற்றைத் தவிர்க்கவே எண்ணுகிறேன்.

வெண்முரசு தடுத்துநிறுத்தப்படவேண்டும் என ராமசாமி சொல்கிறார். பலமுயற்சிகள் அதற்கு நிகழ்ந்தன. அதைமீறி இப்படைப்பு  கிட்டத்தட்ட முடியவிருக்கிறது. இனி இது ‘authentic’ அல்ல என்ற விவாதம் கொஞ்சநாள் நிகழும். இலக்கியப்படைப்புகள் வேறு ஒரு தளத்தில் வாசிக்கப்படுகின்றன என இவர்கள் அறிவதேயில்லை