Thursday, October 30, 2014

பிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்




அன்பு ஜெயமோகன்,
/*தருமன் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை அர்ச்சுனன் கண்டான்.*/ உள்ளுக்குள் ஒன்றாகவும், வெளியில் வேறாகவும் தருமன் இருப்பதை நுட்பமாகச் சொல்லும் இடம். தருமனால் அறத்தின் நீதியையும் கைவிட மனமில்லை; அரசாட்சியின் ருசியையும் புறந்தள்ள இயலவில்லை. சிறுவயதில் தனக்குச்சொல்லப்பட்ட கதைகளின் அனுபவத்திலிருந்தே அவன் தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறான். அக்கட்டமைவாலேதான் விடிவெள்ளிக் கதை அவனை விடாது துரத்தியபடி இருக்கிறது. அக்கதையே அவனுக்கு அறம்தவறிய நாளின் அடர்இருட்டை ஞாபகமுட்டவும் செய்கிறது. /* என்றோ ஒருநாள் மண்ணில் அறம் முற்றாக அழியும். விடிவெள்ளியாக வந்த தெய்வம் சூரியனுக்கு வரவேண்டியதில்லை என்ற செய்தியை அனுப்பும். அந்தக்காலையில் சூரியன் எழமாட்டான். மண்ணிலுள்ள உயிர்களெல்லாம் பரிதவிக்கும். அஞ்சி அழுது முறையிட்டு இறைஞ்சும். ஆனால் ஒருமுறை பாதை பிழைத்த கதிரவன் பின்னர் பிரம்மத்தின் ஆணையின்றி வரவே முடியாது. மண்ணுலகின் அத்தனை உயிர்களும் ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொண்டு கதறுவார்கள். அதுவரை பேணிக்கொண்ட பகைமையை முற்றாக மறப்பார்கள். அக்கணம்வரை தேடிய செல்வங்களை எல்லாம் அள்ளி வீசி சூரிய ஒளி மட்டுமே போதுமென்று கூவுவார்கள். ஆனால் அந்தக்குரல்களைக் கேட்க விண்ணில் சூரியன் இருக்கமாட்டான். ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வங்களிடம் மன்றாடுவார்கள். அத்தெய்வங்களோ விண்ணளக்கும் சூரியன் இல்லையேல் நாங்களும் இல்லாதவர்களே என்றுதான் பதில் சொல்வார்கள். பூமி அழியும். இருளில் அது அழிவதை அதுகூட பார்க்கமுடியாது */ இருமைகளால் ஊசலாடும் தருமன் தனது அலைபாய்தலை அவற்றைப் பகிர்ந்து கொள்வதன் ஊடாக சமன் செய்ய நினைக்கிறான். அறம் தொடர்பான சிந்தனையே தருமனைத் தொடர்ச்சியாய்க் கலங்க வைக்கிறது. எனினும், அறத்தை முழுமையாய்த் தொடர்ந்துவிடமுடியுமா எனும் குழப்பமும் அவனுக்குள் மறைவாய் இருந்தபடியே இருக்கிறது. உள்ளிருக்கும் தெளிவு, வெளியிலிருக்கும் குழப்பங்களுக்கு விடையாகி விடுவதில்லையே எனும் கடுங்கோபத்தை வார்த்தைகளால் ஈடு செய்வதற்கு தருமன் தொடர்ந்து போராடுகிறான்.
அறத்தை வரையறுக்கச் சொல்லித் தெரிந்து கொண்டுவிட்டால் ஒருவேளை அறம் தரும் பயத்திலிருந்து விலகிவிடலாமோ என்றும் தருமன் நினைக்கிறான். /* எது நிலைபெயராததோ அதுவே அறம் என்றார். ஒன்று இப்போது இச்சூழலுக்குச் சரி என்று தோன்றலாம். அது எப்போதும் எச்சூழலுக்கும் சரியென்று நிலைகொள்ளுமா என்று பார்நிலைகொள்ளுமென்றால் அதுவே அறம் */ அறத்திற்கான தந்தையின் வரையறை துருவனாகக் காட்டப்படுகிறது. நிலைபெயராத அறம் என்று உண்டா எனும் புதிய கேள்வி தருமனுக்கு பெருமூச்சாக வெளிப்படுகிறது. அறக்குழப்பம் வரும்போது கொஞ்ச நேரம் தனித்து வந்து வான்நோக்கினால் துருவன் அதைத்தெளிய வைப்பான் என தருமனின் தந்தை சொல்வதன் ஊடாகச் செல்லும் ஒருவன் அலைபாய்தலுக்குள்ளேயே இருக்கும் நிலைபெயராமையைக் கண்டுகொள்கிறான். கண்டுகொண்டவுடனேயே அவன் அறத்திடம் சரணடைந்துவிடுவதில்லை. தனித்திருக்கும்போது அறமற்ற வாழ்வின் நினைவு சுடுகிறது; கூட்டத்தில் அறம் பொருளற்றதாகத் தெரிகிறது. தனிமனிதனுக்கா, சமூகத்துக்கா.. அறம் யாருக்கானது?
/*இங்கு நாம் மாபெரும் மாயையால் கட்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உறவாகஉணர்ச்சிகளாக நம்மைச் சூழ்ந்திருப்பது மாயையின் அலைகளே. நம் தெய்வங்களும் மாயையின் தோற்றங்களே. மாயை இல்லையேல் நாம் வெட்டவெளியில் நிற்கவேண்டியிருக்கும். தெய்வங்களின் துணைகூட இல்லாமல் தனித்து நிற்கவேண்டியிருக்கும். யோகிகள் மாயையைக் களைந்து வெறும்வெளியில் நிற்கலாம். நம்மைப்போன்ற எளியோர் நிற்கலாகாது.நம்மைச்சூழ்ந்திருக்கும் இந்த மாயையைக் களைந்து உண்மையை நமக்குக் காட்டும் ஒவ்வொன்றும் இந்த வாழ்க்கையில் தீங்கையே அளிக்கும் */  மாயைகளுக்கும், மாயை கடந்து மாயைகளை உள்ளடக்கி இருக்கும் பரம்பொருளுக்குமான ஊசலாட்டத்தைத் தருமன் வழியே கொட்டித்தீர்த்து விடுகிறது பிரயாகை. பரம்பொருள் அறமாக இருக்க, மாயைகள் ருசிகளாக இருக்கின்றன. அறத்திற்கு ருசிகள் பொருட்டில்லை; ருசிகளோ அறமின்றி இல்லை. உடல் மெல்ல நடுங்குகிறது.
முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்)