Monday, May 20, 2019

சாமானியர்களின் உரையாடல்கள்

நாவலில் சாமானியர்களின் உரையாடல்கள் வழியாகத் திரண்டு வரும் சில அறிதல்கள் வெண்முரசில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இது மிக முக்கியமான ஒன்று. ஒரு வகையில் நிகழ்வுகளையும், ஆளுமைகளையும் தொகுத்தறியவும், அவற்றின் ஒழுக்கினை, காலாதீதமான தொடர்ச்சியை வாசகருக்கு அறிவிக்கவும் உதவும் அபாரமான உத்தி அது. ஆயினும் அது யதார்த்தமானதும் கூட. மிகச் சிக்கலான தத்துவ, ஆன்மிக, நூல் நவிலல்களுக்குப் பிறகு கண்டடையப் படக்கூடிய அல்லது அவற்றாலும் கண்டறியப்படா ஒன்றை, மானுடத்திரள் அவர்களிடம் திரண்டு எழும் கூட்டு மனதினால் எளிதாகக் கண்டடையக் கூடும். சாமானியன் ஒருவன் அத்திரளின் பகுதியாக நிற்பதாலேயே அதை அறியவும், தெளிவாக உரைக்கவும் கூடும். அவ்வாறு அறியப்பட்டவை தான் இன்றும் நம்மிடம் புழங்கி வரும் ஒற்றை வரி ஞானங்கள். 

அவ்வாறு எழுந்து வந்த ஒரு அறிதல் இருட்கனி 40 ஆம் அத்தியாயத்தில் வந்துள்ளது. அடுமனைச் சூதர்கள் தங்கள் பணியிடப் பேச்சின் மூலமாக வந்தடையும் நிலமங்கையான சீதையின் குருதிப்பசி பற்றிய அறிதல். அதன் இறுதியில் அவர்களில் ஒருவன் கூறுவது தான் இதன் உச்சம். 'நிலமங்கையும் அனல்மங்கையும்' என்கிறார் ஒருவர். ஆம் அனலில் எழுந்தவளல்லவா திரௌபதி!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்