Saturday, May 25, 2019

கண்ணோட்டம்



வெண்முரசில் திருக்குறள் வருவது ஒன்றும் புதிதல்ல. பலமுறை குறள் என்னும் கவிதையை அணுகி துலக்கும் வகையில் எடுத்தாளப்பட்டிருப்பது ஜெ வின் கைவண்ணம். அபூர்வமாக ஒரு முழு அத்தியாயமே வருவது இருட்கனியில் நிகழ்ந்துள்ளது. முந்தைய இரவு கர்ணனை கொன்றாக வேண்டும் என அர்ஜுனனிடம் ஆணையிட்டு அகலும் யுதிஷ்டிரர்மறு நாள் வந்து அவனிடம் கர்ணனைப் பற்றித் தான் கூறியவற்றுக்கு நாணுகிறார்(இருட்கனி 18). அப்போது கர்ணனை பற்றி கூறுகையில் அவனுடைய கண் கனிந்து முலையூட்டும் அன்னையுடையவை என்கிறார். அக்கனிவினூடாக தான் நோக்குபவரின் உளம் புகுந்துஅவராக ஆகி நின்று அவர் துயருணர்ந்து அவருக்கு அருள்கிறான் என்கிறார். எனவே தான் அது பேரளி!! கண்ணின் ஓட்டம் அளியாக மாறுமென்றால் அதுவே கண்ணோட்டம்!!! திருவள்ளுவர் ஒரு முழு அதிகாரத்தையும் இதற்காக அளித்துள்ளார். அந்த அதிகாரத்தின் முதல் பாடல்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு

இங்கே காரிகை என்பது பெண் என்ற பொருளில் அல்லஅழகு என்னும் பொருளிலேயே பயின்று வந்துள்ளது. அதுவும் சாதாரண அழகல்லபெருங்காரிகை - பேரழகு. அதுவும் போதவில்லை வள்ளுவருக்குகழி பெருங்காரிகை என பேரழகுக்கும் மேல் ஒரு அடைமொழி சேர்க்கிறார்!! இங்கே யுதிஷ்டிரரும் கர்ணனை பேரழகன் என்று தான் விதந்தோதுகிறார். இப்போதல்லமுதன் முதலாக குருகுல கல்வி நிறைவு நாளில்,  திறன் காட்டும் களத்தில் அவன் வந்து அர்ஜுனனை அறைகூவிதன் ஆருயிர் தோழனைக் கண்டடைந்த அந்த தினத்தில் அவனைக் காணும் முதற்கணத்திலேயே அவருக்குத் தோன்றுவது இவன் எத்தனை அழகன் என்பது தான்!! இன்று அந்த பேரழகிற்கே காரணம் கண்ணோட்டம் உடைய அவ்விழிகள் தான் என்கிறார்!!! அந்த அத்தியாயத்தின் மொத்த பாடல்களையும் மீண்டும் ரசித்து வாசிக்க இயன்றது. அதற்கு காரணம் கண்ணோட்டம் என்பதற்கு இருட்கனி அளித்த விளக்கமே!!! நன்றி ஜெ.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்