Tuesday, October 7, 2014

ஆதாரதெய்வங்கள் மூன்று





அன்புள்ள ஜெ சார்,

நான் வண்ணக்கடல் வாசிக்கும்போது பூம்புகாரிலேயே சாங்கியம் வந்தபோது ஆச்சரியப்பட்டேன். எந்த அமைப்பு அதில் வரும் என்று எனக்குள்ளாகவே கணக்குப்போட்டேன். சாங்கியம். அப்படியென்றால் அடுத்து யோகம் வருமென்று எண்ணினேன். ஆனால் வண்ணக்கடல் சிந்தனைகளை தனியாக ஒரு வரிசையிலே கொண்டு போவதைக் கண்டேன். சாங்கியத்துக்கு மிகவும் பக்கத்தில் இருந்தது சைவம்.

அதேபோல வைசேஷிகத்துக்கு மிகவும் பக்கத்தில் சூரிய வழிபாடு இருப்பதனையும் பார்த்தேன். வண்ணக்கடலில் சொல்லியிருக்கும் தத்துவஞான மரபை அதன் வரிசையை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பது ஒரு பெரிய விஷயமாக இருக்கும் என்று தோன்றியது. ஆழமான ஒரு விமர்சனப்பார்வை வரமுடியும்

அதோடு இப்போது இந்தத் தத்துவங்களுக்கு அடிப்படைகளைச் சொல்லிவிட்டீர்கள். பிறகு இவையெல்லாம் விரியும் என்று எதிர்பார்க்கலாம்.

முக்கியமாக சாங்கியத்திலிருந்து ஆரம்பித்து வேதாந்தம் வரைபோவீர்க்ள் என்றும் ஆகவே அஸ்தினபுரியில் கதைமுடியும் என்றும் நினைத்தேன்.அங்கே ஜைமினி போல யாராவது வந்து வேதாந்த்த்தை முன்வைப்பார்கள் என்று தோன்றியது, ஆனால் நாவல் நேராகச் சென்று பூமி வழிபாடு மழைவழிபாடு அன்னை வழிபாடு ஆகியவற்ற்றில் முடிகிறது

ப்ருத்வி விருஷ்டி மாதா ஆகிய மூன்றையுமே ஒன்றாகக் கலந்துகொடுத்த அந்த அத்தியாயத்தை ஒரு மிகச்சிறப்பான கிளாஸிக்கல் முடிவு என்று சொல்வேன். அது ஒரு பெரிய கனவு போல இருக்கிறது. அந்த மூன்று ஆதார தெய்வங்களின் மடியில் இருந்து அசுரர்கள் புற்றீசல் போல எழுந்து வருவதற்குச் சமானமான ஒரு காட்சியை இனி நீங்களே கூட எழுதமுடியுமா என்று தெரியவில்லை

சாரதி

மழை இசையும் மழை ஓவியமும் -மழைப்பாடல் பற்றி கேசவமணி