Saturday, October 25, 2014

யுதிஷ்டிரன்




அன்புள்ள ஜெயமோகன்

    தருமனை பற்றி எப்படி எழுதப்போகிறீர்கள் என ஆவலாக உள்ளேன். தருமனை ஒரு சுயநலமியாகவோ சூதில் நாட்டமுள்ளவனாகவோ அல்லது முடிவெடுக்கவேண்டிய சூழல்களில் நீதி நூல்களின் பின்னே ஒளிந்து தப்பிக்க நினைக்கும் எளிதான மனிதனாகவோ சித்தரித்தலே வழக்கமாயுள்ளது. இம்முறை கதையின்போக்கை   சித்தரிப்பதிலும் அதை ஞாயப்படுத்துவதிலும்  ஒருவகையில் உதவுகிறது. 


      ஆனால்  நான் தருமனை இவ்வாறு பார்க்கிறேன்.    தருமன் மனதாலும் செயலாலும் நல்லவன். சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கையாள விரும்பாதவன். எல்லோரிடத்திலும் குடிகொண்டிருக்கவேண்டிய நல்லெண்ணத்தில் நம்பிக்கை வைத்திருப்பவன். அதனாலேயே அவனும் அவனை சார்ந்தவர்களும் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அவன் நல்லெண்ணத்தை மட்டுமே கவசமாகக் கொண்டு சமூகத்தில் தனித்து நிற்கிறான். விதிக்கப்பட்ட நெறிகளை தனக்கோ தன்னை சார்ந்தவர்களுக்கோ  துன்பம் நேறிட்டாலும் அதை பின்பற்றுவது தன் கடமை என கருதுபவன். ஆகவே அவன் செயல்களால் அவனுக்கோ அவனை சார்ந்தவ்ர்களுக்கோ ஏற்படும் இன்னல்களுக்கெல்லாம் இச்சமூகத்தின் கீழான தன்மைகளே காரணமாக கொள்ளவேண்டும்.


 பீஷ்மர் துரோணர் முதல் கண்ணன் வரை அவன் மேல் ஒரு மரியாதை வைத்திருக்கிறார்கள். திருதராஷ்டிரன் துரியோதனன் ஆகியோரின் பெரும் குற்றமே தருமனின் இந்த நல்லெண்ணத்தை, நெறிகளின்படி வாழவேண்டும் என்ற வைராக்கியத்தை தம் சுயநல எண்ணங்களுக்காக தமக்கு சாதகமாக பயன்படுத்திகொள்வதேயாகும். அவனிடம் இருக்கும் குறைகளை காணும்போது இதையெல்லாம் நாம் கணக்கில் கொள்ளவேண்டும் அல்லவா?

அன்புடன்
 த.துரைவேல்


அன்புள்ள துரைவேல்

என் எழுத்துமுறையில் முன்கூட்டிய திட்டங்கள் இல்லை. ஆகவே யுதிஷ்டிரனைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் என இப்போது சொல்ல முடியாது. எழுதும்போது அவரை மிக அருகே , உண்மையான மனிதனைப்போல காண்பேன். அப்படியே எழுதிவிடுவேன்

ஜெ