Saturday, May 18, 2019

வண்ணக்கடல் பாண்டிச்சேரி



இனிய ஜெயம் 

புதுவை வெண்முரசு கூடுகை 26 வழமை போல உற்சாகமாக நிகழ்ந்து முடிந்ததது.  தாமரைகண்ணன்  தன்னியல்பால் சத்ரியனாகவும் பிராமணனாகவும் பிளவாளுமை கொண்டு அலைக்கழியும் துரோணர்  பிராமணனாக மாற பரசுராமரின் யாகத்துக்கு செல்லும் நிலையில் சற்றே காலம் பிசக, துருபதன் வழியே அவமானப்பட்டு, ஆறாத வஞ்சத்தின் வடவைத் தீயை ஏற்றுக் கொள்வதன் வழியே முழு சத்ரியனாக மாறும் சித்திரத்தை பகிர்ந்து கொண்டார்.

துரோணரின் ஆளுமை உருவாக்கத்தில்  நிகழும் ஒவ்வொன்றையும் அத்யாயம் அத்யாமக பகிர்ந்து கொண்டார் திருமாவளவன்.  உதாரணமாக சற்றே எல்லை மீறுவது சத்ரிய குணம் என்றறிந்தே அக்னிவேசர் எல்லைக்குட்பட்டு மாணவர்களை கண்டிக்கிறார். இப்படி எல்லை மீறும் குணம் தன்னியல்பாக சத்ரியரில் உறைகிறது. பீமனுக்கு நஞ்சூட்ட தம்பியை காலால் எழுப்புவது போலவே, துரோணரும் துருபதனை ஒரு முறை காலால் எழுப்புகிறார். இப்படி பல தருணங்கள் பேசப்பட்டன. 

அரிகிருஷ்ணன்  துரோணரை ஊழ் தொடரும் தருணங்களையும், துருபதன் தோன்றும் முதல் காட்சி தொட்டு அவன் தந்திரமான அரசியல் கணக்குகளுடன் செயல்படுவதன் சித்திரங்களையும் பகிர்ந்து கொண்டார்.

குலம் எனும் கேள்வி முன் அவமானப்படும் துரோணர்,அதே கேள்வி கொண்டு கர்ணனை அவமதிப்பது, அன்று துருபதன் சபையில் கேட்ட அத்தனை கேள்வியும், மீண்டும் துரியன் கிருஷ்ணனின் தூது சபையில் கேட்கும் பொது, அதே அவையில் துரோணர் மௌனமாக இருப்பது,  துரோணர் கிருபிக்கு இடையிலான காதல் உரையாடல், துரோணர் தனது தந்தை விடூரருக்கு விடை கொடுத்து விட்டு ,திரும்பிப் பார்க்காமல் குருகுலத்துக்குள் ஓடி மறையும் சித்திரம், குசை அன்னை இறுதியாக துரோணருக்கு சொன்ன, பொறுமை கொள், கொடு, கருணை கொள், எனும் மூன்று நெறிகளையும் கைவிட்டு பாரதப் போரில், வெறி கொண்ட கொல்லும் இயந்திரமாக சுற்றியது, தனது குருதியின் உப்பு கொண்டு தன்னில் பதிந்திருக்கும் கழுவை காலாகாலமாக கரைத்தபடி வலியோடு காத்திருக்கும் ஆணி மாண்டவ்யர்  என பல உணர்ச்சி மிகு தருணங்கள் நோக்கி நீண்ட உரையாடல், த்ரோனரில் குடி கொண்ட காயத்ரி, அவருக்குள் வடவைத் தீயாக பெருகி, அந்த எல்லையும் கடந்து அது அஸ்வத்தாமனை ஏந்தி, சிரஞ்சீவியாக எஞ்சி நிற்கும் சித்திரத்தில் நிறைவு கண்டது. 

அதிசயமாக கூடலுக்கு மிக மிக தொலைவிளலிருத்து சிவாத்மா வந்திருந்தார் :) தொடர்ந்து கூடலுக்கு வந்து கொண்டிருப்பவர் போலவே அவர் பேசிக்கொண்டிருக்க, ஒரு நண்பர் வருகைப் பதிவேட்டை சரி பார்த்து, இந்த கூடுகை வரலாற்றில் மூன்றாம் முறை கூடுகைக்கு வந்திருக்கும் சிவாத்மா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன் என முழங்க, கூடுகை மொத்தமும் கைத்தட்டி ஆர்ப்பரித்தது. சிவாத்மா அதை மேடைப் பெருங்கலைஞர்  போல உடல் வளைத்து வணங்கி ஏற்றுக் கொண்டார்.  

நண்பர்கள் கூட இரவுணவும் சிரிப்புமாக முடிந்தது மற்றொரு கூடுகை. 

கடலூர் சீனு