Thursday, May 30, 2019

விருஷசேனன்




இனிய ஜெயம் 

போர் துவங்கிய நாள் முதல் பெரும்பாலும் நள்ளிரவில் வெண் முரசு பதிவேற்றம் 
காணும் அந்த நேரமே அதை முதல் வாசிப்பு நிகழ்த்தும் வழமையை 
கை விடத் துவங்கி விட்டேன். எத்தனை துயிலற்ற இரவுகளைத்தான் 
தாங்குவது. இதோ இன்று காலை இன்றைய அத்யாயம் பேசிய 
வ்ருஷசேனன் வீழ்ச்சியை அதன் தாக்கத்தை இந்த மதியம் வரை
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்

கர்ணனுக்கு இணையாக நின்று அவனளித்த உயிர்க்கொடைகள் ஏதும் 
அர்ஜுனன் அறிய மாட்டான். அர்ஜுனன் கர்ணனுடன் மட்டுமல்ல கர்ணனாகப் 
பெருகி நிற்கும் அவன் மைந்தர்களுடனும் அதே வலிமையுடன் பொருதுகிறான்
இதோ இன்று மைந்தனும் வீழ்ந்து, சல்யரும் கைவிட 'கைவிட்டவர்களுக்காக 
அளித்து மேலும் பொருள் கொண்ட கொடை'அளித்த ஞானத்துடன் கர்ணன்
 தனித்து நிற்கிறான். ஒரு சொல்.ஒரே ஒரு சொல் புகழ் பெறுவாய் எனும்
 ஒரு சொல்லைக்கூட சல்யரால் கர்ணனுக்கு அளிக்க இயலவில்லை
கொடுத்துச் சிறந்த கர்ணனே கேட்ட பின்னரும்

தனது மைந்துக்கான எதுவுமே அவனுக்கு கிடைக்காமல் போகும் வண்ணம் 
அவனைக் கைவிட்டு,சிறுமையில் உழலச் செய்த குந்திக்கு, சல்யரால் அளிக்க 
முடிந்த ஒரே சொல் , எஞ்சி நிற்பவன் எந்த கர்ணனை கைவிட்டாயோ அந்தக்
 கர்ணன் மட்டுமே இனி அவன் ஒரே ஒருவன் மட்டுமே உன் குருதி மைந்தன் 
என்பதே. அதையும் கர்ணன் கொடை என அளித்து விட்டான். கர்ணனின் 
வாழ்நாளில் அவன் அனுபவித்த கைவிடப்படல்களிலேயே ஆகச் சிறந்த
ஒன்றை தந்தை வசமிருத்து பெற்றிருக்கிறான். நல்லது இனி அவன் அளிக்கவோ,
பெறவோ இங்கே இப்பூஉலகில் ஏதுமில்லை. அவன் கடன் இங்கே சமன்கண்டு 
விட்டது. எஞ்சி உள்ளது அவனது விடுதலை மட்டுமே. நீலனின் சொல்லேந்தி 
வரும் காண்டீபனின் அம்பில் நிலைபெறும் விடுதலை

கடலூர் சீனு