Saturday, October 25, 2014

பிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

உபச்சாரமான வார்த்தைகளுக்கு எல்லாம் அப்பால் உயரத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள். உபச்சாரமான  வார்த்தைகள் வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் உபச்சாரமான வார்த்தைகள் இல்லாமல் என்னால் உங்களை நெருங்க முடியவில்லை. பெருநிலை-4 அற்புதம், அதிரடிக்குது. மண்ணிலா விண்ணாலா எங்கு இருக்கின்றேன் என்ற நிலையில்லா வெளியில் மிதக்கின்றேன்.

அழலுருமேனியன், மரகதமேனிமான் காணா ஆடும் பொன்னம்பலத்தில் ஆடும் ஆடலரசன் தரிசனம்காணும்போதெல்லாம் ஒன்றை நினைத்துக்கொள்வேன். புண்டரீகவல்லித்தாயார் சமேத தில்லைகோவிந்தராஜபெருமாள் இப்படி காலநீட்டிப்போட்டுகிட்டு இந்த நடனத்தை பார்த்துகிட்டுகிடக்கிறாரே, “இவர்தான் முதன் முதலில் படுத்துகிட்டு டீவிப்பார்ப்பவராக இருக்கிறார்” என்று.

சாமிக்கு முன்னால் காலை நீட்டாதே என்று பிள்ளைகளிடம் சொல்லி சொல்லி வளர்க்கும் திருக்கூட்டத்தில் வந்த எனக்கு “இப்படி இவர் சாமிக்கு முன்னாடி கால்நீட்டிகிடக்கின்றாரே” என்று எண்ணி எண்ணி, பெயவர்கள் செய்வது பெருமாள் செய்வதுமாதரி என்ற விதிவிலக்கு இருப்பதால், பெருமாளே செய்கின்றார் எந்த பெரியவரிடம் சொல்வது என்று “சாமி கும்பிடு, கம்முன்னு இரு“ எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.

கிருபாநந்தவாரியார் சுவாமிகள், சிவனின் முதல்பக்தன் நாராயணன் என்றார். அப்படி என்றால் நடராஜபெருமானின் முதல் ரசிகன் தில்லைகோவிந்தராஜனாகத்தானே இருக்கமுடியும். அவர் ஆட்டத்தை நிறுத்தினால்தானே இவர் இடம்பெயரமுடியும். படுத்து கிடந்தாவது இந்த ஆட்டத்தைப்பார்ப்பேன் என்ற அடமாக இருக்குமோ? இப்படி  எல்லாம் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி அலைந்து கண்டுகொண்டேன் இன்று. மண்ணில் முடியாக மேரு இருக்கிறது. மேருவின் முடியில் சிவன் இருக்கிறார். சிவனின் முடியில் கங்கையிருக்கிறாள். கங்கை விஷ்ணுபதத்தில் இருக்கிறாள். அங்குதான் துருவனும் இருக்கிறான்.

விண்ணில் அலையடிக்கும் கங்கையும். நிலைபெயராநிலையில் இருக்கும் துருவனும். மண்ணில் ஆடும் தில்லை நடராஜனும், அசையாத தில்லை கோவிந்தராஜனும். விண்ணை மண்ணுக்கு இறக்குவது என்பது இதுதானா? பாரதபூமி என்பது ஞானபூமி என்பது இதுதானா? தில்லை நடராஜர்கோவில், ஸ்ரீகாளஹஸ்திகோவில், கைலாயம் ஒரே நேர்க்கோட்டில் உள்ளது என்று சொல்கின்றார்கள். இங்கெல்லாம் சென்றால் முக்தி என்கின்றார்கள். விண்ணின் துளி அங்கு தெளிக்கப்பட்டு உள்ளதா? அல்லது விண்ணின் அந்த விஷ்ணுபதத்தின் துளி பிரதிபளிக்கும் இடங்களா அந்த இடங்கள். இன்று கைலாயத்தில் இருந்து தெற்குநோக்கி நடந்துவந்தால் அந்த விஷ்ணுபதம் கூடவே வருவது தெரிகின்றது.

//கங்கை பிறந்த விஷ்ணுபதம் என்னும் விண்பிலம் மேருவுக்கு மேலே துருவனுக்கு அருகே உள்ளது. அதை நோக்கி அமர்ந்திருக்கிறது இந்த தபோவன பூமி. வான் தன்னை மண்ணுக்கு அறியத்தந்த இடம் இது. மண் தன்னில் வானை பெற்றுக்கொண்ட இடம். பாரதவர்ஷத்தில் இதற்கிணையான இன்னொரு புனிதமண் இல்லைதௌம்ரர் சொன்னார். “கங்கை இங்கே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒருங்கே உரியவளாக இருக்கிறாள். இங்கு நீராடுபவர்கள் ஆகாய கங்கையில் நீராடும் தூய்மையை அடைகிறார்கள்.”//

ஞானப்பண்டிதனாகிய முருகபெருமான் நக்கீரரை கைலைப்பாதி காளத்திப்பாதிப் பாடசொன்னது. தமிழுக்கு ஒரு கவிதைக்கிடைக்கவேண்டும் என்பதற்காக மட்டும் இல்லை, தமிழின்மூலம் விண்ணின் துளியைப்பெற்றுக்கொள் என்பதற்காகத்தான் என்பதை இன்று உணர்கின்றேன். ஜெவின் தமிழ் அதை உணர்த்துகின்றது.

விஷ்ணுபதத்தில் அலையும் கங்கையும், நிலையும் துருவனும் இருப்பதுபோல் கண்ணனின் பாதத்தை இருப்பிடமாகக்கொண்டே குளிரும், சீற்றமும்கொண்ட பாஞ்சாலி வரவிருக்கிறாள் என்று கதை முடிச்சை அவிழ்ப்பதன் மூலம் பிரயாகைக்கதையை விண்ணில் இருந்து பாய்ந்து வரசெய்கின்றீர்கள் ஜெ. அற்புதம் என்பதற்கு மேல் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அற்புதம்.

பாஞ்சாலிக்கு கங்கை என்னும் படிமம்தான் எத்தனை பொருத்தம். அது அதன் உயரத்தை காட்டுகின்றது. அது அதன் வேகத்தை காட்டுகின்றது. அது அதன் புனிதத்தைக்காட்டுகின்றது. அது அதன் அழுக்கையும் காட்டுகின்றது. ஓடும் போது அது தன் அழுக்கை கழுவியும் கொள்கிறது. அது அதன் பக்தியை காட்டுகின்றது. அது அதன் தாய்மையை காட்டுகின்றது. அது அதன் காமத்தை காட்டுகின்றது. அது அதன் படிகளில் பூசைக்கொள்கிறது. அது அதன் கரைகளில் நடக்கிறது. அது அதன் கரைகளை உடைக்கிறது. மண்ணிருந்து இடத்தை ஊராக்குகிறது. ஊர் இருந்த இடத்தை மண்ணாக்குகிறது. அது அதன் கடலோடு சேர்கிறது. அதற்கும் முன்னால் அது சூரியனை வணங்குகின்றது.

//“பாரதவர்ஷத்தின் மேலாடையென வழியும் கங்கை கிழக்குக் கடற்கரைக்குச் சென்று சூரியனை வணங்கி நீர்வெளியில் கலந்தாள். மேகமென எழுந்து விண்நதியாகி ஒழுகி மீண்டும் இமயமலைகளின் மடியில் அமர்ந்து குளிர்ந்தாள். மீண்டும் மலைமடிப்புகளில் பேரருவிகளாக விழுந்து மலையிடுக்குகளில் கொப்பளித்து ஒழுகினாள் .தன் செயல்சுழலில் நின்றிருக்கிறாள் கங்கை. மண்ணின் பாவங்களை கடலுக்குக் கொண்டுசெல்கிறாள். கடலின் பேரருளை மண்ணில் பரப்புகிறாள். ஆயிரம் கரங்களால் அமுதூட்டுகிறாள். ஆயிரம்கோடி உயிர்களால் முலையுண்ணப்படுகிறாள்தௌம்ரர் சொன்னார்//

கங்கையில் இறங்கும் அனைவரின் நிர்வாணத்தையும் அது அறிந்து இருக்கிறது ஆனால் அது அனைவருக்கும் மேலாடையாக இருக்கிறது. அவள் அவிழாத ஆடைக்காரி.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.