Monday, December 15, 2014

மாபெரும் சதுரங்கம்


[டினம்பூர் என்னும் இடத்தில் உள்ள ராட்சத சதுரங்கக் காய்கள்]

இனிய ஜெயம்,

யுத்த நெறிகள்  மீறப்படுகிறது, என்று விதுரரும்   யுத்த  விழுமியங்கள் தங்கள் எல்லையை மாற்றி அமைக்க்ன்றன என்று பீஷ்மரும்  விவாதிக்கும் சித்திரம்  இனி  பாரதப் போர் முடியும் வரை  வெவ்வேறு  வகையில் வெவ்வேறு ஆளுமைகளிடையே நிகழும் என நினைக்கிறேன்.

இத்தகு விவாதங்கள்தான் வளர்ந்து இன்று  போரில் அணு ஆயுதம் ரசாயன ஆயுதம் பயன்படுத்தக் கூடாது எனும் நெறி வரை வளர்ந்து வந்திருக்கிறது இல்லையா?

கிருஷ்ணனின் தூது குறித்த பீஷ்மரின் பார்வைக் கோணம்  அரண்மனைக்குள் நிகழ்ந்த மற்றொரு பிழையின் இருப்பை உறுதி செய்கிறது. அது விதுரர் அவரது முடிவுகளை உரையாடல் வழி இறுதி செய்துகொள்ளும் வண்ணம்  அங்கே ஒருவரும் இல்லை என்பதே. மேலும்  பீஷ்மர் கிருஷ்ணனைக் காட்டிலும் விதுரரின் மனதின் நுட்பமான புள்ளி ஒன்றை தொட்டு விட்டார்,  ஆம் விதுரர்  மனதுக்குள் அச்தினாபுரியை ஆட்சி செய்துகொண்டிருப்பது தான் தான் எனும் மனநிலையில் உள்ளார். அதனால் தான் பீஷ்மர் பேசி முடித்ததும் விதுரர் கால்கள் தளர்கிறார்.

துறைமுகம் குறித்த பீஷ்மரின்  அவதானம்  அற்ப்புதம். இன்று கடலூர் துறைமுகம்  சுனாமிக்கு பிறகு கைவிடப்பட்டதன்  பின்னணியும் இதுதான். கடலூர் துறைமுகம் இயற்க்கை துறைமுகம்.  உப்பனாறு கெடிலம் என இரு ஆறுகளின் கழிமுகத்தில் அமைந்தது. சுனாமி இந்த கழிமுகங்கள் நிலையை முற்றிலும் மாற்றி அமைத்து விட்டதால்   சரக்கு கப்பல்கள்  வேறு இடத்துக்கு  நிறுத்தம்  மாற்றப்பட்டு விட்டது.  அங்கிருத்து கோமுட்டி என்று அழைக்கப்படும் சிறிய படகுகள் வழியே சரக்கு இறக்கவும் ஏற்றவும் படுகிறது.   இவையும் சிறிய அளவுதான். துறைமுகம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைதான்.

திருஷ்யுத்தம்ணன்  குறித்து  துரோணர்  பேசுகையில்  விதி எனும் நியதி குறித்து யோசிக்காமல் இருக்க இயலவில்லை.  தனது அழிவுக்கான விதையை தானே தன் கையால் நட்டு வளர்ப்பது  என்ன வகையான விதியின் நியதி இது? 

கடலூர் சீனு