Tuesday, January 13, 2015

ஐந்து கிளிகள்




இனிய ஜெயம்,

எதிர்பார்த்த ஒன்று, எதிர்பார்த்த தருணத்தில், எதிர்பாராவண்ணம் நிகழ்வதே, அது தரும் தத்தளிப்பே, இன்றைய அத்யாத்தின் உணர்வு நிலை.

தர்மன் சொல்வது போல, அரசு அரியணை அனைத்தும் பின் வாங்கி, வித்தை மனிதர்களை வெல்லும் தருணம். அனைவரும் எழுந்து கூத்தாட வேண்டிய தருணம்.

பார்த்தனின் புன்னகை பரவிப் பற்றி சிந்தூரம் புன்னகைக்கும் தருணம் உள்ளே விவரிக்கவே இயலா வித வித உணர்சிகள்.  கோவிலில் கர்ணனை காண்கையில் த்ரௌபதிக்குள் நிகழ்ந்தது இப்போது எங்கே?  பலி கொள்ள மட்டுமே மானுடம் என்பதற்கு மேல் எதுவும் இல்லை என கற்சிலை என அமர்ந்திருக்கும் திரௌபதி.  எத்தகைய ஆண்மகனும் இப்படி அமர்ந்திருக்கும் பெண் முன்னே தொற்று துவள மட்டுமே முடியும். உடைக்கவே முடியாத அந்த பெண்மை எனும் கவசம் கண்டே கர்ணன் சினம் கொள்கிறான்.  கேசினி  எனும் மாயக் கிளி  கர்ணனின் குறிக்கு தப்புகிறது.

சினம் சினம் .கர்ணனின் உடலில் பரவி, கிந்தூரத்தைப் பற்றி, அதன்  நாணை அதிர வைத்து விலகி மறைகிறது. எத்தனை உள மயக்கு தருணங்கள் கர்ணனுக்கு.  வண்டென துளைப்பது, த்ரௌபதியா அல்லது குரு சாபமா?

குந்தி தன் சுயம்வரத்தில் கம்சனை நிராகரித்த காரணமே திரௌபதி கர்ணனை நிராகரிக்கும் காரணம். எது எவ்வாறாகிலும் கர்ணனின் தோல்வியை மனம் ஒப்பவில்லை.

கிந்தூரத்தை கர்ணன் தலைக்கு மேல் உயர்த்துகையில் அர்ஜுனன் ஒளிரும் கவச குண்டலங்களை காணுகையில்  மனம் பூரிப்பில் விம்மி  கர்ணன் கர்ணன் என அரற்றியது. அர்ஜுனன் பீமன் வசம் இதன் பிறகே சொல்கிரான் . வில்லுக்கானவன் அவன் அவனே ஜெயிக்க வேண்டும். வில்லிர்க்கோர் விஜயன் அப்படித்தான் சொல்வான்.

கர்ணன் தான் எத்தகையவன் என்ற போதம் உள்ளவரை. அந்தப் புன்னகையை அவனால் அறிய இயலவில்லை. விதுரன் தன் ஆளுமை உடைகையில் கண்டடைவது போல, கர்ணனும் தன் ஆளுமை உடைகையில் கண்ணனின் புன்னகையை கண்டடைகிறான்.

இங்கே கண்ணனுக்கும் அர்ஜுனனுக்குமான நட்பு எத்தனை அந்தரங்கமானது என்றொரு சித்திரம் வருகிறது.  ஆம் கிருஷ்ணனின் முகத்தில் கண்ட அதே புன்னகை தான் கர்ணன் வில்லேந்துமுன் அர்ஜுனன் முகத்தில் கண்டது.

அந்தப் புன்னகை அர்ஜுனனின் அகமும், கிருஷ்ணனின் அகமும் எந்த அளவு பிணைந்த ஒன்று என்பதன் ஸ்தூலம். ஆக இந்தப் புள்ளியில் கர்ணனுக்கு அர்ஜுனனின் புனகையும் அன்னையின் கனிவென குளிர்ந்த புன்னகையே.

கடலூர் சீனு