Sunday, December 21, 2014

பிரயாகை-53-அறம் கற்போன்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

மனிதன் எதை கற்றுக்கொள்கின்றான் என்று வாழ்க்கைப்பார்க்கிறது. அவன் கற்றுக்கொண்டது சரிதானா என்று ஒரு சோதனை வைக்கிறது. சோதனையில் தன்னை நிருபிக்கவேண்டிய கடமை மனிதனுக்கு வந்துவிடுகின்றது.

வென்றுதான் ஆகவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. வென்றால் வாழ்க்கை வசப்படும் இல்லை என்றால் பிழைத்து இருந்தால் இன்னும் கற்றுக்கொள் என்று வாழ்க்கை தள்ளி நிற்கும்.

சிலர்வாழ்க்கையில் இதுவா? அதுவா என்ற கிளைவழியே இருப்பது இல்லை. எல்லாம் புதைகுழி. தாண்டவேண்டும் இல்லை என்றால் மூழ்கி அழியவேண்டும்.

கர்ணனை இழந்தபின்பு குந்தி கற்றுக்கொண்டது அச்சத்தோடுகூடிய கண்காணிப்பு. அந்த அச்சமும் கண்காணிப்பும் இல்லை என்றால் அவள் வாரணவத தீவிபத்தில் தனது பிள்ளைகளை இழந்து இறந்திருப்பாள்.   

எதையும் கூர்ந்து நோக்கி, அதன் மூலமே வாழ்கையை படிப்பவன் அர்ஜுனன். யாரோ தங்களை பின்தொடர்கிறார்கள் என்பதை அவன் அறியவில்லை என்றால் இடும்பியால் பாண்டவர்கள் அழிந்து இருப்பார்கள்.

அறநூல்படி அறம் கடைப்பிடிப்பேன் என்று சொன்ன தருமன் மூத்தோர் படையலில் அமைதியாக இருந்து இருந்தால் பெரிய தந்தை திருதராஷ்டிரனை அவமதித்து அறம் இழந்தவனாய் ஆகியிருப்பான். அவன் சாகாமல் தப்பித்த ஒரு கணம் அது. இல்லை என்றால் வாழ்நாள் முழுதும் அதற்கும்சேர்த்து அவன் அழவேண்டி வரும், சிரிப்பையே மறந்து இருப்பான்.  இதுவரை புன்னகைக்குமேல் சிரிப்பு ஒன்று இருப்பதை அறியாத தருமன் இன்று வெடித்து சிரிக்கிறான்.  

பெரும் பலம் கொண்ட பீமன் தனது பலத்திற்கு பெரும்சோதனை வரும் பெரும் களத்தில் நிற்கிறான். அவன் பெரும்பலம் வென்றால் வாழலாம் இல்லை என்றால் அழியவேண்டியதுதான். அர்ஜுனன் வில்லும் அம்பும் இழந்து நிராயுதபாணியாக நிற்கின்றான்.

பெரும் காதலுக்கும் பழங்குடிகளுக்கும் இடையில் இடும்பி நிற்கிறாள். காதல் வாழுமா? அவள் குலமுறை வாழுமா?

வளர்த்த தங்கையா? வாழும் குடியா? என்ற இக்கட்டில் இடும்பன் நிற்கிறான். தங்கையின் உயிரை எடுப்பதா? தன் உயிரைக்கொடுப்பதா?

வாழ்க்கை ஒரு நிமிடத்தில் போர்க்களமாகிவிடுகின்றது. இதுவரைக்கற்றதை சோதித்துப்பார் என்கிறது. பேச்சு, சிரிப்பு, அறிவு, ஆற்றல், அன்பு, உயிர் அனைத்தும் கைவிட்டுப்போகுமா? கைக்கூடுமா என்ற நிலையில் வாழ்க்கை வாழ்வோனை போர்க்களத்தில் நிறுத்துகிறது. 

கதையை தள்ளிவிட்டாலும் அந்த கதைக்குள் நிற்கும் வாழ்க்கை நம்மை நோக்கி சூழ்ந்துக்கொள்கிறது.

//கொல்லுங்கள்!” என்று இடும்பன் கூவியதும் அத்தனை இடும்பர்இடும்பிகளும் கைகளைத் தூக்கி பேரொலி எழுப்பியபடிஅவர்களைச் சூழ்ந்தனர்//.

வாழ்க்கையின் இந்த இக்கட்டில் நிற்கும்போது தருமன் மனநிலையும், குந்தியின் மனநிலையும் தங்கள் சுயத்தைக்காட்டுகின்றது.

தருமன் மனநிலை //இங்கே இவர்கள் சமையலறை எதையும்வைத்திருப்பதாகத் தெரியவில்லை இளையவனேநீ தோற்றால்நம்மை பச்சையாகவா உண்பார்கள்?” என்றான் தருமன்பீமன்அங்கே மலைச்சரிவில் அடுமனைகளை வைத்திருக்கிறார்களாம்.இவர்கள் ஊனுணவை அங்குள்ள பெரிய கற்கள் மேல் போட்டுகற்களைச் சுற்றி தீவளர்க்கிறார்கள்கல்லின் சீரான வெம்மையில்ஊன் வேகிறது” என்றான். “இவர்கள் கருகியதை உண்பதில்லை.”தருமன் “சிறந்த முறைஅரசகுடியினருக்கு ஏற்றது” என்றுசொல்லி சிரித்தான்//

குந்தியின் மனநிலை //குந்தி “வாயை மூடுஎன்ன கீழ்மைப்பேச்சு?” என்று சினந்தாள். “அன்னை அஞ்சுகிறார்கள்” என்றான்நகுலன். “இந்த மூடர்கள் பேசுவது என் மைந்தர்களைப்பற்றி…”என்றாள் குந்தி//

தம்பியின் தோள்வலிமையில் அசையா நம்பிக்கை வைக்கும் அண்ணன் ஒரு சக்கரவர்த்தியாவதும், பிள்ளைபாசத்தில் உருகும் ஒரு பேரரசி அன்னையாவதும்  உண்மையில் அந்த இடும்பவனம் செய்யும் ரசவாதம்தான்.

சோதனையில் மாட்டும்வரை அச்சத்தடனும், தவிப்புடனும் இருக்கும் அறம் கற்பவன், சோதனைக்குள் மாட்டிக்கொண்டதும் எப்படி சகஜமாக இருக்கிறான்? அவனுக்கு எப்படி அந்த தைரியம் வருகின்றது?. அதுதான் அறத்தின் வலிமையோ?  அறம் பற்றிக்கொள்ளும் மனிதன் மற்ற மனிதர்களில் இருந்து முற்றும் மாறுபட்டவன்தான். விசித்திரமானவன்தான். ஒரு குரங்குகூட கேளிசெய்யும் அளவுக்கு வேடிக்கை மனிதன்தான். அறம் படுத்தும்பாடா அது? 

///சூர்ணன் அதை ஏற்றுக்கொண்டு இறங்கி இரு காலில் நின்று தருமனை நோக்கி உதட்டைக் குவித்து நீட்டி “வேடிக்கையான மனிதன்” என்று சொல்லிவிட்டு ஓடிச்சென்று மரத்தில் ஏறிக்கொண்டான். பிறகு குதித்து திரும்பி வந்து நின்ற இடத்தில் சில துளிகள் சிறுநீரை விட்டுவிட்டு மீண்டும் தருமனை நோக்கி கைநீட்டி கண்களைச் சிமிட்டி “விசித்திரமானவன்” என்று சொல்லிவிட்டு திரும்பி மரத்தில் ஏறி கிளைகளுக்குள் சென்று அமர்ந்தான்//


நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்