Wednesday, October 29, 2014

பிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்





அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

“கூழுக்கும் ஆழை மீசைக்கும் ஆசை” என்ற பழமொழியின் முழுவடிவம் தருமன்.

சொற்களின் வழியாக நீதியையும், ஆசைகளின் வழியாக ருசியையும் அடையத்துடிக்கும் அகம் கொண்டவன் தருமன்.

சொற்களின் வழியாக அகம் அறிய நினைக்கும் அனைவரும் சொற்களின் ருசியை புறத்தில் அறியவே முயற்சி செய்கின்றார்கள் இல்லை என்றால் அவர்களால் முழுமையை அடைய முடியவில்லை. “கற்ற எலிதான் கழனிப்பானையில் துள்ளிவிழும்” என்பது இதுதானா?

தருமன் ஒரு எளிய மனிதன். எளிய மனிதனுக்கு உரிய காலடிநிலம்தான் அவன் உலகம் ஆனால் அவன் அகம் படர்ந்து இருப்பது உலகம் முழுவதும். அர்ஜுன்போல இலக்குகள் மட்டுமே குறியாக இருப்பவனுக்கு சொற்கள் தேவை இல்லை. காற்றுபோல, மாருதிபோல எந்த இலக்கும் இல்லாமல் இயற்கையாய் இருக்கும் பீமனுக்கும் சொற்கள் தேவை இல்லை. அந்த அந்த கணத்திற்குஉரிய பார்வையும், சொற்களும் உடைய நகுலன் சகாதேவன் போன்றவருக்கும் சொற்கள் தேவை இல்லை. தருமனுக்கு சொற்கள் தேவையாக இருக்கிறது ஏன்? சத்தியசோதனைக்கு ஆட்டுபடும் மனிதன் எல்லாம் சொற்களால் ஆகி இருக்கிறார்கள். தன்னையே வென்று தன்னிடமே தோற்று. சரி என்றதை இல்லை என்று இல்லை என்றதை சரியென்று வாழ அவர்களை சொல் ஆட்டிப்படைக்கிறது. அவர்கள் சொல் வைத்திருக்கும் பேழைகள்.

தருமன்  இறந்தகாலம் நிகழ்காலம் என்ற இருமுனைகளை ஒவ்வொரு கணத்திலும் இணைக்கவேண்டிய நிலையில் இருக்கின்றான். இறந்த காலத்தைவிட்டால் அவனுக்கு வேர்கள் இல்லை. எதிர்காலத்தை விட்டால் கிளைகள் இல்லை. வேரும் கிளையும் உடைய பெரும்மரமாக வளரநினைக்கும் தருமன்போன்றவர்கள் அனைவருமே சொற்களையே உணவாக, சொற்களையே அரணாக, சொற்களையே படையாக, சொற்களையே ஆடையாக, சொற்களையே மருந்தாகவும் பயன்படுத்தவேண்டி உள்ளது.

சொற்கள்தான் அவர்களை நீதிமானாகவும், சொற்கள்தான் அவர்களை அடங்கா ஆசைக்கொண்டவர்களாகவும் செய்கின்றது. அவர்கள் பயன்படுத்தும் சொற்கள் அந்த அந்த கணத்திற்கு உரியது இல்லை. இறந்தகாலத்தில்விதையாக, வரும்காலத்தில் கனியாக மாறும் சொற்கள். நிகழ்காலத்தில் அவைகள் சொற்கள் மட்டும்தான். அந்த சொற்களுக்காகத்தான் துதிக்கவும், அந்த சொற்களுக்காதத்தான் அவர்கள் தூற்றவும் படுகின்றார்கள். தருமன் சொல்விளையும் பாத்திரம் மட்டும்.
//“என்னால் துயில முடியாது பார்த்தாஎன்றான் தருமன். “அப்படியென்றால் சிந்தியுங்கள். இந்தப் பாய்களைப்போல இரவெல்லாம் புடைத்து நில்லுங்கள்என்று சொல்லி புன்னகைத்து மெல்ல தலைவணங்கிவிட்டு அர்ஜுனன் அறைக்குள் சென்றான்//

கவிப்பேரரசு திரு.வைரமுத்து “சினிமாவை மூன்று மூலதனம் கொடுத்து உருவாக்குகின்றார்கள்” என்கின்றார். அறிவு மூலதனம், பொருள் மூலதனம், உழைப்பு மூலதனம்.

இந்த மூன்று மூலத்தனங்களும் இல்லாமல் எந்த செயலும் இல்லை, ஒருபோர் என்றதும் வீரனனும், வீரமும் போதும் என்றுதான் எண்ணுகின்றோம். அறிவு மூலதனம், பொருள் மூலதனம், உழைப்பு மூலதனம் இல்லாமல் ஒருபோர் வெற்றி அடைவதில்லை.

துரோணர் குருகாணிக்கை கேட்டார். துரியோதனன் முன்னால் சென்று தோற்றான். அர்ஜுனன் ஆடுத்து சென்று வென்றான் என்றுதான் கேட்டு உள்ளோம். இந்த நிலையில் என்ன உணர்வுகளைப்பெருகின்றோம் என்றால் அர்ஜுன் பெரும் வீரன் என்பது மட்டும்தான். அந்த ஒற்றை பிம்பம்போதுமா? போதாது என்கின்றார் திரு.ஜெ.

பீஷ்மர், விதுரர், தருமன், துரியோதனன் அவர்கள் அவர்கள் பங்கிற்கு அறிவு மூலதனத்தை கொண்டுவந்து கொட்டுகின்றார்கள்.  அதில் ஒரு துளிமட்டும் இங்கு.
//பீஷ்மர் தலையசைத்துவேண்டுவன நிகழட்டும். ஆனால் மிகச்சிறியபடையே செல்லவேண்டும். ஒருபோதும் அது ஒரு படையெடுப்பு என்று தோன்றக்கூடாதுஎன்றார். சகுனிநம் இளையோருக்கும் அது ஒரு அறைகூவலாக அமையட்டும்என்று நகைத்தார். “அத்துடன் துருபதனை இங்கே கொண்டுவரமுடியாது. ஆகவே துரோணரும் இளவரசர்களுடன் செல்லட்டும். அவர் விரும்பியதெல்லாம் பாஞ்சால மண்ணிலேயே முடியட்டும்என்று சொல்லி பீஷ்மர் எழுந்துகொண்டார்// எத்தனை கூர்மையான அரசியல் விளையாட்டு. வீட்டுக்குள் புகுந்து அடித்துவிட்டு வெளியில் வரும்போது தோளில் கைப்போட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டுவருவது.  

பீமன் எங்கே? எங்கே? என்று தருமனோடு நாமும் சேர்ந்து தேடிக்கொண்டு இருக்கும் போது படகிலிருந்து குதித்து உணவுமூட்டைகளை அடுக்கிக்கொண்டு இருந்தேன் என்கின்றான் பீமன். விளையாட்டாய் புன்னகையாய் இருந்தாலும் எத்தனை பெரிய உண்மைக்குள் இருந்து பீமன் வெளிப்படுகின்றான். பொருள் மூலதனம்.

//முந்தையநாள் இரவுமுதலே ரதங்களும் குதிரைகளும் படகுகளில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. அவற்றுக்கான உணவுகளும் படைக்கலங்களும் கவசங்களும் சிறிய படகுகளும் என சேவகர்கள் கயிறுகட்டி மேலே தூக்கிக்கொண்டே இருந்தனர்//

மாவீரன் அலெக்ஸாண்டர் தனது தாய்நாட்டிற்கு திரும்பிக்கொண்டு இருக்கும்போது பாலைவனத்தில் தாகத்திற்கு தண்ணீர் கேட்கின்றான். நீண்ட நேரத்திற்கு பிறகே அவனுக்கு குறைந்த அளவு தண்ணீர் பழைய நைந்த தோல்பையில் இருந்து தரப்படுகின்றது.  

ஏன் காலதாமம் என்று கேட்கின்றான் அலெக்ஸாண்டர்.

யாரிடமும் தண்ணீர் இல்லை, கடைநிலை வீரன் ஒருவனிடம் மீதி இருந்த தண்ணீர் இதுதான் என்கிறனர். அப்படி என்றால் நம்மிடம் தண்ணீர் இல்லை, தாகத்தில் நிறையபேர் இருக்கின்றோம் என்றுதானே அர்த்தம் அதனால் இந்த தண்ணீரும் எனக்கு குடிக்கவேண்டாம் என்று கீழே கொட்டிவிடுகின்றான் என்று ஒரு கதை கேட்டதுண்டு. பொருள் மூலதனம் எத்தனை பெரியது போருக்கு.

உழைப்பு மூலதனம். வீரர்கள் உள்ளார்கள். யார் வெல்வார்கள் வெல்லும்போது பார்ப்போம்.

அஸ்தினபுரியின் மீது வைத்த பற்றின் காரணமாக பீஷ்மர் சத்தியவதியின் சாயல் என்றால், பதவியின்மீது வைத்த பற்றின் காரணமாக தருமன் குந்தியின் சாயல். அந்த சிறு படகுபயணத்தில்கூட தனக்கு ஒரு தூதனை அவன் வைத்து உள்ளான் என்று திரு.ஜெ காட்டுவதைப்பார்க்கும்போது தருமனின் முகத்தில் குந்தியைப் பார்த்தேன். அவன் ஒரு வேட்டிக்கட்டிய குந்தி.

பீஷ்மர் துரியோதனன் வந்துவணங்கியபோது குங்குமதிலகம் வைத்து வாழ்தினார். என்ன வாழ்த்தினார் என்பது மௌனமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் அர்ஜுனனை வாழ்தும்போது தான் யார் என்பதைக்காட்டிவிட்டார்.

//படகிலிருந்து துரியோதனனும் துச்சாதனனும் இறங்கி பலகைகள் கனத்து ஒலிக்க பீஷ்மரை அணுகி கால்களைத் தொட்டு வணங்கி ஆசிபெற அவர் அருகே நின்ற சேவகனின் தட்டிலிருந்து குங்குமத்தை எடுத்து அவர்களின் நெற்றியில் அணிவித்து வாழ்த்தினார்.
அர்ஜுனன் வணங்கியபோதுஇது உன் முதல்வெற்றிஎன்று சொல்லி பீஷ்மர் அவனுக்கு திலகமணிவித்தார்//

திருதராஷ்டிரன் அரசனாகவேண்டும் என்றும், அவன் கண்ணில்லாதவன் என்பதால் அவன்மீது அன்பு உடையவர் என்பதும் சரிதான் ஆனால் அவருக்குள் இருக்கும் அசையா அஸ்தினபுர சிம்மாசனம் என்ற கனவுக்காக அவர் அகம் அர்ஜுனன் சொல்வது போல  திருட்டுத்தனம்தான் செய்கின்றதோ?

//“திருட்டுத்தனம் செய்தால் அதை துல்லியமாகவே செய்யவேண்டும் என்று பிதாமகர் காட்டுகிறார்என்றான்//

எனக்கும் இந்த உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இருக்கும் பீமனின் அகம் பிடித்திருக்கிறது. ஒரு ஞானிபோல் துயிலும் அவனை விழிவிரித்துப் பார்க்கின்றேன்.  
தருமன் இங்கு ஒரு எளிய அகம் படைத்த மனிதனாக காட்டப்படுகின்றான். ஒரு அகிம்சைதந்தைபோல, ஒரு பேதை தாய்போல, ஒரு குஞ்சியை அடைகாக்கும்கோழிபோல அந்த எளிமைதான் அவனுக்கு பாறைகளை உடைக்கும் வல்லமை வேர்களாகின்றதோ?

//அர்ஜுனன் புன்னகையுடன்அஞ்சுகிறீர்களா மூத்தவரே?” என்றான். “ஆம், அஞ்சுகிறேன். என் இளையோர் இப்போரில் இருப்பதனால்என்று சொல்லி தருமன் அவன் விழிகளை நோக்கினான். “அதில் எனக்கு நாணமும் இல்லை. என் உயிருக்காக எப்போதும் நான் அஞ்சியதில்லை. வேண்டுமென்றால் என் விழிகளை நோக்கி அதை எவரும் அறியலாம். என் இளையோர் என்னிடம் என் தந்தையால் அளிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவருக்கு தீங்கு நிகழ்வதைக்கூட என்னால் ஏற்கமுடியாது. அந்தத் தீங்கு நிகழ்வதற்குப்பதில் என் மேல் குருவின் தீச்சொல் விழுமென்றால், அதன் பொருட்டு நான் பழிகொண்டு பாவத்தில் உழல்வேன் என்றால் அதையே நான் தேர்ந்தெடுப்பேன்.”//

எளிமையில், சுயநலத்தில், கருணையில் எழும் தியாகம். தேய்ந்து தேய்ந்து அழிந்துபோகும் அந்த நிலா தனது சிறு தோற்றத்தில் உச்சியில் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. தருமம் எத்தனை சிறுமைப்பட்டாலும், சிறியதாக இருந்தாலும் அதன் தருமத்தை உணர்ந்துவிடுகின்றது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.