Saturday, November 2, 2019

பகுதி 4 வெண்முரசு - குருஷேத்திரப் போர் - தர்மனும் அறமும்.




10. துரியோதனனின் பரந்த உள்ளத்தினால் ஆன பயன் என்ன?
   
    துரியோதனன் பல நண்பர்களைக்கொண்டிருந்தான். அவன் சொல்லிற்கு மறு பேச்சு பேசாத நண்பர்கள். அதில் தலையானவன் கர்ணன்.  மேலும் கிருதவர்மன், அஸ்வத்தாமன், பூரிசிரவஸ், ஜெயத்ரதன் என   உயிர் நண்பர்களைக்கொண்டவன் அவன். தருமருக்கு இப்படி நெருங்கிய நண்பர்கள் குழாம் இருப்பதாகத் தெரியவில்லை.  அதைப்போன்று துரியோதனனின் சகோதரர்கள் அவன் மேல் அளவற்ற பாசம் கொண்டவர்கள். தன் தமையன் பொருட்டு தம் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். தன் தமையன் கருத்துக்கு எதிராக மறு சிந்தனைகூட கொள்ளாதவர்கள். ஆனால் தருமனின் சகோதரர்கள் அவரிடம் பல சமயங்களில் கருத்து  மாறுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.   அவர்களுடைய விமர்சனத்திற்கு அடிக்கடி ஆளாகுபவராக தருமர் இருக்கிறார்.  பலசமயங்களில் அவர் அவர்களால் இடித்துரைக்கப்படுகிறார்.  இந்த வகையில் துரியோதனன் சிறப்பு கொண்டவன் என்று நமக்கு தோன்றுகிறது.
     
தன் சொல்லை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும் சகோதரர்களை, நண்பர்களைக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு அவர்கள் அனைவரின் நலன்களுக்கு  சிறப்புகளுக்கு குறை நேராதபடி தம் செயல்கள் இருக்கும்படி  பார்த்துக்கொள்வது கடமையாகிறது.  ஆனால் துரியோதனனின் மண் விழைவுக்கு அவர்கள் அனைவரும் தம் தன்னறம்புகழ், ஆயுள், ஆகியவற்றை பலிகொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.   சிறுவர்களாக இருக்கும் துச்சாதனனுக்கு பீமன் மீது  எந்த வஞ்சமும் இல்லை. மாறாக பீமன் துரியோதனனின் ஒரு மாற்றுருவைப்போல அவனுக்கு இருந்திருக்கிறான். அதைப்போன்றே மற்ற அனைத்து தம்பியரும்.  ஆனால் தன் தமையன் பீமன் மேல் வஞ்சம் கொண்டிருக்கிறான், அதில் எவ்வித தர்க்க ரீதியான காரணமும் இல்லை என தெரிந்திருந்தாலும் பீமனுக்கு நஞ்சிடும் கொடும் செயலைச் செய்கிறார்கள். தனக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள், அது எத்தகைய அற மீறலாக இருந்தாலும் கூட சரியென இருக்கும் தம்பியரை பீமனின் கதைக்கு இரையாக்கியதுதான் துரியோதனன் அவர்களுக்கு பதிலாக தந்தது.  மற்றபடி அவர்களுடன் உண்டாடி, குடித்து, அரவணைத்து அவன் இருந்து காட்டும் அவன் அன்பிற்கு என்ன பொருள் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

   பாண்டவர்களின் பிள்ளைகளை பாசத்துடன் பார்த்துக்கொண்டான் என்பது துரியோதனனின் சிறப்பு என்பது ஐயமில்லை.  ஆனால் அதற்கு முன்னால் அவன் அவர்களுடைய தந்தையர் தாயிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி, அவர்களை  சபை நடுவில் பெரிதாக அவமதித்து,   ஏதிலிகளாக பதிநான்கு ஆண்டுகள் கானக வாழ்விற்கு துரத்தியவன். பசுவினைக் கொன்று அதன்  கன்றுக்கு  பால் கொடுத்து வளர்ப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை.    பாண்டவர்களின் பிள்ளைகள் அஸ்தினாபுரத்தில் இருப்பது என்ற முடிவு யார் எடுத்திருந்தாலும் அது அரசியலில் நுண்ணறிவு கொண்டவர்கள் எடுத்த முடிவாகத்தான் இருக்கும். துரியோதனன் அல்லது அவனைச் சார்ந்த சகுனி போன்றோரின் மீது சிறிதளவு ஐயமிருந்தாலும் பாண்டவரின் பிள்ளைகளை இப்படி அஸ்தினாபுரத்திலேயே அவர்களின் பொறுப்பிலேயே வளர விடுவதுதான் சரியானது.   துரியோதனனின் ஆட்கள் அவர்களுக்கு ஊறு எதுவும் செய்ய நினைத்தால் அது பெரிய அளவில் அவனுக்கு அவன் குடுப்ப உறுப்பினர்கள் மட்டும் மக்களிடமிருந்து எதிர்ப்பை கிளப்பியிருக்கும்.  இங்கே சொல்ல வருவது துரியோதனன் பாசமற்றவன் என்பது அல்ல. ஆனால் அவன் பாசத்தினால் விளைந்த பயன் என்ன என்பது குறித்துதான் நமக்கு வினா எழுகிறது.   பாண்டவ மைந்தர்கள் துரியோதனன் மேல் அன்பு  கொண்டவர்களாக இருந்தார்கள் மேலும் அவன் கொல்லப்பட்ட விதத்தை அவர்கள் ஏற்காமல் வருந்தினார்கள் என்பதைக் காண்கிறோம். அதற்கு காரணம் துரியோதனனின் பாசம்  என்று கூறும் ஒருவர், பாண்டவர்கள் எவ்வித வஞ்சத்தையும் தம் பிள்ளைகளின் நெஞ்சினில் ஏற்றியிராத பண்பினையும் புரிந்துகொள்ள வேண்டும். 
           

    ஒருவேளை துரியோதனன் போரில்  எளிதில்  வெற்றி பெற்று விரைவில் போரை முடித்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம். அதற்கு  காரணங்கள் இருக்கின்றன. ஒன்று துரியோதனனின் பெரும்பலம் வாய்ந்த படைக்கூட்டு.  மற்றொன்று பாண்டவர்கள் பெரிதினும் மதிக்கும் பீஷ்மப் பிதாமகர் குரு துரோணர், கிருபர் போன்றவர்களை பாண்டவர்கள் வெல்லத் துணியமாட்டார்கள் என நினைத்திருக்கலாம்.    போர்  அணிவகுப்பை கண்ட போழுதிலேயே பாண்டவர்கள் போரை கைவிட்டுவிடுவார்கள் என்று  அவன் நினைத்திருக்கலாம். அல்லது ஓரிரு நாட்களில் பெரும் இழப்புகள் இன்றி முடிந்திருக்கலாம் என அவன் நினைத்திருப்பான். இதுவரை தோல்வியே காணாத பீஷ்மர் துரோணர் போன்ற பெரு வீரர்களை வெல்ல முடியாது என்று பாண்டவர்கள் போரை கைவிட்டுவிடுவார்கள் என நினைத்திருக்கலாம்.  தருமன் இளகிய மனதினால்  போரின் இழப்புகளைப் பார்த்து மனம் வருந்தி திரும்பிவிடுவான் என்றும் அவன் எண்ணியிருக்கலாம். 

     ஆனால் பாண்டவர்கள் எக்காரணம் கொண்டும் வெற்றியல்லாமல் இப்போரிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதை அவர்களின் மகனான அரவானை களப்பலி கொடுப்பதின் வாயிலாக தெளிவாக போரின் முதல் நாளிலேயே காட்டிவிடுகின்றனர். தன் மகனையே பலிகொடுக்கத் துணிந்தவர்கள் எவ்வித இழப்புகளையும் பொருட்படுத்தாது போரிடுவார்கள் என்பது அப்போதே தெளிவாகிவிட்டது . ஆகவே துரியோதனன் இப்போர் யார் வெற்றி பெற்றாலும் இருபக்கமும் பேரிழப்புகளை உண்டாகும் என்பதை அறிந்திருக்கவேண்டும். பின்னர் அவன் இழப்புகளுக்காக எவ்வளவு வருந்தினாலும் நாம் அதை எப்படி எடுத்துக்கொள்வது?   கௌரவ மைந்தர்களின் முதல் ஒருவன் கொல்லப்படும்போதே அல்லது தம் தம்பியரில் முதல் ஒருவன் கொல்லப்படும்போதே அவன் போரை நிறுத்தியிருந்தால்  அவன் பாசத்தை மெச்சியிருக்கலாம்.  

       பாண்டவர் மைந்தர்களைக் கொல்லத் தயங்குகிறான் என்பதில் அவர்கள் மீது அவன் கொண்டிருந்த பாசம் தெரிகிறது. ஆனால் அவர்கள் கொல்லப்படுவதற்கான சூழலை வெகு எளிதாக துரியோதனன் தடுத்திருக்கலாம். மைந்தர்களின் முன்னால்  போர் என்ற மதம் கொண்ட யானையை அனுப்பிவிட்டு ஐயோ இறந்துபோகிறார்களே என்று கவலைபட்டால் அது உண்மையான கவலையாக இருந்தால்கூட அது பொருளற்று போய்விடுகிறது அல்லவாஎவ்வளவு பாசம் அவன் வைத்திருந்தாலும்  அதையெல்லாம் அவனுடைய அகங்காரத்திற்கு, அவன் மண் விழைவுக்கு , அவன் பாண்டவர்கள் மேல் கொண்டிருந்த வஞ்சத்திற்கு முன்பு சிறிதெனப்  போய்விடுகிறது. ஆகவே அவன் பாசம் எல்லாம் வெறும் புலம்பல்களாக தேய்ந்துவிடுகிறது.  

    அவன் தந்தை அவன் காலைப்பிடித்து போரை கைவிடும்படி கோருகிறார். அவன் தங்கை துச்சளைக்கு எவ்விதமான சமாதானமும் சொல்ல இயலவில்லை அவனால்.  அவன் துணைவிஅவன் தம்பியர் துணைவியர்தம் பிள்ளைகள் உயிர் காக்கவேண்டி விடுத்த போர் நிறுத்த கோரிக்கைகள்  அவன் காதில் விழாமல் போய்விடுகின்றன.   

     கர்ணன் மேல் அவன் காட்டும் நட்பு பெரிதுதான்.  ஆனால் அந் நட்பை  பாண்டவர்க்கு எதிரான ஒரு படைக்கலம் எனப்  பயன்படுத்திக்கொள்கிறான் என  ஒருவர்  குற்றம் சாட்டிவிட முடியும். அவனுக்கு நட்பைவிட பாண்டவரை தோற்கடிப்பதுதான் முக்கியமாகபட்டிருக்கிறது.  போருக்கு முந்தைய அவைகூட்டத்தில் கர்ணன் ஒரு சூத்திரன் அவன் போரிடக்கூடாது என பீஷ்மர் முதலானோர் கூறும்போது பெரிதாக எதிர்ப்பு காட்டாது இருக்கும் இடத்தில் துரியோதனனின் நட்பு குறைபட்டு நிற்பதாகவே தோன்றுகிறது.    

    வியாசர் பாரதத்தில் இல்லாத ஒன்று வெண்முரசில் உள்ளது.  அது துரியோதனன் கர்ணனின் பிறப்பு ரகசியம் அறிந்தவனாக இருக்கிறன் என்பதே.  போரின் இறுதியில் துரியோதனன் குந்தி கர்ணனை ஏற்றுக்கொண்டிருந்தால் நான் நாட்டை கர்ணனுக்கு விட்டுக்கொடுத்திருப்பேன் என்று கூறுவதாக உள்ளது.   குந்தி கர்ணனை ஏற்று இருந்தாலும் தாம் அவனை மகனெனக் கொண்டதாக பாண்டுவின் ஒப்புதல் இல்லாதிருப்பதால் அவன் பாண்டவன் என ஆக மாட்டான். அவனுக்கு அஸ்தினாபுரத்தின் அரசனென ஆக எவ்வித அரச நெறியும் இல்லை.  அப்படி துரியோதனன் உண்மையிலேயே நம்பியிருந்தால்  நேராக தருமனிடம்  சென்று இதோ நம் அனைவருக்கும் மூத்தவன் கர்ணன் அவனிடம் நாட்டை ஒப்படைப்போம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அவன் செய்தது என்ன? கர்ணனை அவன் உடன் பிறந்த தம்பிகளை கொல்லும்படி போரில் ஈடுபடுத்தியதுத்தான் அல்லவா?   ஒரு உண்மையான நட்புகொண்ட ஒருவன் தன் நண்பனை அவன் தம்பியரைக் கொல்லும் நிலைக்குத்  தள்ளமுடியுமா?     கர்ணனை வஞ்சித்தவள் என்று  குந்தியை சொல்லமுடியும். அவ்வாறு  தருமனைக்  கூற முடியுமாதருமனுக்கு கர்ணனுக்கும் வேறு பகை எதுவும் இல்லை.  அப்படியிருக்கையில் தருமனின் நாட்டை அபகரித்து  அவன் மனைவியை அவமதித்து காட்டிற்கு அனுப்புவது தருமனின் தமையன் கர்ணனுக்கு உவக்கும் என்று நினைத்தானாஅப்படி கர்ணன் விழைந்தாலும் அதை உண்மை நண்பன் ஒருவன் அவ்வாறு நடக்கவிடுவானா?  

     துரியோதனன் மிக அருமையாக நாட்டை ஆண்டிருக்கிறான். அதனால் அவன் நாட்டை தருமன் ஆண்டால் மட்டும் என்ன பெரிதாக மாறுதல் வந்துவிடப் போகிறது என்று கூறலாம்.    பீமனே ஒரு இடத்தில் தருமனிடம் இவ்வாறு  கூறுகிறான்.  இது எப்படி இருக்கிறதென்றால் இன்னொருவர் பிள்ளையை கடத்திவந்து நான் சிறப்பாக வளர்த்தேன் ஆகவே இப்பிள்ளை எனக்குத்தான் சொந்தம் என்று சொல்வதைப்போன்று உள்ளது. வனவாசம்  எல்லாம் முடிந்தும் பதிநான்கு ஆண்டுகள் கழித்துவந்து நாடு கோரும் தருமனிடம் அஸ்தினாபுரத்தின் வாக்குறுதிப்படி நாடு ஒப்படைக்கப்படவில்லை. இப்போது புதிதாக துரியோதனன், பாண்டவர்கள் பாண்டுவின் வாரிசாவார்களா என, (கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னர்) கேள்வி   எழுப்புகிறான்.  தருமன் பாரத மன்னர்களின் ஒப்புதலுடன்  அஸ்வமேத யாகம் செய்து தன்னை மாமன்னன் என்று நிறுவியவன். இப்போது  அவர்கள் ஷத்திரியர்கள் இல்லை என்று கூறுகிறான்.

      துரியோதனன் தம் மைந்தர், பாண்டவர் மைந்தர் எனப்பாராமல் பெரும் பாசம் காட்டி வளர்த்தவன்தான்.  தம் தம்பியரை ஒரு தந்தை என அன்பு பொழிந்து வளர்த்தவன்தான். தன் உடன் நின்றவர்களிடம் மிகுந்த நட்பு பூண்டு அவர்கள் கேட்காமலேயே உதவியவன்தான்.  நாட்டை எவ்விதக் குறையுமின்றி நேர்மையோடும் திறனோடும் ஆண்டவன்தான். ஆனால் இந்த நற்குணங்கள் எதுவும் அவன் மண் விழைவை , அகங்காரத்தை, வஞ்சத்தை சற்றும் குறைக்கமுடியாமல் போய்விட்டது.   இறந்தால் கூட அவன் வஞ்சம் தீராது என்று அஸ்வத்தாமன் கிருபர் நினைக்கின்றனர்.  அதனால் அவர்களால்  உபபாண்டவர்கள் கொல்லப்பட்டதற்கான  பழியையும் அவன் கொண்டிருக்கிறான். 

 11.    துரியோதனனின் உளவியல்

  ஒரு ஆறு ஏன் இந்த திசையில் ஓடி இந்த இடத்தில் கடலில் கலக்கிறது என்று விளக்கமளிக்க முடியாது என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் ஒரு புவியியல்  வல்லுனர் அதற்கான விளக்கத்தை முற்றிலுமாக அளித்துவிட முடியும். அதன் நீர்ப்பிடிப்பு இருக்கும் பகுதி அப்பகுதியில்  மலை சரிந்திறங்கும் அமைப்பு. அது பின்னர் ஓடி  வரும் நிலப்பரப்பின் புவியியல் கட்டுமானம்  ஆகியவற்றைக்கொண்டு ஒரு நதி ஏன் இப்பகுதிகள் வழியாக வந்து இவ்விடத்தில் கடலை அடைகிறது என்று விளக்கிவிடலாம்.  அதைப்போன்று  மனிதன் ஒருவன் அவன் உளவியல் ஏன் இப்படி அமைந்தது ஏன் இவ்வாறு செயல் புரிந்தான் என்பதை ஓரளவு கணிக்கலாம் என்று தோன்றுகிறது. அதற்கு அவன் அன்னை வயிற்றில்  கருவாய் உதித்து குழவியெனப் பிறந்து சிறுவனென வளர்ந்து பின்னர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த அனைத்தும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  ஆனால் நாம் பிறறைப்பற்றி அறிந்திருப்பது மிகக் குறைவு. ஆகவே அவரின் உளவியல் ஏன் அப்படி இருக்கிறது என்பதை நம்மால புரிந்துகொள்ள  முடியாமல் போகிறது. 
  
ஆனால் வெண்முரசு நமக்கு மகாபாரதக் காலத்திய நிகழ்வுகளை தெளிவாக துல்லியமாக பார்க்கும் சித்தியை வழங்கி இருக்கிறது. அதை வைத்து துரியோதனனின் உளவியல் உருவானவிதத்தை  நாம் புரிந்து கொள்ள முயலாம் என நினைக்கிறேன். ஒருவரின் உளவியல் உருவாவதில் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல் பெரும்பங்கு வகிக்கும்.  துரியோதனனின் தந்தையான    திருதராஷ்டிரன்பெருங்குணம் கொண்டவர். தம் சகோதரர்கள்  பாண்டு மற்றும் விதுரனை ஒரு தந்தையின் பரிவோடு பாசம் காட்டியவர்.  தாம் பெரிதும் விழைந்த அஸ்தினபுர அரியணைபாண்டுவுக்கு சென்றதைஎவ்வித மனக் கசப்பும் இன்றி ஏற்றுக்கொண்டவர். பின்னர் தன் மகன் அரியணை ஏறுவான் என்ற  எதிர்பார்ப்பு பிழைத்து தருமனுக்கு அரியணை சென்றபோதும் துயரம் கொள்ளாதவர்.   அவர் மனைவி  காந்தாரியின்   தாயுள்ளம் பரந்து விரிந்து அனைவரையும் தம் பிள்ளைகளென ஏற்றுக்கொள்வது. அவர்கள் உள்ளங்களில்  வஞ்சமென எதுவும் எப்போதும் எழுந்ததில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் பிள்ளையான துரியோதனன்  வஞ்சதில் ஆட்கொண்டுவிட்ட விதம் ஆராயத்தக்கதாகும்.

     
ஒரு குழந்தையின் ஆளுமை அது தாயின் வயிற்றில் இருக்கும்போதே உருவாக ஆரம்பிக்கிறது.   காந்தாரி துரியோதனனை கருவில் சுமந்து இருக்கும்போதே தான் ஒரு பேரரசனை  சுமந்திருக்கிறோம் என்ற பெருமிதத்தில் இருந்திருக்கிறாள்.   அப்பெருமிதம் அக்கருவுக்கு சிறிதளவாவது சேர்ந்திருக்கும்.  குழவி பத்து மாதங்களில் பிறப்பதற்கு தயாராகிவிடும். ஆகவே அதன் உளவியல் அத்தனை நாட்கள் மட்டுமே கருவரையில் இருப்பதற்கானது. ஆனால் துரியோதனன் பிறப்பு நிகழ மேலும் பல மாதங்கள் ஆகிவிடுகிறது. உரிய நேரத்தில் பிறப்பு ஏன் நிகழவில்லை என நமக்குத் தெரியாது ஆனால் துரியோதனன் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தான் என்பதால் பத்து மாதங்களில் கரு முழுமையாக வளர்ந்து பிறப்பெடுக்க தயாராகிவிட்டது என்று நாம் அறிந்துகொள்ளாலாம். ஆகவே பின்னர் இருந்த நாட்களெல்லாம் அக்குழவி  கருவறையை  ஒரு சிறையென  உணர்ந்திருக்கும். குழந்தை பிரசவமாகமால் இருப்பதினால் காந்தாரி அடைந்த மன அழுத்தங்களும் அக்குழவியை பாதித்திருக்கும். இது துரியோதனனுக்கு ஒரு இறுக்கமானகொண்டது விடாத பிடிவாத  மன நிலை அமைவதற்கான சூழலாக இருந்திருக்கும் என நாம் கருதலாம்.
    
பிறக்கும்போதே பெரிதான உருவத்துடன் அசாதாரண நிகழ்வாக அவன் பிறந்த காரணத்தினால், அவனை வளர்த்த அன்னையர் செவிலியர் சற்று பயத்துடனே அணுகியிருப்பர்.  அவனை சிறு மகவென பார்க்காமல் ஒரு அரசனைப்போல் பணிந்தே அவனிடம் பழகி இருப்பார்கள். அவன் தம்பியர் உடலில் அசாதாரணமாக வளர்ச்சியடைந்திருக்கும் தம் தமையனை தம் தந்தைக்கு நிகராக கருதி அச்சமும் மதிப்பும் காட்டி இருப்பார்கள்.  ஆகவே அவன் நிமிர்ந்தே இருப்பவனாக இருந்திருப்பான். தன் வயதொத்தவர்களிடம் பணிந்து போகவேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது.  அவனுக்கு இணையான உடல் பலம் கொண்டவனையும்  அவன் பார்த்திருக்கமாட்டான்.    
  
நாம் இப்போது பீமனை இங்கு ஒப்பிட வேண்டியதாக இருக்கிறது.  பீமனும் அதீத வளர்ச்சி பெற்று பெரும்பலத்துடன் சிறுவனாக இருக்கும்போதே திகழ்ந்தவன்தான் . ஆனால் அவன் தருமனின் தம்பி அவனுக்கு தமையன் என்ற மதிப்பளிக்கவேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டிருப்பான். அதனால் அவனுடைய அதீத பலம் அவனுக்கு தலைமையுணர்ச்சியைத்  தராமல் தொண்டாற்றும் உள்ளத்தை அளிக்கிறது. அதனால் பிற்காலத்தில் எப்போதும் அவன் தன் உடல் பலத்தின் காரணமாக   பெருமிதம் காட்டியதே  இல்லை.  தருமனை பார்த்து, பின்தொடந்து வளர்ந்த அவன் பணிவு கொண்டவனாகவும் அறத்தைக் கைகொள்பவனாகவும் உளவியல் அமையப்பெற்றவனாக  இருக்கிறான். 


     துரியோதனன் நீ தான்  அடுத்த மன்னன் என்று சிறு குழவியிலிருந்தே சொல்லி வளர்க்கப்பட்டவன். சகுனி தன் பாரத நாட்டை அரசாளும் பெருங்கனவை துரியோதனன் மேல் முழுதுமாக இறக்கிவைத்திருக்கிறான். சகுனியின் பெருவிழைவு இப்போது துரியோதனனுடையதாக மாறிவிட்டது.  தான் அஸ்தினாபுரத்தின் மாமன்னன் ஆவது எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாதது என்று துரியோதனனாகிய அச்சிறுவன் இருக்கும்போதுதான், பாண்டவ மைந்தர்கள் அஸ்தினாபுரம் நுழைகிறார்கள்.  பாண்டவர் நாடு திரும்பும் நிகழ்வு அச்சிறுவனின் மனதில் பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.  இதுவரை தான்தான் அஸ்தினாபுர அரச இளையோரில் மூத்தவன் என்றிருந்த நிலை மாறி தருமன் மூத்தவன் என்றாகிறது.  தருமனும் அபோது வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், உடல் மொழியும் கொண்டவனாக நடந்துகொள்கிறான். தருமனைக்  கண்ட அந்த போதிலேயே எரிச்சல் அடைகிறான் துரியோதனன். அடுத்து தனக்கு  இணையான உடல் அமைப்பும் பலமும் கொண்ட பீமன் அவன் உள்ளத்திற்கு அடுத்த அதிர்ச்சியாக அமைகிறான்.    அவன் மனதில் அப்போது எழும் வஞ்சம் பின்னர் பீமனை மற்போரில் தோற்கடித்த பின்னர் குறைந்துவிடுகிறது.  பணிவும், வெகுளித்தனிமையும்  நிறைந்த பீமனை அவனுக்கு பிடித்துப்போகிறது. ஆனால் பின்னர் கானாடலில்  அவன் பீமனால் கரடியின் பிடியிலிருந்து காப்பாற்றப்படுகிறான்.  இதுவரை தான்தான் அனைவரையும் காப்பவன் என்ற நிலையிலிருந்து வீழ்ந்து மற்றொருவனால் காப்பாற்றப்பட்டவன் என்று அமைவது அவன் உளவியலை பெரிதாக பாதிக்கிறது. பீமன் அவன் தலைமைக்கு நேரடியான போட்டியாளன் என்று அவன் ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. அதன் காரணமாக முதலில் குறைந்திருந்த பீமன் மேலான வஞ்சம் பெருகி எழுந்து அவன் சிந்தை முழுதும் ஆக்கிரமிக்கிறது. அந்த வஞ்சமே பின்னாட்களில் அவன் செய்யும் அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கிறது. 

   தருமன் அஸ்தினாபுர அரியணையை உரிமை கோர முடியும் என்று சகுனி அறிந்திருக்கிறான். திருதராஷ்டிரரின் பேருள்ளம் அதை அனுமதித்து விடலாம்  என்று அவன் சரியாக யூகிக்கிறான்.   இதைத் தடுக்க ஒரே வழி திருதராஷ்டிரர் துரியோதனன் மேல் கொண்டிருக்கும் பாசம்.  அதற்காக  துரியோதனனுக்கு  அஸ்தினாபுர அரியணையை விட்டுக்கொடுக்கும் எண்ணம் சற்றும் வரக்கூடாது என்று  துரியோதனனுக்கு  மண் விழைவை தூண்டி அதை பெரிதாக வளர்த்துவிட்டிருக்கிறான்.   இப்படி உருவாகிய அகங்காரம், மண் விழைவு, மற்றும் பீமன் மேலான வஞ்சம்துரியோதனனின் உளவியலைக் கட்டமைத்து அவன்  வாழ்வை வழி நடத்தி செல்கிறது.  
    
திருதராஷ்டிரரின் கண்டிப்பு பானுமதியின் அன்பு போன்றவை அவன் உள்ளத்து வஞ்சத்தை அவ்வப்போது மட்டுப்படுத்தினாலும், மீண்டும் மீண்டும் சிறு  தூண்டலுக்கே அது அவன் உள்ளதில் கிளைத்தெழுந்து பரவி ஆக்கிரமித்துக்கொள்கிறது.    அவனுடைய இந்த உளவமைப்பே புறத்தில்  கலித்தெய்வமென உருவகித்து நிற்கிறது. பெரியவர்கள் கூறும் அறவுரைகள், திருதராஷ்டிரரின் கெஞ்சல், பானுமதியின் கண்ணீர் எல்லாம்  மாற்றமுடியாத அவன்  உள்ளத்தை அவன் குருஷேத்திரப் போர்க்களத்தில் காணும் பேரிழப்புகளும் மாற்ற முடிவதில்லை. அவன் இறந்த பின்னும்  அழியாதிருக்கும் அந்த வஞ்சம் அஸ்வத்தாமன் எரி அம்பின் வழியாக எழுந்து அஸ்தினாபுரத்தின் கருக்குழவிகளையும் விடாது கொன்றமைகிறது.

தண்டபாணி துரைவேல்