Sunday, January 11, 2015

இனிய பறவைகள் இரண்டு


இனிய ஜெயம்,

இதுவரயிலான உங்கள் வர்ணனைகளில் உச்சம்  இன்றைய திரௌபதியின் அணி புனைதல். பிருஷதி யின்  நிலையழிவு என்ன சொல்ல?  அவளிடம்  இப்போது என்ன இல்லையோ அவற்றால் ஆனவள் அல்லவா திரௌபதி. 

திரௌபதியை அவள் நிறை நிலையில் பார்க்க விழைவது எங்கெங்கோ அழைத்து செல்லும் உளவியல் நுட்பம். அந்த குளியல் தொட்டியில் குருதி வண்ண நீரில் அளையும் திரௌபதி, கருவில் இருந்து வந்ததும் குருதி உலராத குழவியாக கையில் ஏந்திய திரௌபதியின் சித்திரத்துடன் பிருஷதி மனதில் இணைவது,  மேலும் நுட்பம்.

அவளை 'பார்க்கும்' விழைவை ப்ருஷதி வெளியிட்டதும். திரௌபதி வாயில் நீரள்ளி உமிழ்ந்து  கேக்கலி காட்டுவது, அழகு அழகு திரௌபதி பேரழகு.

இனிய ஜெயம், வெண் முரசில்  வரும் ஸ்தனங்களின் சித்திரங்கள் மட்டுமே தன்னளவில் மிக மிக தனித்துவமானது. முதிரா இள முலைகள், துவங்கி வறு முலைகள் வரை வித விதமான ஸ்தனங்களின் வர்ணனை.

அவை மனதிற்குள் எழுப்பும் உணர்வு நிலை அலாதியானது. இதுவரை நான் அறியாத உவகை நிலை ஒன்றினில் என்னை ஆழ்த்துகிறது.  முலைகளை வர்ணிக்கையில் அதன் உணர்வு நிலைகளில் தான் எத்தனை பண்பு பேதம்.

நீலத்தில் ராதையின் தாய் ராதை திருமணத்துக்கு தயாராகையில் நினைக்கிறாள், ''அவள் குழந்தையாக பால் அருந்துகையில், அவள் மொக்கு உதடுகள் தனது முலைக்கண்ணில் விட்டு சென்ற ஈரத் தடம் இன்னம் மாறாதது போல இருக்கிறது''. 

எத்தனை முலைகள் தாபத்தில் விம்மும் முலைகள், கருணையில் ஆழ்த்தும் முலைகள், தாய்மையில் ததும்பும் முலைகள். அவற்றின் வர்ணனைகள் வழியே அவை சுட்டும் உணர்வு நிலை  துல்லியமாக அகத்தில் சேகரமாகிறது.

இந்த வர்ணனைகளை ஒரு வாசக மனம் கலாச்சார கவசம் கொண்டு தடுதாட்கொண்டாலோ, அல்லது விவாதிக்காமல்   ரகசியமாக ரசித்தாலோ இழப்புகள் பெரிது.

குறிப்பாக இன்றைய வர்ணனை. ஒரு முறை ஸ்தபதி  ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  தமிழக சிலைகளில் பெண் எனும் படிமம் எவ்வாறு வடிக்கப் படுகிறது என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார்.  பெண் சிலைகளில் ஸ்தனங்கள் எவ்வாறு வடிக்கப் படுகிறது,தத்ரூப சிலைகளில் ஸ்தனங்களின்  நிலைகள், செவ்வியல் சிலைகளில் ஸ்தனங்களின் நிலைகள்  இவை குறித்து சொன்னார், முலை வடிவில் மூன்று நிலைகளே ஆதாராம்.ரூப வடிவு  குமிழ் வடிவு, ததும்பும் நீர் சொட்டு வடிவு.  தத்ரூப ஸ்தானங்களுக்கு சில வட நாட்டு படிமைகளை உதாரணம் சொன்னார். குமிழ் வடிவுக்கு சோழர் கால செப்புத் திருமேனிகளை உதாரணம் சொன்னார். நீர்த் துளி வடிவுக்கு பல்லவர் கால சிலைகளை சொன்னார். மூன்றையும் கண்டிருக்கிறேன்  என் நோக்கில் பல்லவர் கைக்கொண்ட துளி வடிவே சிறப்பு. யதார்த்தமும் கலையும் சமன்வயம் கண்ட வடிவம் அதுவே என்பேன்.

இங்கே திரௌபதியின் ஸ்தனங்கள் ததும்பும் துளிகள் என இவற்றுடனே இணை சொல்லப் படுகிறது. யதார்த்தமும் கலையும் சமன்வயம் கொண்ட கலவை. 

காமமும் தாய்மையும் சமன்வயம் கொண்ட கலவை. இயல்பில் பெண் ஸ்தனங்கள் இடதும் வலதும் சமமற்றவை அல்லவா?  த்ரௌபத்தியின்தோள்கள்  அங்க லட்சணம் , அகம், காமம் தாய்மை  இவற்றின் சமன் வயமே  அவளது ஸ்தனங்கள் வழியே வெளிப் படுகிறது.

சொல்வதில் வெட்கம் என்ன  திரௌபதி உடலில் நீர் வழிந்த தடமெல்லாம் பூத்த வர்ணனைகளை அகம் தீ ஆளும் வனம் என உண்டு செரித்தது.

இறுதியில் ப்ருஷிதியின் பதட்டம் புலித்தே விடுகிறது. பூர்ணாலங்கார பூஷிதையாக  திரௌபதி பூக்கையில் அவளது பார்வையில் ப்ருஷிதை ஒரு 'இன்மை'மட்டுமே.

குருதியில் குளித்து எழும் இள முலைகள். அள்ளிப் பற்றத் தவிக்கும் அழகும், தாள இயலா குரூரமும் இத்தனை சமமா? திரௌபதியின் கூர் முலைகள் போல.இனிய ஜெயம்  உங்கள் கலையில் நீங்கள் தொட்ட உச்சங்களில் ஒன்று இன்றைய அத்யாயம்