Tuesday, September 4, 2018

வெண்முரசின் தரிசனம்- மதுசூதனன் சம்பத்




ஆசானாகவும் கதைசொல்லும் அன்னையாகவும் இருப்பவர்க்கு வணக்கம். நம்முடன் விவாதித்து நமக்கு கற்பிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

சென்னை ஐஐடி வளாகத்தில் அப்பளக்குளம் என்றொரு சிறிய ஏரி. அதன் இயற்பெயர் அப்பையக்குளம். பதினாறாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற அறிஞர் அப்பைய தீட்சிதர் அங்கு வந்து ஜலகண்டேஸ்வரனை வழிபட்டதாக சொல்கிறார்கள். அவர் எழுதிய பாடல் ஒன்று:

உன் சிரத்தில் உள்ளன பாயும் கங்கையும் தண்நிலவும்
உன் கரத்திலும் காலிலும் வழுக்கும் குளிர் நாகங்கள்
உன் இடப்புறத்தில் பனிபொழிமலைமகளின் கருணையின் ஈரம்
உன்னுடல்முழுதும் சாந்தியிருக்கும் சந்தனம்
பொன்னம்பலத்தோனே !
உன்னால் இக்குளிரை எப்படித் தாங்கவியலும்
தளர்ந்து கொதிக்கும் என் சித்தத்தில்
என்றும் இருக்காவிடில் ?

கேள்விகளால் அறிஞனின் சித்தம் வெந்து போகிறது. அனல்தூணாக நிற்பவனையே வெள்ளிப்பனிக்கட்டியாக நினைத்து வேண்டுகிறான்.

வெண்முரசு முழுதிலும் இப்படி கொதிக்கும் சித்தங்கள் கொண்ட பாத்திரங்கள். அவர்கள் அறமும் விழைவும் படைப்பும் அழிவும் சோர்வும் சக்தியும் என்று ஊஞ்சல் ஆடிக்கொண்டேயிருக்கிறார்கள். மாபெரும் கதாசிரியரான வியாசரும் தர்மதேவனான யமனும் கூட இந்தச் சுழலில் உள்ளவரே.

யமனும் வியாசனும் திரௌபதியும் கர்ணனும் அர்ஜுனனும் அடையக்கூடிய  அறக்குழப்பங்களும், அவற்றுக்கான விடை என்ன என்பதும் தத்துவ விளக்கங்களை நோக்கி நம்மை செலுத்தலாம். கடவுளின் பாடலின் எனப்படும் பகவத் கீதைக்கு மட்டுமே ஐம்பதுக்கும் மேல் புகழ்பெற்ற தத்துவ உரைகள் – பாஷ்யங்கள்- உள்ளன . சங்கரர் ராமானுஜர் முதல் சித்பவானந்தர் அரவிந்தர் வரை பல உள்ளன. நம்மில் அவரவர்க்கான விடைகள் அவற்றுள் கிடைக்கலாம்.

ஆனால் புனைவிலக்கியம் இந்தக் களத்தை தேர்ந்தெடுக்கும்போது வாசகனுக்கு இன்னொரு வழி திறக்கிறது. நேரடி தத்துவத்தால் எளிதில் சொல்லமுடியாதவற்றையும் அறிந்துகொள்ளமுடியாதவற்றையும் இலக்கியமானது படிமங்கள் உருவகங்கள் தொன்மங்கள் மூலம், நாடகத்தனமான சந்தர்ப்பங்கள் மூலம் உருமாற்றி உருவேற்றி தருகிறது.

தத்துவமும் கவிதையும் கதையும் முயங்கிவரும் அந்த இலக்கியவெளியில் இருந்து வாசகனுக்கு தரிசனங்கள் கடத்தப்படுகின்றன. மொழி என்ற ஊடகம் மூலம் உணர்வுக்கும் உள்ளுணர்வுக்கும் கற்பனைக்கும் கனவுக்கும் இலக்கியம் பயணிக்கிறது. அங்கு வாசகன் அடையும் தரிசனம் என்பது அவனுக்கேயானது.

மனித மொழி என்னும் பிரவாகத்தில் பல ஆயிரம் வருடத்துக் உள்ளுறைக்கனவு படிந்துள்ளது. அதிலும் ஒரு குறிப்பிட்ட மரபு அறுபடாமல் இருக்கும்போது அதில் உள்ள படிமங்கள் ஆழம் கொள்கின்றன. அந்த மரபு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் புதுமையை பெற்றுக்கொள்ளும்போது அந்தப் படிமவெளி அகலமாகிறது, மேலும் ஆழமாகிறது.

அந்தவிதத்தில் வாசகர்களான நாம் நல்வாய்ப்பு பெற்றவர்கள். தமிழ் பாரதம் உலகம் என்று நமது மரபு பரவலாக வேர்கொண்டுள்ளது. இன்று நமது மொழியிலும் சிந்தையிலும் உள்ள படிமங்கள் அடர்த்தியும் செறிவும் கொண்டவை.

அதே காரணத்தால் இங்கு படைப்புத்தொழில் செய்பவர்களின் பாடு சற்று கடினமானது. மரபு சொல்லிச்சலித்தவற்றில் அவர்கள் தினமும் புதுமையை கண்டடைய வேண்டியுள்ளது. அந்த மொழியையும் படிமவெளியையும்  விஸ்தாரமாக்க  குன்றாத படைப்பூக்கத்துடனும் வீரியத்துடனும் செயல்பட வேண்டியுள்ளது.

தவிர, நாவல் என்ற சொல்லுக்கே புதுமை என்றுதான் பொருள், அது வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை என்பதை கோருகிறது. அதன் வடிவம் மூலமாகவே தரிசனத்தை உருவாக்கச்சொல்லி அறைகூவல் விடுக்கிறது.

இலக்கியவாதி அந்தச் சவாலை எப்படி எதிர்கொள்கிறான், அவன் மனம் எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்பது ஒரு அறிவுத்துறை. இலக்கியம் நிகழ்ந்தபின் அதில் வடிவத்தையும் தரிசனத்தையும் பார்ப்பது விமர்சகனும் வாசகனும் செய்வது.
இந்திய இலக்கிய மரபிலும் உலக இலக்கிய மரபிலும் வெண்முரசு நிகழ்த்தும் வடிவப் பாய்ச்சல்களை அடையாளம் காணும்போது நாம் அந்த விமர்சகவெளியில் ஒரு குறிப்பை எழுதிவைக்கிறோம்.
ஆனால் மெய்யியல் மரபுகளில் வெண்முரசு நிகழ்த்தும் புதுமையை அடையாளம் காணும்பொழுது நமக்கேயான தரிசனங்களை நோக்கி ஒரு அடி எடுத்துவைக்கிறோம்.

இந்த நாவல் ஐந்து வருடங்களாக எழுதப்பட்டு வருகிறது. இதுவரை  வெண்முரசில் ஈடுபட்டு தங்கள் கண்டடைதல்களை எழுதும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் கடிதங்கள் பதிவாகியுள்ளன. அவற்றை தொகுத்தும் விரித்தும் சிலவற்றை பார்க்கலாம்.

நான் ஒருமுறை மிக கனரக ஹெலிகாப்டர் ஒன்று சிறிய மைதானத்திலிருந்து எழுவதை பார்த்தேன். முதலில் இருபதடி எழும்பி மெதுவாக வட்டமடித்தது. மேலும் வேகம் கொண்டு சற்று எழும்பி இன்னும் விரிவான வட்டமடித்தது. ஒவ்வொரு தளத்திலும் வட்டத்தை விரித்துக்கொண்டு வேகம் கூட்டி மிக உயரத்தில் சமநிலையடைந்து பறந்து சென்றது.

முதற்கனல் முதல் செந்நா வேங்கை வரையான பயணத்தை இந்த ஹெலிகாப்டரின் வட்டத்துடன் ஒப்பிடலாம். எஞ்சும் விஷம் என்றும் செயலில் அறம் என்றும் அதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பேசப்படுவனவற்றின் ஆழம் மிகுந்துகொண்டே செல்கிறது. முன்பு கற்பனைக்கு விடப்பட்டவை இப்போது சொல்லப்படுகின்றன, அவற்றில் நுண்மையானவை விரிக்கப்படுகின்றன, புதிய நுண்மைகளும் மௌனங்களும் கண்டுகொள்ளப்படுகின்றன.

ஒரு இடத்தில் இந்த சுழற்சி என்பது வெறும் வடிவம் மட்டுமல்ல, அது ஒரு தரிசனம் என்று தெரியவருகிறது. விஷ்ணுபுரம் நாவல் போல வண்ணக்கடலிலும் அஸ்தினபுரியும் மகோதயபுரமும் பிறந்து பிறந்து அழிகின்றன. அவற்றில் மனிதர்கள் பிறந்து உணர்ந்து மறைகிறார்கள். பிரபஞ்சம் என்ற macrocosm நகரம் என்றும் உடல் என்றும் microcosm ஆக சித்தரிக்கப்படுகிறது.

நமது சிந்தனை மரபில் ஏற்பட்ட அகழி என்று ஜெயமோகன் சிலவற்றை சொல்லுவார். நாகங்கள் பற்றிய உணர்வையும் அவ்வாறு சொல்லலாம். நவீன உலகில் நாகங்கள் நேரடியாகவே தீமையின் பாவத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன.

வெண்முரசில் விழைவு, கசப்பு, தயக்கம், கோபம் என்று பலவிதங்களில் நாகங்கள் வருகின்றன. சுருங்கிக் குமையும் வஞ்சம் மண்ணுள்ளிப் பாம்பாகவும் மாபெரும் சாம்ராஜ்யங்களை அசைத்து வீழ்த்தும் வஞ்சம் கொண்ட மாநாகமாகவும் அவை மனிதரை ஆள்கின்றன. கவிஞருள் கற்பனையாகவும் மகளிருள் காமமாகவும் அவை இச்சா சக்தியாய் வாழ்கின்றன.

இந்த வாழ்க்கை நன்மை தீமை என்ற எளிய விளக்கங்களுக்குள் அடைவதில்லை என்று நம் மரபு உணர்ந்தது. பாம்பின் தலை மேல் ஆடுபவனாய் கிருஷ்ணனை சித்தரித்தது. காலம் வெளி என்ற மாபெரும் நாகங்கள் நம் தெய்வங்களின் காலடியில் சுற்றிக்கிடப்பதாய் சொல்லியது.

வெண்முரசு நம்மை மீண்டும் அந்த அறிநிலைக்கு கொண்டுசெல்கிறது. இமைக்கணக் காட்டில் நாகங்களால் பிணைக்கப்படும் பீஷ்மரும் நாகங்களை கனவு காணும் தமயந்தியும் நமது பிம்பங்களே. இந்த இச்சையே பிரபஞ்சத்தை மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கிறது. அந்த ஒரு துளி எஞ்சியாக வேண்டும் என்று வியாசர் ஜனமேஜயன் யாகத்தில் இறுதி நாகத்தை பிழைக்க வைக்கிறார்.

இன்று transgressive fiction என்று சொல்கிறார்கள். கர்ணனின் அரசி ஒரு ஆணிலியுடன் உடைகளைக் களைந்து சென்று ஆற்றில் விளையாடுவதை விட transgression இருக்கமுடியுமா என்ன ? அந்த நாகநஞ்சு அவளில் எஞ்சுவது கிருஷ்ணனுக்கு தெரியும். உவகை நிலைகொள்க என்று ஆசீர்வதிக்கிறான் அவன்.