Tuesday, November 5, 2019

நீர்ச்சுடர் - என்னதான் செய்திருக்க வேண்டும் கண்ணன்?


   
        இக்கேள்விக்கு பதில் அளிக்குமுன் மற்றவர்கள் இப்பேரழிவைத் தடுக்க என்ன செய்திருக்கலாம்  என்று பார்ப்போம்.  இப்போர் நிகழாமல் தடுப்பதற்கு எளிய மற்றும் முதன்மையான வழி , போருக்கான அவசியம் இல்லாமல் செய்வது.  அதை செய்திருக்கக்கூடியவன் துரியோதனன். அவன் எந்த அறத்தின் வழியில் இந்த  போருக்கு கிளம்பினான்?   இவன் நாடு கவர  நினைப்பது பகை மன்னனிடம் அல்ல. தன்  சகோதரனிடம், அஸ்தினாபுரத்திறகு எதிரானவர்களிடமோ அல்லது அந்நாட்டை கவர    நினைப்பவர்களிடமிருந்தோ அல்ல. ஒரு காலத்தில் இதே அஸ்தினாபுரத்தின் பட்டத்து  இளவரசனாக  இருந்தவன் தருமன். உண்மையில் அது அவன் நாடு. சொந்த சகோதரனிடமிருந்தே நாட்டை கவர நினைப்பது, கள்ளசூதின் வழி அதைக் கவர்ந்து கொள்வதும், பின்னர் திரும்பித்  தருவதாக கொடுத்த வாக்கை மீறி நடப்பதும் எவ்வகையின் ஷத்திரிய தர்மாகும்?  அவன் தருமனிடம் அவன் நாட்டை திரும்பித் தராமல் இருப்பதற்கு அவனிடம் எவ்வித நியாயமான  தர்க்கமும் இல்லை. ஆகவே நாட்டை திரும்ப தருமனிடம் ஒப்படைத்து போரைத் தவிர்த்திருக்கவேண்டியவன் அவன்.
  
       துரியோதனன் அவ்வாறு செய்யாதபோது அவனை தடுத்து பாண்டவர்களுக்கு நாட்டை திரும்பித் தர வழி செய்ய வேண்டிய நிலையிலிருந்தவர் திருதராஷ்டிரர்.  மேலும் அவர் துரியோதனன் செய்வது அறமல்ல என்று கருதுபவர். அவனிடம் கெஞ்சுகிறார். அவன் காலில்கூட விழுகிறார். ஆனால் அதற்கு மேலாகச்சென்று அவனைக்  கண்டித்தால் அவன் உயிரை மாய்த்துக்கொள்வான் என  எண்ணி ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுவது இப்போர் நிகழ்வதற்கான ஒரு முக்கியமான காரணம்.  ஆக அது  அவரும் போருக்கு அனுமதியளித்ததாகவே ஆகிறது.    அசலையின் வேண்டுகோளின்படி பாண்டவர்களை நாட்டின் உரிமையைக் கோராமல் வனம்திரும்பும்படி கோரிக்கை வைத்தார். அதை  தருமன் ஏற்றுக்கொண்டான். அப்படியே விட்டிருந்தால் இப்போர் நிகழ்ந்திருக்காது. ஆனாலும்  அக்கோரிக்கையையும் அவர் திரும்பப் பெற்றுக்கொண்டதன் மூலம் போரைத் தடுப்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார்.  

         பீஷ்மர் நாட்டின் பிதாமகர்.  நாட்டின் நலனுக்காகவேணும் இப்போரை நிறுத்த அவர் முயன்றிருக்கவேண்டும்.  அஸ்தினாபுர அரியணைக்கு என்றென்றும் கட்டுப்பட்டவன் என்ற தன் வாக்கினைக் காப்பதே பெரிதெனக் கொண்டு துரியோதனனுக்கு துணை நின்றார். அப்படியல்லாமல், தனக்கு அறம்தான் முக்கியம், எடுத்த அனைத்து சூளுரைகளுக்கும், கொடுத்த அனைத்து  வாக்குகளுக்கும், அடிப்படையாக அமையவேண்டியது அறத்தைக் காப்பதுதான் ,   அப்படியல்லாமல்  அறத்திற்கு மாறாகச் செல்லும்போது அவற்றை நான் காக்கவேண்டியதில்லை என்ற  நிலைப்பாட்டை ஒருவேளை பீஷ்மர் எடுத்திருந்தால்  இப்போர் தடுக்கப்பட்டிருக்கும்.     இதைப்போன்றே  துரோணரும் கிருபரும் அரசு விசுவாசத்தின்  காரணமாகமட்டுமே    போருக்கு துணை நிற்பதை ஏற்றுக்கொண்டனர். 

       துரியோதனனுக்கு ஒரு நண்பனாக கர்ணன் தன் கடமையைச் செய்தானா என்பது ஐயத்திற்கு இடமானதே.  அறத்திற்கு மாறான ஒன்றைச் செய்கிறவன்  ஒரு  வகையில் தற்கொலை செய்துகொள்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.  ஒன்று துரியோதனன் செய்வது முற்றிலும் சரியென்று அவன் உறுதியாக இருக்கவேண்டும். அல்லது நீ செய்வது தவறு  என்று அவன் முகத்திற்கு நேராக கூறி அவனைத் தடுக்க முற்பட்டிருக்கவேண்டும். துணைக்கு கர்ணன் இருக்கிறான் என்பது துரியோதனன் போருக்கு எழ ஒரு முக்கிய காரணம்.   கர்ணன் தன் நட்பை காரணம் காட்டியோ அல்லது தான் அவனுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதைக் காரணம் காட்டியோ துரியோதனனைக்  கடிந்து தடுத்து நிறுத்தாமலிருந்ததும், அவன் எதை செய்தாலும் துணை நிற்பேன் என்று நடந்துகொண்டதும் இப்போர் நிகழ பெரிய காரணம். இதைப்போன்றே அஸ்வத்தாமன் ஜெயத்ரதன், பூர்வசிரஸ் போன்ற அவன் உயிர்த் தோழர்களும் துர்யோதனன் செயல்கள் அனைத்தையும் எதிர்க்கேள்வியில்லாமல் ஏற்றுக்கொண்டனர்.  அதே நேரத்தில் இவர்களில் எவர் ஒருவரும்  துரியோதனன் பக்கம்தான்  அறம் இருக்கிறது அவன் சொல்வதுதான் சரி என்று மனமுவந்து ஏற்றக்கொண்டவர்கள்  இல்லை.   இவர்கள் துணை இல்லாமல் போயிருந்தால் துரியோதனனின் போருக்கான ஊக்கம் பெரிதளவு குறைந்திருக்கும். அல்லது போரின் அழிவுகளாவது குறைந்திருக்கும். 

       பாண்டவர்களும் இதில் பேரழிவைச்  சந்தித்து  இருக்கிறார்கள்.  துரியோதனன் தன் பிள்ளைகளைப்  போர் நாட்களில்  இழந்து அடைந்த அதே  துயரத்தை  இனி தன் வாழ்நாள் முழுதும் அனுபவிக்கப்போகிறவர்கள் பாண்டவர்கள்.    திருதராஷ்டிரன், காந்தாரி, மற்றும் மக்கள் சமூகத்தின் முன்  வெட்கி தலைகுனிந்து மனம் கலங்கி நின்றிருக்கும் அவர்களைப்பார்த்தால் இத்தகைய வெற்றி அவர்களுக்கு தேவையா என்றே தோன்றுகிறது.  ஒருவகையில் பார்த்தால் இது பாண்டவர்களும் அடைந்த தோல்வி என்று தான் கூறவேண்டும். இப்போரில் யாருக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது? ஒருவேளை பாண்டவர்கள் தமது உரிமையை தியாகம் செய்து தாம் அடைந்த அவமதிப்புகளை தாங்கிக்கொண்டு இப்போரை நிகழ்த்தாமல் விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

      இன்று கிருஷ்ணனைத்  தூற்றும்  அஸ்தினாபுர அரசியர் மற்றும் மக்கள் இப்போரில் எந்த நிலைப்பாட்டை எடுத்தார்கள்?  அவர்களுக்கு பாண்டவர்கள் அந்நியர்கள் இல்ல. பாண்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று கருதினார்களா? இப்போது சிலர்  நாட்டைவிட்டு போகின்றனர்,  ஆற்றில் பாய்ந்து தம் உயிரை மய்த்துக்கொள்கின்றனர்.  துரியோதனன் பாண்டவர்க்கு அநீதி இழைத்தபோது  இதைப்போன்ற நிலை எடுத்து   துரியோதனனிடம் ஏன் தம் எதிர்ப்பைக் காட்டாமல் விட்டனர்?   அநீதிக்கு எதிராக எழாத, தம் எதிர்ப்பை சற்றேனும் பதிவு செய்யாதவர் எவர் ஒருவரும்  அநீதி இழைத்தவர் என்றே ஆவார்கள். அந்த அநீதிக்கு எதிரான போரில் அவர்கள் எதிரிகள் என்றே கருதப்படுவார்கள்.  இச்சமயத்தில் நடு நிலைமை என்பது அநீதிக்கு துணை நிற்றல் என்றே கருதப்படும்.  மேலும் கிருஷ்ணன் தன் இறுதி தூது முறிந்து அவன் சொற்களுக்கு மதிப்பளிக்காமல் ன்வெறுங்கையனாக திருப்பி அனுப்பபடும்போது தன் காலடித்தூசைக்கூட அங்கேயே தட்டிவிட்டு போகிறான்.  இனி நடக்கவிருக்கும் எவ்வழிவுக்கும் பதில்சொல்ல அவன் கடன்பட்டவனில்லை என்று அப்போதே உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறான்.   அப்போது இந்த அஸ்தினாபுர மக்கள் என் கண்ணனின் சொற்களுக்கு  மதிப்பளிக்காத நாட்டில் நாங்களும் இருக்கமாட்டோம் என்று கிளம்பிச் சென்றிருக்கவேண்டும். ஆனால் அப்போது அதைக்காணாது  விட்டுவிட்டு இப்போது கண்ணன் ஏன் எங்கள் பிள்ளைகளை,  கணவர்களைக் காக்கவில்லை என்ற கோபிப்பது எவ்வகையிலும் முறையற்றது  ஆகும்.     
 
       இவர்கள் எல்லாம் இவற்றைப்போன்றவற்றை செய்யாமல் விட்டதால் ஏற்பட்ட போரை எதைச்செய்து  கண்ணன் தடுத்திருக்கவேண்டும்? கண்ணன் இப்போரைத்  துவக்கவில்லை. களத்தில் இறங்கி போர் புரியவில்லை. அவன் செய்திருக்ககூடியது ஒன்றே ஒன்றுதான். பாண்டவர்களிடம் இப்போர் எனக்கு உகந்ததல்ல என்று  சொல்வது மட்டும்தான். அப்படியென்றால் பாண்டவர்களுக்கு எவ்வித அநீதியும் நடக்கவில்லை,  திரௌபதியின் அவை அவமதிப்பு உறவினர்களுக்கிடையேயான வெறும் களிவிளையாட்டு என அலட்சியப்படுத்தி   அவன்  இருந்திருக்கவேண்டும்.    துரியோதனனின் வெற்றி என்பது அநீதியின் வெற்றி. பாண்டவர்கள் தோல்வி பெற்றால் அது அவர்களின் தோல்வி மட்டுமல்ல அது அறத்தின்  தோல்வியுமாகும்.   இவ்வரலாறு  மனித சமூகத்தின் கண்களுக்கு முன் நிகழ்கிறது. இதனுடைய முடிவு வரலாற்றில் நிலைக்கப்போவது.  அறம் வெல்லும் அநீதி இழைப்பவர்களுக்கு அறம் கூற்றாகி நிற்கும் என்று நிறுவப்படவேண்டும்.  ஆகவே அவன் பாண்டவர்களுடன் துணை நிற்பது ஒன்றே அவனுக்கிருந்த வழி. இதற்கு  மாறாக  போர் ஏற்படுத்தப்போகும் அழிவுகளுக்காக இப்போரை அவன் நடக்கவிடாமல் செய்வது ஒரு வரலாற்று பிழை என ஆகும்.  கண்ணனின் நோக்கம் அறம் நிலை நிறுத்தப்படவேண்டும். ஷத்திரிய அறம், போர் அறம்,  சொல்லறம், வில்லறம் என்றெல்லாம் காரணம் காட்டி,  இவையெல்லாம் எதைக்காக்க உருவாக்கப்பட்டதோ,  அந்தப் பேரறம் தோற்றுப்போவதை  அவன் அனுமதிக்க விழையவில்லை. மனித சமூகத்தின் அழிவு என்பது இறப்புகளால் வருவதல்ல, அறத்தின் வீழ்ச்சியே மனித சமூகத்தை அழிப்பது.  புவியில் பல்வேறு உயிரினங்கள் உருவாகி அழிந்து  இருக்கின்றன. ஆனால் மனித சமூகம் மட்டுமே என்றும் பெருகி உயர்ந்து வந்திருக்கிறது. அதற்கு காரணம் ஒருவருக்கொருவர் உதவி செய்து, அநீதி இழைக்காமல் வாழும் அறத்தை தன்னிடம் கொண்டிருப்பதுதான்.  அந்த அறத்தை தான் இருக்கும் குழுவிற்குள் அல்லது  இனத்துக்குள் மட்டும் என ஆகாமல் மனித இனம் முழுமைக்குமென ஆகி பின்னர் அதையும்  தாண்டி பூவுலகு முழுமைக்கும் எனப் பெருக்கிகொள்வதே ஒருவர்கொள்ள வேண்டிய பேரறம் ஆகும். அதை உறுதிப்படுத்துவதையே கிருஷ்ணன் செய்திருக்கிறான். அதைத்   தவறென்று  யார் சொல்ல முடியும்.

தண்டபாணி துரைவேல்