Sunday, November 10, 2019

நீர்ச்சுடர் - இறந்தோரை இல்லாதாக்குவது.



       இறந்தோர்களுக்கான சடங்குகள் செய்வது உலகின் அனைத்து இன மக்களுக்கிடையேயும் இருக்கின்றது.  அது இறந்தவர்க்ளைப் பெருமைப்படுத்துதல், அவர்களுக்கு தாம் செய்யும் நன்றிக்கடன் என்று சொல்லலாம். அல்லது அவர்களுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம்.  ஆனால்  இறந்தோரை இனி இல்லாமல் செய்வதற்கான செயல்களே அவை என நான் கருதுகிறேன்.

   நம்மைப்  பொறுத்தவரை நம்முடைய  உறவினனோ, நண்பனோ, பகைவனோ யாராக இருந்தாலும் அவருடைய   பிரதி ஒன்று நம்  உள்ளத்தில் வாழ்கிறது.  அவரைப்பற்றிய வெறும் நினைவுத் தொகையென   இதைச் சொல்லிவிடமுடியாது.    அந்த மற்றொருவருடைய குணாதிசயங்களில் மாற்றங்களைக் காணும்போது நாம்  தன்னுள் இருக்கும் அவனின்  பிரதிக்கும் அவற்றை மேற்கொண்டு  அப்பிரதியை மேம்படுத்திக்கொள்கிறோம்.  ஒருவனை நாம் நம் கண்ணால் கண்டாலும் உண்மையில் நம் அகம் அறிவது நம் உள்ளத்தில் கொண்டிருக்கும் அவன் பிரதியைத்தான்.  நாம்  மற்றொருவனின் உண்மை குணத்தைவிட நம் மனதில் கொண்டிருக்கும் பிரதியின் குணத்தையே அவன் குணம் என்று நம்புகிறோம்.   அதனால்தான் ஒருவன் நமக்கு நன்மை செய்வதை தீமை செய்வதாகவும், தீமை செய்யும் ஒருவனை நமக்கு  நன்மைசெய்கிறான் என ஏமாறுபவராகவும் ஆகிவிடுகிறோம்.  அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள் போன்றோரின் பிரதிகளையே ஒருவர் தம் மனதில் போற்றுகிறார்.   நம் மனதில் இருக்கும் அத்தலைவர்களின் பிரதியை நாம் பெரிதும் நம்புவதால்தான் அவர்களின் குற்றங்களை மற்றவர் சொல்லும்போது நம்மால் நம்பமுடியாமல் போகிறது. 

     நம் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் உண்மை குணத்திற்கும்,  உள்ளத்தில் அவர்கள் பிரதிகளின் குணத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இருப்பதில்லை.  மேலும் அப்பிரதிகள் நம் ஆழுள்ளத்திலும் வேர் கொண்டு விடுகின்றன.  அதனால் அவர்களை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அருகாமையிலென உணர்கிறோம்.  அவர் எந்தஒரு விஷயத்த்ற்கு எப்படி எதிர் வினையாற்றுவார் என்பதை நம்முள்ளிருக்கும் அவரின் பிரதியுருவை வைத்து நாம் கணிக்கிறோம்.  ஒருவர் நம் நம் கனவுகளில் தோன்றுகிறார் என்றால் அப்போது நாம் காண்பது அவரின் பிரதியுருவே.   நாம் எந்த அளவுக்கு ஒருவரை நேசிக்கிறோமோ, பழகியிருக்கிறொமோ  அல்லது வெறுக்கிறோமோ அந்த அளவுக்கு அவர்கள் பிரதி நம்முள் ஆழமாக  பதிவாகி இருக்கிறது. சிலர் நாட்டார் தெய்வங்களை வழிபட்டு அதன் ஆளுமையின் பிரதியை தம்முள் கொண்டிருப்பர்.   சிலர் புராண பாத்திரங்களை,  சில கதை மாந்தர்களை, அல்லது திரைப்பட கதா நாயகர்களை தம்முள் ஒரு ஒரு ஆளுமையென வளர்த்துக்கொள்வதுண்டு. 

       சில சமயங்களில் மிக அரிதாக ஒருவர் மனதை மற்றொருவரின் பிரதியுருவொன்று  முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்வதுண்டு.      அது ஒருவேளை நாம் மிகவும்  விரும்பும், பிரம்மிக்கும்,  வெறுக்கும் அல்லது அச்சமூட்டும் ஒரு ஆளுமையாக  இருக்கலாம். அந்தச் சமயத்தில் அவருடைய  உண்மையயான  ஆளுமையை மறைத்துவிடும். அந்நேரங்களில் அவர் அந்த வேறொருவரின்  பாவனை பேச்சு, குணம் போன்றவற்றை வெளிப்படுத்தி முற்றிலும் அந்த நபரென தன்ன வெளிக்காட்டுவார்.     மென்மையான குணமுடைய சிலர் சாமியருள் வ்ந்து குதித்து ஆடுவதை  உரத்தகுரலில் தன்னைவிட மூத்தோரை ஒருமையில் ஆணையிடுவதை கண்டிருப்போம். அது அந்த நபரின் உள்ளிருக்கும் அந்த தெய்வத்தின் பிரதியுரு அவர் உள்ளத்தை ஆக்கிரமித்து இருப்பதைக் காண்பிக்கிறது. இதே தர்க்கத்தை நாம் ஒருவருக்கு இறந்துபோன ஒருவரின்  பேய் பிடித்திருக்கிறது என்ற கூற்றிலும் ஏற்றிப் பார்க்கலாம்.

    இதற்கு மாறாக சிலசமயம்   இப்படி வேறொருவர் ஆளுமை அவர் உளத்தை   முழுமையாக ஆட்கொள்ளாமல் அதே நேரத்தில் தன்னை அவர்களுக்குள் ஒரு நிஜ உருவென காண்பித்துக்கொண்டு இருக்கும். இது நாட்கணக்கில் நீடித்துக்கொண்டிருந்தால் பிளவாளுமை என்ற பெரிய உளசிக்கலாக ஆகிறது.   அப்படியல்லாமல் சிறிது சிறிது நேரம் இந்நிலை ஒருவருக்கு வந்து போவது உண்டு. அப்போது அவர் அந்த ஆளுமையுடைய நபர் தன்னுடன் உடனிருப்பதாக, தன்னுடன் பேசுவதாக, பார்வைக்குத் தென்படுபவராக  உணர்வார். 

        ஒருவரை நீண்ட நாட்கள் பிரிந்து தொடர்பற்று போகும்போது அவரின்  பிரதி நம்முள்ளிருந்து தேய்ந்து மறைகிறது.  அதைபோன்று ஒருவருக்கு தெரிந்தவர் இறந்துபோகும் போது அவருளு இருக்கும் இறந்தவரின் பிரதி கால ஓட்டத்தில் மறைந்துபோய்விடும்.   ஆனால் அவர் முதலில் அவன் இறந்துவிட்டான் என்று அவர் ஆழ்மனதிற்கு உணர்த்தவேண்டும். சற்றே தெரிந்த ஒருவருக்கு ஒருவரின் இறப்பின் செய்தியே போதும்.  ஆனால்  நெருங்கிய உறவினருக்கு அது போதாது.   இறந்தவரின் இறப்பை ஆழுள்ளத்திற்கு உணர்த்துவதற்கு சமூகம் பல சடங்குகளை வைத்திருக்கிறது.  இறந்தவரின் உடல் பல மணி நேரங்களுக்கு வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நான் முதலில் நினைப்பதுண்டு, ஏன் இறந்த உடலாக ஒருவரை நம் நினைவில் இறுத்த வேண்டுமென.  பின்னர்  எனக்கு புரிய வந்தது,  இறந்த உடலை ஒருவர் பார்க்கச் செல்வது அவரை நினைவுகொள்வதற்காக அல்ல,  அவர் இறந்துவிட்டார் என்பதை தமக்கு உணர்த்திக்கொள்வதற்காக.   இறப்பு வீட்டில் செய்யப்படும் சில சடங்குகள் இறந்தவரின் நெருங்கிய உறவினர்களின் துக்கத்தை  மேலும் பெருக்குவதாக, அவர்களை உளரீதியில் மேலும் இம்சிப்பதாக இருக்கும்.  ஆனால் அவை யாவும் அவர்கள் உள்ளத்தில் அந்த  இறப்பை பதிவு செய்து ஆழுள்ளத்திலிருந்து அந்த இறந்தவரின் பிரதியை இல்லாமல் ஆக்குவதற்காக எனக் காண்கையில் மிகவும் பொருளுள்ளதாகத் தெரிகிறது.  

   சகாதேவன் இறந்துபோன  தன் மைந்தன் சுருதசேனனின் இருப்பை உணர்வதை வெண்முரசு  இவ்வாறு உரைக்கிறது.

   சகதேவன் கண்விழித்தபோது அருகே சுருதசேனன் நின்றுகொண்டிருந்தான். அவன் அசையாமல் மைந்தனை உணர்ந்தபடி படுத்திருந்தான். அவனுடைய உடலின் வெம்மை. மூச்சின் மெல்லிய ஓசை. அதற்கும் அப்பால் அருகே ஓர் உயிர் இருப்பதை உயிர் அறியும் நுண்ணுணர்வு.

   இருப்பும் இன்மையும் ஒரே கணத்தில்தான் வேறுபடுகின்றன போலும். அவன் அணுகி வருவதில்லை. அகன்று மறைவதுமில்லை. அவன் தொலைவிலெங்கும் இல்லை. மிக அருகேதான் இருந்துகொண்டிருக்கிறான். உடனிருந்துகொண்டிருக்கிறான். ஒளி மாறுபடுகையில் வலமிருந்து இடமும் பின்பிருந்து முன்பும் தோன்றும் நிழல் என.

சகாதேவன் காண்பது அவன் உள்ளத்தில் இருக்கும் சுருதசேனனின் பிரதி அது.   தீயில் அழிந்து விட்ட அவன்  மகனின் இறந்த உடல் கிடைத்திருக்காது. அப்படி கிடைத்திருந்தாலும் கருகி உருமாறி இருந்திருக்கும். ஆகவே அவன் அறிவு எவ்வளவு சொன்னாலும் அவன் ஆழுள்ளம் அதை நம்பியிருக்காது. ஆகவே அவன் மகனின் பிரதி இன்னும் அவன் உள்ளத்தில் அழியாது இருக்கும்.  அதன் காரண்மாக அவன் சுருதசேனனின் இருப்பை உணர்கிறான். மற்றவருக்கு அது உளமயக்கம் என்று தெரியலாம்.  ஆனால் சகாதேவன் உள்ளம் அதை உண்மையென்றே உணர்கிறது.   அவனுக்கு ஒரு பொய்யான மன அமைதியைத் தருகிறது. அதனால் அப்பிரதியை  மீண்டும் மீண்டும் மனதில் கொணர்ந்து அழியாது வைத்திருக்கலாம் என நினைக்கிறான்.  ஆனால் அப்படி  வாழ்வது  ஒரு பொய்யானது. மேலும்  அவன் இயல்பாக மேற்கொண்டு வாழ்வதற்கு தடையாகிவிடும். பல உளச்சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 


   அதே நேரத்தில் சகதேவன் அறிஞன். அவன் அறிவான் இந்த நீர்க்கடன் சடங்குகள் சுருதசேனனின் பிரதியை அவன் உள்ளத்திலிருந்து அகற்றிவிடும். இனி அவன் கண்ணுக்கு  தோன்றமாட்டான். அவன் இருப்பை உணர முடியாது.  தாம் முழுமையாக அவனை இழந்துவிடுவோம் என   அஞ்சுகிறான். அதனால் விதுரரிடம் அச்சடங்கை நிறுத்தும்படி கெஞ்சுகிறான். விதுரன் அவனை நிலையை உடன் புரிந்துகொள்கிறார். அவன் உள்ளத்தில் நிகழ்வதை அவனுக்கு எடுத்துக்காட்டுகிறார்.


விதுரர் சொல்கிறார் “கூறுக, அவர்கள் என்ன சொன்னார்கள்? அவர்கள் இங்கிருப்பது எப்படி? நம்மைச் சாராமல் அவர்களுக்கு இருப்பும் இன்பமும் உண்டா?”     “இல்லை” என்று சகதேவன் சொன்னான். அவன் உள்ளம் தவிக்கத்தொடங்கியது. விதுரர் “ஆம், அதையே முன்னோரும் சொல்லியிருக்கிறார்கள். நாம் இப்போது காணும் அவர்களின் உருவம் நம்மால் அளிக்கப்படுவது. இறுதியாக அவர்கள் நம் விழியிலும் உள்ளத்திலும் எஞ்சிய வடிவத்திலேயே அவர்கள் நம் முன் எழமுடியும். நாம் முதிர்வோம், அவர்களுக்கு அகவையும் மாற்றமும் இல்லை. நம் விழைவால் மட்டுமே அவர்கள் தோன்றமுடியும்” என்று விதுரர் சொன்னார். “ஆம்”என்றான் சகதேவன். “உண்மையில் சற்று அகவை முதிர்ந்த அனைவரும் அறிந்த உண்மைதான் இது.” சகதேவன் பெருமூச்சுவிட்டான்.
மேற்கொண்டு விதுரர் சகாதேவனுக்கு உரைப்பது  மனிதர்கள் அறிந்துகொள்ள  வேண்டிய  பாடம். இறப்பின் முன் மண்டியிட்டு பணிய வேண்டியவர்களே  அனைத்து உயிர்க்குலமும். இறப்பு என்பது இல்லாமலாக்குவது.    இறக்கப்போகிறவர்கள்,  இறந்து போனவர்களை தக்கவைக்க நினைப்பது என்பது வீண்முயற்சி,  சற்றும் பொருளற்றது மற்றும் இயற்கைக்கு எதிரானது. விதுரரின் சொற்கள் சகதேவனின் உள்ளத்தை ஆற்றுப்படுத்துகின்றன.
சகதேவன் தலைகுனிந்து அமர்ந்திருக்க மீண்டும் அவன் தலையை வருடி “நீர்க்கடன்கள் நிகழட்டும், மைந்தா. நம் சிறுவர் விண்ணேகட்டும். இங்கு அவர்கள் ஒருதுளியும் எஞ்சாதொழியட்டும். எழுமுலகில் அவர்கள் நிறைவுகொள்ளட்டும். நம்மிலிருந்து அவர்கள் முற்றிலும் மறையட்டும். வான்பறவைத் தடம் போல் ஆகுக அவர்கள் சென்ற பாதை!” என்றார். சகதேவன் “ஆம்” என்றான்.

தண்டபாணி துரைவேல்